எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்?

எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்?
எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏன் அந்தப் பெயர்?
Published on

உலகின் உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்துக்கு இந்தப் பெயர் 1865ல் சூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல் கர்னல் சர் ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாக அந்தப் பெயர் சூட்டப்பட்டது. 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் தென்னிந்தியா முதல் நேபாளம் வரையிலான இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அளவிடும் மாபெரும் பணியில் எவரெஸ்ட் ஈடுபட்டிருந்தார். தி கிரேட் டிரிகோணமெட்ரிக்கல் சர்வே (the Great Trigonometrical Survey) என்று அந்த பணி குறிப்பிடப்படுகிறது. இந்தியா குறித்த ஒழுங்கான வரைபடம் ஏதும் இல்லாத அந்தக்காலத்தில் வரைபடத்தின் முக்கியத்துவத்தை ஆட்சியில் இருந்த பிரிட்டிஷார் உணர்ந்தனர்.  1806ம் ஆண்டு வில்லியம் லாம்பென்னட் என்ற அளவியலாளரால் இந்த பணி தொடங்கப்பட்டது. லாம்பென்னட்டின் மறைவுக்குப் பின்னர் 1823ல் அவரது உதவியாளராக இருந்த ஜார்ஜ் எவரெஸ்டிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனராலாக 1830ம் ஆண்டு முதல் 1843ம் ஆண்டு வரை ஜார்ஜ் எவரெஸ்ட் பதவி வகித்தார். சுமார் 2,400 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக விரிந்துகிடந்த பகுதிகளை அவர் அளவீடு செய்தார். பணியில் கண்டிப்புடன் செயல்பட்ட எவரெஸ்ட், துல்லியமான அளவீடும் முறைகளை அறிமுகப்படுத்தினார். அவரது பதவிக்காலத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்படவில்லை. எவரெஸ்ட்க்குப் பின்னர் இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாகப் பதவியேற்ற ஆண்ட்ரூ ஸ்காட் வாக் என்பவராலேயே எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளக்கப்பட்டது. இந்த சிகரத்தைக் கண்டறிந்தது ராத்நாத் சிக்தர் எனும் இந்திய அளவியலாளர் ஆவார். இருப்பினும், தி கிரேட் டிரிகோணமெட்ரிகல் சர்வே எனப்படும் அளவியல் பணியை திறம்பட மேற்கொண்ட எவரெஸ்டின் பெயரால் அந்த சிகரம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்காட் வாக் விரும்பினார். ஆனால், இந்த முடிவுக்கு ஜார்ஜ் எவரெஸ்ட் கடும் அதிருப்தி தெரிவித்தார். நேபாள மக்கள் பேசும் மொழியிலேயே அந்த சிகரத்துக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், பிரிட்டிஷ் அரசு புதிய சிகரத்துக்கு எவரெஸ்டின் பெயரையே சூட்டியது. இந்தச் செய்திக்கு இப்போது என்ன அவசியம் என்று கேட்கிறீர்களா? எவரெஸ்ட்டின் பிறந்தநாள் இன்றுதான். 1790ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிதான் அவரது பிறந்தநாள். எவரெஸ்ட் 1866ல் மறைந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com