"கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை சூழல் மாசுபாடு ஏற்படுத்தும்" - எச்சரிக்கும் ஐ.நா அறிக்கை

"கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை சூழல் மாசுபாடு ஏற்படுத்தும்" - எச்சரிக்கும் ஐ.நா அறிக்கை
"கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை சூழல் மாசுபாடு ஏற்படுத்தும்" - எச்சரிக்கும் ஐ.நா அறிக்கை
Published on

பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக வருடத்திற்கு குறைந்தது 90 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாகவும், இது கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகம் என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த ஐ.நா சுற்றுச்சூழல் அறிக்கையில், சில நச்சு இரசாயனங்களை தடை செய்ய உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

உலகெங்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடுகள் மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடுகள் காரணமாக வருடத்திற்கு குறைந்தது 9 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும், இந்த பிரச்சினை பெரும்பாலும் உலக நாடுகளால் கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகெங்கும் 5.9 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ள சூழலில், மாசுபாடு காரணமாக 9 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த சுற்றுச்சூழல் அறிக்கையின் ஆசிரியர் டேவிட் பாய்ட், "மாசுபாடு மற்றும் நச்சுப் பொருட்களால் ஏற்படும் அபாயங்களை தடுப்பதற்கான தற்போதைய அணுகுமுறைகள் தெளிவாக தோல்வியடைந்து வருகின்றன, இதன் விளைவாக சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மாசுபாடுகளை தடுக்க உடனடியான தீவிர நடவடிக்கைகள் வேண்டும் " என்று தெரிவித்தார்

வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பாலிஃப்ளூரோ அல்கைல், பெர்ஃப்ளூரோ அல்கைல் மற்றும் நான்-ஸ்டிக் குக்வேர் போன்ற பொருட்கள் புற்றுநோயை உருவாக்க முக்கிய காரணியாக உள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், அசுத்தமான இடங்களைச் சுத்தப்படுத்தவும், மாசுபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களை இடமாற்றம் செய்யவும் வேண்டும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. "தியாக மண்டலங்கள்" என்று அழைக்கப்படும் இத்தகைய மாசுபட்ட இடங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினராக உள்ளனர், எனவே அவர்களை அந்த இடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய அரசு உதவ வேண்டும் எனவும் இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா உரிமைகள் தலைவர் மிச்செல் பச்சேலெட், "தற்போது அதிகரித்துள்ள சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் மிகப்பெரிய உலகளாவிய மனித உரிமைகள் சவால் ஆகும். காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நீதி தொடர்பான வழக்குகள் அதிகரிப்பது மனித உரிமைகளுக்கான குரலாக உள்ளது " என தெரிவித்தார்

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தூய்மையான சூழலை மனித உரிமையாக பிரகடனப்படுத்தும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்த ஆவணம் நேற்று ஐ.நா சபையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com