தம்மைத் தேடிவந்த பிரதமர் பதவியைத் தவிர்த்து, இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர் எனப் புகழப்படுப்படுவர், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ’கர்மவீரர்’ காமராஜர். ஒரு முதல்வராய் இருந்து, அவர் சேர்த்த சொத்துக்கள் வெறும் 60 ரூபாய் பணமும், 10 கதர் வேட்டி சட்டைகளும்தான். ஆனால், இன்றைய முதல்வர்களின் சொத்து மதிப்போ, கோடிகளில் இருக்கின்றது. அந்த வகையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) நடத்திய ஆய்வில்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து, 28 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என அது தெரிவித்துள்ளது.
இந்த 30 முதல்வர்களும் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாண பத்திரங்களை, ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது, ஏ.டி.ஆர்.
அதன்படி, இந்தப் பட்டியலில் சொத்து மதிப்பில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு ரூ.510 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார்.
அவருக்கு ரூ.163 கோடி சொத்துகள் உள்ளது. 3வது இடத்தில், ஒடிசாவின் நவீன் பட்நாயக் ரூ.63 கோடி சொத்துகளுடன் உள்ளார். 4வது இடத்தில் நாகலாந்து முதல்வர் ரூ.46 கோடி சொத்துக்களுடனும், 5வது இடத்தில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடனும் உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 6வது இடத்திலும் (ரூ.23 கோடி), சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 7வது இடத்திலும் (ரூ.23 கோடி), அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா 8வது இடத்திலும் (ரூ.17 கோடி), மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா 9வது இடத்திலும் (ரூ.14 கோடி), திரிபுரா முதல்வர் மாணிக் சகா 10வது இடத்திலும் (ரூ.13 கோடி) அடுத்தடுத்து உள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.8 கோடி சொத்துக்களுடன் 14வது இடத்தைப்பகிர்ந்துள்ளார்.
அதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துகளும், கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஹரியானா முதல்வர் மனோகர் லால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
ஆனால், இந்தப் பட்டியலில் வெறும் லட்சாதிபதியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார். அவரிடம், ரூ.15 லட்சத்திற்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெர்விக்கப்பட்டுள்ளது. இவரை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பாஜகவைச் சேர்ந்த 11 முதல்வர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர். அந்த வரிசையில் பார்த்தால், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.163 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் அசாம் முதல்வரும் (ரூ.17 கோடி), 3வது இடத்தில் திரிபுரா முதல்வரும் (ரூ.13 கோடி) உள்ளனர். கோவா முதல்வர் ரூ.9 கோடி சொத்துக்களுடனும், கர்நாடகா மற்றும் குஜராத் முதல்வர்கள் ரூ.8 கோடி சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களுடன் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், ஹரியானா ஆகிய பாஜக முதல்வர்கள் கடைசி 3 இடங்களில் உள்ளனர்.
மேலும், தற்போதுள்ள 30 முதல்வர்களில் 13 பேர் (43%) மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குற்ற வழக்குகள் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் என ஏடிஆர் தெரிவித்துள்ளது.
முதல்வர்கள் மட்டுமல்ல, அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள்.... ஏன் இன்றைய கவுன்சிலர்கள்கூட கோடிகளில் சொத்துக்கள் வைத்திருப்பது இயல்பான ஒன்றாக உள்ளது.