கொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்

கொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்
கொரோனாவுக்குப் பிறகு… தமிழகத்தில் செய்ய வேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்
Published on

 தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (MIDS) ஆய்வுப் பேராசிரியர்கள், கொரோனா காலத்திற்குப் பிறகான காலங்களில் கவனம் கொள்ளவேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

அண்மையில் கொரோனாவுக்குப் பிறகான காலங்களில் தமிழகத்தில் செய்யவேண்டிய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள் பற்றி வனத்துறை அதிகாரி பெ. துரைராசு மற்றும் பேராசிரியர் லி.வெங்கடாசலம் இருவரும் இணைந்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். சுருக்கப்பட்ட அந்தக் கட்டுரை…

கொரோனா தொற்றும், அதைத் தொடர்ந்த ஊரடங்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல் துறையில் பல விரும்பத்தக்க, நேர்மறையான மாற்றங்களை விளைவித்துள்ளன. முக்கிய நகரங்களில் காற்றின் தரம் உயர்தல், நதிகளில் நீரின் தன்மை அதிகரித்தல் மற்றும் நகர்ப்புறங்களில் திடக்கழிவுகளின் உற்பத்தி குறைதல் போன்ற முக்கியமான சில மாற்றங்கள் நடந்துள்ளன. இவை குறுகியகால மாற்றங்களாக இருந்தாலும், அவற்றில் சில மகத்தானவை.

கங்கை நதியின் மாசுபட்ட நீரை, குடிநீரின் தரத்திற்கு உயர்த்தியது ஊரடங்கின் ஒரு உன்னத சாதனையாகும். இது, 1987ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 4,800 கோடி செலவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட கங்கையைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளால்கூட சாதிக்கமுடியாத சாதனையாகும்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் ஏற்படும் இரண்டாம்கட்ட பாதிப்புகள் மக்களுக்குக் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம்பெயர்தல் அவற்றில் ஒன்று. அவ்வாறான புலம்பெயர்தல் கிராமப்புறங்களில் போதுமான அளவுக்கு வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் விவசாயம் பொய்த்துப்போவதனாலேயே ஏற்படுகிறது.

(பேராசிரியர் லி. வெங்கடாசலம்)

பொருளாதாரமும் சூழல் மேம்பாடும்

பொதுவாக பொருளாதார வளர்ச்சியும், சூழல் மேம்பாடும் எதிர் எதிர் திசையில் நகர்வதால், ஊரடங்கின்போது சூழலில் ஏற்பட்ட நேர்மறை மாற்றங்களை பொருளாதார இழப்பு என்ற பெரும் விலையைக் கொடுத்தே பெற்றோம். ஊரடங்கை விலக்கிக்கொள்ளும்போது உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள் மீண்டும் சூழல்சீர்கேட்டைத் தோற்றுவிக்கும். இச்சீர்கேடு மக்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதால், பெருந்தொற்று அவர்களை எளிதில் ஆட்கொள்ளும்.

எனவே, சுற்றுச்சூழல் மேம்பாடு என்பது மக்களின் உடல்நலத்தைப் பேணி பெருந்தொற்றிலிருந்து அவர்களை இப்போது மட்டுமின்றி எப்போதும் காப்பதாகும். மேலும், கிராமப்புறங்களில் வாய்ப்புகளை அதிகரித்து, புலம்பெயர்தலை கணிசமாகக் கட்டுப்படுத்தி, மக்களின் நல்வாழ்வையும் மேம்படச்செய்யும் தன்மை கொண்டது.

தமிழகம் சிறந்த இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளபோதிலும், தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வரும் மாசு, திடக்கழிவு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், நிலம் பாழ்படுதல், கடல் அரிப்பு, கடல்நீர் உட்புகுதல் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் அழிவது போன்ற மிகச்சீரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒருசில இடங்களில் நிகழ்த்தப்பட்ட களஆய்வின்படி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசுக்களின் தாக்கத்தினால் அப்பிராந்தியத்தின் நிலைத்த பொருளாதார வளர்ச்சியே கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது தெளிவு.

சூழல் மாசுபாட்டால் நமது மாநிலம் முழுவதும் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தை இதுவரை நாம் அளவீடு செய்யவில்லை என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தின் தன்மை மற்றும் அளவு, கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோர் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. தற்போது மாநிலத்தின் பெருவாரியான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் சூழல் பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

(வனத்துறை அதிகாரி துரைராசு)

வருங்காலங்களில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது அரசு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எவ்வாறு தகுந்த நடவடிக்கைகள் மூலம் செவ்வனே கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். எனவே, மாநில அரசு இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் மாநிலத்திலுள்ள மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசநலனையே மேம்படுத்த இயலும்.

குறுகியகால நடவடிக்கைகள்

மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட தடைகளை குறைந்தது இந்த ஆண்டு இறுதிவரையாவது நீட்டிக்கவேண்டும். அதன் மூலம், வனம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் புத்துயிர் பெரும் நிகழ்வு சில காலம் தொடர ஏதுவாகும். மாநில அரசு 2020ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய ஈர நிலங்களுக்கான அறிவிப்பை வெளியிடவேண்டும். அப்போது மாநிலத்தின் விலைமதிப்பற்ற ஈர நிலங்களைப் பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த இயலும்.

நகர்ப்புறங்களில் பசுமைப் போர்வையை விரிவாக்குவதால், காற்று மற்றும் ஒலி மாசுபடுதலை வெகுவாகக் குறைக்கமுடியம். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் அதைக் கண்காணிக்கவும் மர அலுவலர்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



நீண்டகால நடவடிக்கைகள்

பசுமை ஜிடிபி: மொத்த தேசிய வருவாய் (ஜிடிபி) என்பது நாட்டின் பொருளாதார நலனை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். ஆனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாததால், தற்போது அளவிடப்படும் தேசிய வருவாயானது மாநிலத்தின் பொருளாதார நலனை பரிமளிக்கும் ஒரு குறியீடாகக் கருதமுடியாது. மானுடம் மற்றும் சூழலுக்கிடையே கீழ்க்கண்ட மூன்றுவித தொடர்புகள் உள்ளன:

அ) மனிதர்கள் தங்கள் நுகர்வு மற்றும் உற்பத்தி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் சுற்றுச்சூழலிலிருந்து கிடைக்கும் எண்ணிலடங்கா விலையற்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஆ) நுகர்வு மற்றும் உற்பத்தியால் விளைவிக்கப்படும் மாசு போன்ற எதிர்மறை வெளிப்பாடுகள் மேற்சொன்ன சூழல் சேவைகளைக் குலைப்பதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை மனிதர்கள் சுமக்க நேரிடுகிறது.
இ) எதிர்மறை வெளிப்பாடுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மனிதர்கள் ‘சூழல் பாதுகாப்புச் செலவை’ மேற்கொள்ளவேண்டியுள்ளது.

ஒருபக்கம், எண்ணற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பை மாநில தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. எனவே, மாநில ஜிடிபி குறைத்து மதிப்பிடப்படுகிறது. மறுபக்கம், சூழல் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் மற்றும் சூழல் பாதுகாப்புச் செலவையும் மாநில ஜிடிபியில் கழிக்காமல் கணக்கிடுவதில் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாகிறது.

விலையற்ற சூழல் சேவைகளின் பண மதிப்பையும், சூழல் சார்ந்த பொருளாதார இழப்பு மற்றும் சூழல் பாதுகாப்புச் செலவு ஆகியவற்றை முறையாக அவ்வப்போது கணக்கிட்டு பசுமை ஜிடிபியைத் தயாரிக்கும்பட்சத்தில் மாநிலத்தில் முறையான சூழல் கொள்கைகளை வகுப்பதோடு, மாநிலத்தின் நிலைத்த வருவாயை உறுதிசெய்து சமூகத்தின் பொருளாதார நலனையும் மேம்படுத்தமுடியும்.

சூழல் கணக்கீட்டு அமைப்பு

சூழல் கணக்கீட்டு அமைப்பு என்பது பசுமை ஜிடிபியைக் கணக்கிடவும் மற்றும் மாநில வருவாயின் நிலைத்த தன்மையைக் கண்காணிக்கவுமான ஒரு முன்நிபந்தனையாகும். இந்த அமைப்பு நீர்வளம், காட்டுவளம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் ஆகிய இயற்கை வளங்களைக் கணக்கிடவும் மற்றும் பொருளாதாரத்திற்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.

பணமதிப்பில் கணக்கிடும் முறை
எனவே, இயற்கை வளங்களையும் சூழல் சேவைகளையும் ‘பணமதிப்பில் கணக்கிடும் முறை’ சிறந்ததாகக் கருதப்படுகிறது. இயற்கை வளங்களின் இருப்பு அதிகரிக்கும்போதிலும், மாசு போன்ற பிரச்சினைகளால் இருப்பிலிருந்து பெறக்கூடிய சூழல் சேவைகளின் தரம் மோசமடையும். ஆற்றில் நீர் கரைபுரண்டோடும் போதிலும், அது மாசுபட்ட நீராயின், அதை எதற்கும் பயன்படுத்தமுடியாதல்லவா?

பல்லுயிர்ப் பெருக்கக் கணக்கீட்டுமுறை

ஒவ்வொரு இயற்கைவளத்திற்கும் சூழல் கணக்கீட்டுமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அந்த வளத்தின் தரத்திற்கும், அதனால் பல்லுயிர்ப் பெருக்கத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உள்ள முக்கியமான தொடர்பைப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
சமீபத்தில் சலீம் அலி மையத்தினால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஈரநிலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும், அதனால் ஈரநிலம் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தில் நிகழும் தாக்கங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியமுடியும்.

ஈரநிலத்தின் தரக்குறியீடு

கீழ்க்கண்ட மூன்று விதமான காரணிகளைப் பயன்படுத்தி, ஈரநிலத்தின் தரக்குறியீட்டை மதிப்பிடுகின்றனர்:
அ) ஈரநிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள்;
ஆ) ஈரநிலத்திற்கு ஏற்படும் (சூழல் சீர்கேடு போன்ற) அச்சுறுத்தல்கள்;
இ) ஈரநிலத்தின் தாவர வளம் மற்றும் விலங்கினத் தொகுப்பினடிப்படையிலான பல்லுயிர்ப் பெருக்கத்தின் மதிப்பு.

இம்மூன்றையும் இணைத்து ஈரநிலங்களின் ஆரோக்கியம் மதிப்பிடப்படுவதால், ஈரநிலங்களை மேம்படுத்துதல் மற்றும் அது சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுதல் போன்ற முக்கிய முடிவுகளை சரியான தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாகிறது. ஈரநிலங்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து அளவிடுவதன் மூலம் ஈரநிலங்களுக்கும் அதுசார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பை தொடர்ந்து கண்காணித்து, அதற்குத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.



பொருளாதார மதிப்பீடு

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வகுக்கப்படும் கொள்கைமுடிவுகள் எந்த அளவுக்கு சூழல் சார்ந்த பயன்களை விளைவிக்கின்றன என்கின்ற தகவல் மிக முக்கியமானது. உதாரணமாக, காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும்போது, அது மனிதர்களின் உடல்நலத்தில் எந்த அளவு விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது முக்கியம்.

எனவே, சூழல் சார்ந்த பயன்களின் பண மதிப்பீடு பசுமை ஜிடிபியைக் கணக்கிடவும் மற்றும் கொள்கைகளின் நன்மை தீமைகளை மதிப்பிடவும் போன்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவுகிறது. இருப்பினும், சந்தை மதிப்பு இல்லாதபட்சத்தில் சூழல்சார்ந்த நன்மை தீமைகளின் பண மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பது கேள்விக்குரிய ஒன்று.

ஈரநிலத்தின் சூழல் சேவைகள்

கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்களைக்கொண்டு, தமிழ்நாட்டின் 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களின் சூழல் சேவைகளை எவ்வாறு பண மதிப்பீடு செய்தோம் என்பதை இங்கு தந்துள்ளோம். ஒரு ஹெக்டர் ஈரநிலம் சராசரியாக எவ்வளவு மதிப்புள்ள சூழல் சேவைகளை அளிக்கும் என்பதை ஒவ்வொருவிதமான ஈரநிலத்திற்கும் ஆராய்ச்சியாளர்கள் முன்னரே பணமதிப்பில் கணக்கிட்டுள்ளனர்.

இந்த உலகளாவிய சராசரி மதிப்பைக்கொண்டு 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களை முழுமையாகப் பாதுகாத்தால் கிடைக்கக்கூடிய உச்ச பயன்களை பணமதிப்பில் கணக்கிட்டோம். அதாவது, 141 ஈரநிலங்களின் மொத்த நிலப்பரப்பை ஒரு ஹெக்டரின் உலகளாவிய சராசரி மதிப்புடன் பெருக்கும்போது கிடைக்கும் பணமதிப்பு ஆண்டுக்கு ரூ. 11,283.09 கோடிகளாகும்.

நடைமுறையில் ஈரநிலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பதால், அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய சூழல் சேவைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் மிகக்குறைவே. நாம் 141 முன்னுரிமை பெற்ற ஈரநிலங்களை முழுமையாக பாதுகாக்கத் தவறியதால் நமது மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 9,940 கோடி இழப்பு ஏற்படுகிறது.

இந்த சிறிய எண்ணிக்கையிலான (141) ஈரநிலங்களைக் காப்பதாலேயே பெரிய நன்மையை ஈட்டலாம் எனில், நம் மாநிலத்திலுள்ள 41000க்கும் அதிகமான ஈரநிலங்களைக் காப்பதால் வரும் நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும் என்பது திண்ணம்.

பரிவர்த்தனை முறை

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்துவந்த குடிமராமத்து என்ற மரபு சமூகத்திற்கு முழுமையான அதிகாரம் அளித்து நீர்நிலைகளை - குறிப்பாக, பாசன ஏரிகளை செம்மையாகப் பாதுகாக்க வழிவகுத்தது. அரசு நீர்நிலைகள் பராமரிப்பைத் தன்னகத்தே எடுத்துக்கொண்டதாலும், விவசாயிகள் ஏரிப்பாசனத்திலிருந்து நிலத்தடி நீர்பாசனத்திற்கு மாறிவிட்டதாலும், அச்சீரிய மரபு நாளடைவில் மறைந்துபோனது.

கடநத சில காலங்களாக தமிழக அரசு குடிமராமத்து முறையை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால் பிரச்சினை என்னவெனில், சமூகத்தின் ஈடுபாடின்றி அரசு பெருவாரியான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை குடிமராமத்து என்ற பெயரில் மேற்கொள்ளுவதுதான்.

மக்கள் பங்கேற்பற்ற அவ்வாறான நடவடிக்கை சமூக நலனை உயர்த்தாது. மாறாக, அரசாங்கத்தின் பரிமாற்றச் செலவுகளை அதிகரித்து, வரி செலுத்தும் பொதுமக்களின் சுமையை அதிகரிக்கச் செய்யும். மக்கள் பங்கேற்பை சரியான ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அதிகரிக்கமுடியும். இங்கேதான் நீருக்கான ‘பரிவர்த்தனை முறை’கைகொடுக்கிறது!

ஏரியின் நீர் இருப்புக் குறையும்போது, நீரை குடிநீருக்காக எடுப்பது சென்னை மக்களின் நலனை அதிகரித்தாலும் எரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கிறது. இப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம்? ஏரியினால் பயன்பெறும் அனைத்து கிராம மக்களுக்கும் ஏரியை மேலாண்மை செய்யும் உரிமையை முழுமையாக அளித்துவிட்டு, சென்னை நீரளிப்புக் கழகம் அவர்களிடமிருந்து நீரை பேரம்பேசி வாங்குவதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.

ஆய்வுகளின்படி, சென்னை மக்கள் 2017 ம் ஆண்டில் சந்தையில் நீர் வாங்கச் செய்த செலவு மட்டும் சுமார் ரூ. 1250 கோடியாகும். இது அரசு சிறந்தமுறையில் நீர் வழங்கும்பட்சத்தில் சென்னை மக்கள் சந்தை நீருக்குக் கொடுக்கும் பணத்தை அரசுக்குக் கொடுக்க விழைவார்கள் என்பதையே காட்டுகிறது. இதில் ஒரு கணிசமான தொகையை வீராணம் ஏரியைப் பராமரிக்கும் கிராம மக்களுடன் பகிர்ந்துகொள்வதன்மூலம் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.

பரிமாற்றத்தக்க நீர் உரிமைகள்

நீர் பற்றாக்குறையின்போதும், நீர் உபயோகிப்பாளர்களிடையே மோதல் உருவாகும்போதும் நீரை எவ்வாறு பகிர்ந்தளிப்பதென்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 'பரிமாற்றத்தக்க நீர் உரிமைகள்' என்ற கருவி இதற்குத் தலையாயத் தீர்வை உறுதிசெய்கிறது.

தற்போதைய நடைமுறைப்படி, பவானி ஆற்றில் உள்ள பழைய மற்றும் புதிய கால்வாய்ப் பாசனதாரர்களுக்கிடையே நீர்ப் பகிர்ந்தளிப்பு சம்பந்தமாக தீராத மோதல் தொடர்கிறது. சமீபத்திய சோதனை ஆய்வுமுடிவுகளின்படி, பரிமாற்றத்தக்க நீர் உரிமைகள் அடிப்படையில் தற்போதய மோதல்களுக்குத் தீர்வு காண்பதோடு, நீர் பரிவர்த்தனை மூலம் கிடைத்தற்கரிய நீரை மென்மேலும் செம்மையாகப் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.

நீர் பரிவர்த்தனை சுமார் 63 சதவீத விவசாயிகளிடையே சாத்தியமாவதோடு மட்டுமின்றி, நீரை விற்பதன் மூலம் பழைய கால்வாய் விவசாயத்தில் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை என்பதும் ஆய்வின் மூலம் உறுதியாகிறது. தமிழக அரசு இம்முறையை நடைமுறைப்படுத்தும்பட்சத்தில், நீர் உரிமைகளை அனைத்து விவசாயிகளுக்கும் தற்போதுள்ள பாசன உரிமைகளின் அடிப்படையிலேயே பகிர்ந்தளிக்க வேண்டும்.

நதிப்படுகைக் கழகம்
ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டம் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஆற்றுநிலத்தை அடிப்படை அலகாகக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளை முன்நிபந்தனையாகப் பரிந்துரைக்கிறது. நதிப்படுகைக் கழகங்களை ஏற்படுத்துவதன் மூலம் நீர்மேலாண்மை மற்றும் பகிர்ந்தளிப்பில் சீரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரமுடியும்.

நீர்வளக்கணக்கீடு, சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு, நீர் உரிமைகளின் பரிமாற்றம் மற்றும் அமைப்புவாத ஏற்பாடுகள் போன்ற நீர்மேலாண்மைக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தக் கழகங்கள் செம்மையாக ஒருங்கிணைக்க முடியும். நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்தந்தத் தளம் சம்பந்தப்பட்டதென்பதால், தமிழகத்தில் உள்ள 17 நதிகளுக்கும் தனித்தனிக் கழகங்களை ஏற்படுத்துவது சாலச்சிறந்தது.

கொள்கைகளைப் புதுப்பித்தல்
தமிழ்நாட்டில், தொழிற்சாலை மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வரும் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், தொடர்ந்து அதிகரித்துவரும் தொழிற்சாலைக் கழிவுகள் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, அந்தத் தொழிற்சாலைகளுக்கே பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. தற்போதுள்ள 'கட்டளையும் கட்டுப்பாடும்' சார்ந்த மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கையே தற்போதய பிரச்னைகளுக்குத் தலையாய காரணமாகும்.

தற்போதைய கொள்கை மாசினைக் கட்டுப்படுத்துவதற்கான போதுமான ஊக்கத்தை அளிப்பதில்லை. எனவே, தற்போதைய கொள்கையிலிருந்து அதிக ஊக்கம் அளிக்கக்கூடிய சந்தை சார்ந்த கொள்கைகளுக்கு உடனடியாக மாறவேண்டும். இப்போதைய கொள்கை அனைத்துத் தொழிற்சாலைகளும் மாசுவைக் கட்டுப்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளதால் மாசுக் கட்டுப்பாட்டிற்கான செலவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மாசு கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதில்லை. இதனால், குறைந்த செலவில் மாசுவைக் கட்டுப்படுத்துபவர் அதிக செலவில் கட்டுப்படுத்த நேருவதால், மாசுக் கட்டுப்பாட்டில் ஊக்கம் குறைந்து பிரச்சினை தொடர்கதையாகிறது.

சுற்றுச்சூழல் தரவுத்தளத்தை ஏற்படுத்துதல்
பல்வேறு அமைப்புகள் ஒரேவிதமான தரவுகளைத் திரட்டுகின்றன. உதாரணமாக, நீரின் தரம் சார்ந்த தரவுகளைத் திரட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பட்டு வாரியம், பிராந்திய சுற்றுச்சூழல்கூடங்கள், நீர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் ஈடுபடுவதால் எந்தக் கூடுதல் பயனும் விளைவதில்லை.

வருங்காலத்தில் சூழல் சார்ந்த தரவுகளைத் திரட்டும் பணியை ஒருங்கிணைத்து, அந்த தரவுகள் குறிப்பிட்ட கொள்கைமுடிவுகளுக்கு ஏற்றவாறு திரட்டப்படவேண்டும். திரட்டப்படும் தரவுகள் அதற்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட அமைப்பினால் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும்.

திறன் மேம்பாடு:
நாம் முன்னரே பார்த்ததுபோல், தமிழகத்தில் பல கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் முடங்கியுள்ளன. அவ்வாறான முடக்கம், மாநிலத்தின் வளர்ச்சியை பாதித்து வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுதலையும் கடுமையாக பாதிக்கும். அதுபோலவே, கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலைக் கெடுத்து அதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிப்படையச் செய்யும்.

தற்போதைய ‘சுற்றுச்சூழலுக்கு எதிரான வளர்ச்சி’ என்ற அணுகுமுறையை விடுத்து, வருங்காலங்களில் ‘சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சி’ என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் சம்பந்தமான சமூகத்தின் விருப்பங்களை சுற்றுச்சூழல்தாக்க மதிப்பீட்டில் சரியான முறையில் கையாள்வதில்லை என்பதன் காரணமாக, வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. பெரும்பாலும், மக்கள் வளர்ச்சிப் பணிகளை எதிர்ப்பது சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்கள் போதுமான அளவு இல்லை என்பதாலும், அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பதாலும்தான்.



எனவே, சுற்றுச்சூழல் சார்ந்த திறன் மேம்பாட்டை அனைத்துப் பிரிவு மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், அரசுசாரா அமைப்பினருக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், விவசாய சங்கத்தினருக்கும், பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நுகர்வோர் சங்கங்களுக்கும், ஆசிரியர் மற்றும் பஞ்சாயத்து அமைப்பினருக்கும் முறையாக அளிப்பதன்மூலம் வளர்ச்சிக்கு எதிரான சுற்றுச்சூழல் சார்ந்த எதிர்ப்புகளை சரிசெய்ய முடியும்.

இதுபோன்ற முயற்சி எதிர்காலத்தில் மேன்மையான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளை வகுக்கவும் நிலைத்த வளர்ச்சியை காணவும் பெருந்துணையாக அமையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com