'Zoom' உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழர்: வேல்சாமி சங்கரலிங்கம் பேட்டி

'Zoom' உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழர்: வேல்சாமி சங்கரலிங்கம் பேட்டி
'Zoom' உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழர்: வேல்சாமி சங்கரலிங்கம் பேட்டி
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில், பூமியின் வெவ்வேறு பகுதியில் உள்ளவர்களையும் முகம் பார்த்து உரையாட செய்து வருகின்றன வீடியோ கம்யூனிகேஷன் அப்ளிகேஷன்கள். அதில் உலகளவில் பெரும்பாலான மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய அப்ளிகேஷன்களில் ஒன்றுதான் ‘Zoom video communication’. இந்த ஜூம் நிறுவனத்தில் தமிழரான வேல்சாமி சங்கரலிங்கம், ப்ராடக்ட் & இன்ஜினியரிங் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 

அவரிடம் பேசினோம்... 

>உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? பூர்வீகம், படிப்பு, வேலை, இந்தியா டூ அமெரிக்கா பயணம். 

நான் பிறந்தது விருதுநகர். பத்தாம் வகுப்பு வரை சொந்த ஊரான விருதுநகரில்தான் படித்தேன். எனது சகோதரிகள் விருதுநகரில்தான் உள்ளார்கள். மேல்நிலைப்பள்ளி படிப்பை ஏற்காட்டில் படித்தேன். பின்னர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்றேன். முதுநிலை படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். படித்து முடித்த பின்னர் இங்கு வேலையை தொடர்ந்து செய்து வருகிறேன். 

>ZOOM உடனான  பயணம் குறித்து சொல்லுங்கள்?

ஜூம் நிறுவனர் எரிக் எனது நண்பர். நான் தொடக்கத்தில் ஒரு சின்ன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். பின்னர் அந்த நிறுவனத்தை Webex வாங்கியது. அப்போது எனக்கு அறிமுகமானவர் எரிக். இருவரும் நண்பர்களானோம். அந்த நட்பு நாங்கள் வெவ்வேறு நிறுவனத்தில் பணியாற்றியபோதும் தொடர்ந்தது. எரிக் ஜூம் நிறுவனத்தை நிறுவினார். பின்னர் நான் ஜூம் உடன் பணியாற்ற முடியுமா என எரிக் கேட்க மறுக்க முடியாமல் இணைந்துவிட்டேன். 

>இந்த பேரிடர் காலத்தில் ஜூமின் பணி குறித்து சொல்லுங்கள்? மக்களை எமொஷனலாக எந்த அளவுக்கு ஜூம் கனெக்ட் செய்துள்ளது?

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் ஜூமை மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும். நான் ஜூமில் இணைந்தவுடன் அனைத்து வயதினரிடமிருந்தும் சில ஆலோசனைகள் எனக்கு வந்தன. 

கொரோனா பேரிடர் காரணமாக இதுவரை அலுவலகம் செல்லவில்லை. இருந்தாலும் ரிமோட்டடாக நான் சக ஊழியர்களுடன் இணைந்துள்ளேன். இதற்கு காரணம் இந்த தொழில்நுட்பம் என்பதை மறுக்க முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் பயன் கொடுக்கிறது. 

>ஜூம் மீட் தொடர்பாக, உங்களுக்கு வருகின்ற முக்கியமான எதிர்மறை கருத்துகள் என்னென்ன? அதை களைய என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

ஜூம் நிறுவனம் வியாபார நோக்கத்துடன் தொடங்கிய நிறுவனம். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இது ஆரம்ப காலத்தில் இயங்கி வந்தது. பின்னர் கொரோனா பேரிடர் காலமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ஒரு மூன்று மாத காலம் பாதுகாப்பு தொடர்பாக சில வேலைகளை செய்தோம். அது வெற்றியும் பெற்றது. 

தற்போது பெரும்பாலான பள்ளிகள் இந்த அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

>பிரைவசி விவகாரத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

பிரைவசி விவகாரத்தில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். அது எங்களது பில்லர்களில் ஒன்றாகவே கருதுகிறோம். குறிப்பாக ஒரு மீட்டிங்கை ரெக்கார்ட் செய்வது, அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ள எல்லோருக்கும் தெரியும் வகையில் செய்துள்ளோம். இப்படி பிரைவசி விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். 

>இந்தியாவுக்காக ஜூமின் எதிர்கால திட்டங்கள் என்ன? 

2019 வாக்கில் இந்தியாவில் ஜூம் அலுவலகத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்போல தொடங்கினோம். தொடர்ந்து 2020-இல் டெக்ஸ்ட் சென்டர் ஒன்று தொடங்கினோம். பெங்களூருவை மையமாக வைத்து ஆரம்பித்தோம். இருப்பினும் தற்போதைய அசாதாரண சூழல் காரணமாக ஊழியர்களை பணி செய்வது, வேலைக்கு புதிதாக ஆட்களை எடுப்பது என அனைத்தும் ரிமோட்டடாக தான் நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் இந்தியாவுடனான பங்களிப்பு மேலும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com