‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று

‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று
‘எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ – திரு.வி.க நினைவுதினம் இன்று
Published on

விடுதலை போராட்ட வீரர், அரசியல் செயற்பாட்டாளர், தொழிற்சங்க பிதாமகன், தனித்தமிழ் இயக்க முன்னோடி, எழுத்தாளர், சொற்பொழிவாளர் என தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் நினைவுநாள் இன்று.

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் 1918 ஆம் ஆண்டு தொழிற்சங்கம் உருவாக வித்திட்டவர். காவலர்கள் மற்றும் அச்சக தொழிலாளர்களின் தொழிற்சங்க உருவாக்கத்திற்கு மூலக்காரணமாக இருந்தவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் அறிஞர் யாழ்ப்பாணம் நா.கதிரவேற் பிள்ளையிடம் தமிழ், மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் வடமொழி, பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்கள், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆன், ஜஸ்டிஸ் சதாசிவராவ் தொடர்பால் ஆங்கிலமும் கற்றார். சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் இவர். சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார், தமிழ்நாட்டின் காந்தி என்றும் அழைக்கப்பட்டவர்.

1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். திலகரின் விடுதலை கருத்துகளை உள்வாங்கி நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக ஆசிரியர் பணியில் இருந்து விலகினார். 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் திறம்பட  நடத்தினார். பின்னர் தேசபக்தன், திராவிடன்  பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்கும், தனித்தமிழ் இயக்கத்திற்கும், தொழிற்சங்க பணிகளுக்கும் மிகச்சிறந்த தொண்டாற்றியவர் திரு.வி.கல்யாணசுந்தரம்.

முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, தமிழ்நாட்டு செல்வம், தமிழ்க்கலை, கிறிஸ்துவின் அருள் வேட்டல் , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் வரலாறு, தேசபக்தாமிர்தம், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், சைவத்திறவு என பல்வேறு துறைகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் இவர் .

காந்தியின் வழியில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த திரு.வி.கவுக்கு செருப்பு அணியும் பழக்கம் இல்லை, வாழ்நாள் முழுதும் தூய்மையான கதராடையையே உடுத்திய அவர் தனது 70 வது வயதில் 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com