கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னேறி வந்தாலும், சாதி ரீதியிலான பாகுபாடு, பிரிவினையில் இருந்து இன்னும் இந்த மாநிலம் முன்னேறவில்லை என்பது கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இறையூரை அடுத்த வேங்கைவயல் பகுதியில் நடந்த வன்கொடுமையே கொடூர சாட்சியாக இருக்கிறது.
புதுக்கோட்டை முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள பகுதிதான் வேங்கைவயல். இந்த பகுதியில் வசித்து வரும் பட்டியலினத்தவர்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கொடூரர்கள் மனிதக்கழிவை கொட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை அறிந்திருக்காத அந்த பட்டியலினத்து மக்கள், அந்த தொட்டியில் இருந்து வந்த தண்ணீரை பருகியதால் வாந்தி, காய்ச்சல் என உபாதைகளுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சோதித்த போதுதான் நடந்தது இன்னது என தெரிய வந்திருக்கிறது. பின்னர் புகார் கொடுக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இறையூரில் நடக்கும் இரட்டை குவளை முறை, கோயிலுக்குள் பட்டியலினத்தவர்களை அனுமதிக்காதது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, கையோடு கோயிலுக்குள் அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர். அப்போது `தலித் மக்களை அனுமதிக்க முடியாது’ என எதிர்த்த சாமியாடி பெண் சிங்கம்மாள், அக்கோயில் பூசாரி மற்றும் இரட்டை குவளை முறையை பின்பற்றியவர் என அனைவரையும் வன்கொடுமைக்கு எதிரான வழக்கில் கைது செய்தனர்.
இந்த சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது. இருப்பினும் சாதிய ஆணவத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்த இழிவான செயலை செய்தவர்கள் யார் என்பது இதுநாள் வரை கண்டறியப்படவில்லை என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
இரட்டை குவளை முறையை தடுத்தது, கோயிலுக்குள் பட்டியலினத்தவர்களை அழைத்துச் சென்றது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் இதைக் காட்டிலும் மிக இழிவான செயலை செய்தவர்களை அரசு ஏன் இதுவரை கண்டறிந்து கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
விவகாரம் இப்படியாக இருக்க, மாற்று சமூகத்தினரால் வன்கொடுமையால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே போலீசார் கைது செய்து விசாரித்த கொடுமை நிகழ்ந்திருப்பதாக எவிடன்ஸ் கதிர் அமைப்பைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் மன வேதனையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. 15 வயது சிறுவன் உட்பட 8 பேரை விசாரணை என்ற பேரில் காவல்நிலையத்தில் வைத்து 3 நாட்களாக நள்ளிரவு 12 மணிவரை விசாரித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க விசாரணை செய்வது இதுவே முதல் முறை. அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் இருந்ததை வரைந்து காட்டச் சொல்லியும், நீங்களே மலத்தை கொட்டிவிட்டு பிறர் மீது பழி போடுகிறீர்களா? என்றெல்லாம் கேட்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட அனைத்து தலித் மக்களிடமும் வாக்குமூலம் பெற்று 70 புகார்கள் அனுப்பியிருக்கிறோம். இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மீது நம்பிக்கை இல்லை. நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்க வேண்டும்.” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோக, “நீங்கள் எல்லாம் நன்றாக இருங்கள். நான் செய்த பெரிய பாவமே தேர்தலில் உங்களுக்கு வாக்களித்ததுதான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திராவிட மாடலுக்கு குட் பை” என்றும் வின்சென்ட் ராஜ் தன்னுடைய உள்ளக்குமுறலை காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
இதேபோல மற்றொரு பதிவில், “மாவட்ட ஆட்சியர் முன்பு பட்டியலின மக்களை இழிவுபடுத்திய சாமியாடி பெண், இரட்டை குவளையை பின்பற்றிய டீக்கடைக்காரர் உள்ளிட்ட வன்கொடுமையை செய்தவர்களுக்கு 15 நாளில் ஜாமின் கிடைத்திருக்கிறது. திராவிட மாடல் செம்ம” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வின்சென்ட் ராஜ்.
முன்னதாக, குடிநீர் தொட்டியில் மலம் கொட்டியவர்களை கண்டறிவதற்காக 11 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி டி.ஐ.ஜி சரவணசுந்தர் தெரிவித்திருந்தார். அதேபோல “சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை. வழக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியாக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது” என்று ஆட்சியர் கவிதா ராமு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். மேலும், இறையூர் பகுதியில் சிசிடிவி கேமிராக்களை பொருத்துவதற்கான முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மனித சமூகம் கண்டிராத இந்த வன்கொடுமை இழிவு குறித்து பேசியிருக்கும் வேங்கைவயல் கிராமத்தினர், “நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இதே வேளையில் எங்களுக்கு கிடைத்தது மலம் கலந்த குடிநீர்தான்” என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.