1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்: 42 ஆம் ஆண்டு நினைவு நாள்

1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்: 42 ஆம் ஆண்டு நினைவு நாள்
1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்: 42 ஆம் ஆண்டு நினைவு நாள்
Published on

ஜூன் 26, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியின் வழிகாட்டுதலின் படி, குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதின் அலி அகமதுவால் அரசியலமைப்புச் சட்ட விதி352-ன் படி நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. நெருக்கடி நிலை, 25 ஜூன் 1975 முதல் 23 மார்ச் 1977 வரை சுமார் 21 மாதங்கள் நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போர் போன்ற நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் சூழலில் மட்டும் அமல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை, இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. தனிமனித உரிமைகள் தகர்த்தெரியப்பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல்பட்டனர். எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர். 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் அரசாங்கம் செய்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக்குழு தந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் சுமார் 1,10.806 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய ஜனநாயக நாட்டில் ஒரு சர்வாதிகாரமாக ஆட்சியாக நெருக்கடி நிலை இருந்தது.

நெருக்கடி நிலை அமலுக்கு வர மூல காரணமாக இருந்த தேர்தல் வழக்கு:

உத்தரப் பிரதேசத்தில் ராபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான இந்திரா காந்தியை எதிர்த்து சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயண் 1971-ல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், தேர்தலின்போது உபி அரசு எந்திரங்களைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாகவும், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் வழக்கு தொடுத்தார். அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, 1975 ஜூன் 12-ல், இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கினார். மேலும் 6 ஆண்டுகளுக்கு இந்திராகாந்தி எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி தடையும் விதித்தார். தேர்தலின் போது அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிபதி சின்ஹா ஏற்றுக் கொண்டார். ஆனால் லஞ்சப் புகாரை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று அவர் கூறினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா காந்தி. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மனுவை விசாரித்தார். “ஒரு பிரதமராக நீடிக்க இந்திராவுக்குத் தடை இல்லை என்றாலும், அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய உரிமைகள், சலுகைகளைப் பெற முடியாது. நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு இல்லை” என்று தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த எதிர்க்கட்டிகள், அதிகார துஷ்பிரயோகத்தால் தேர்தலில் வென்றவர் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்திரா காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதமர் இந்திராகாந்தி, தனது நெருங்கிய அதிகாரிகள் மற்றும் தனது மகன் சஞ்சய் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, நெருக்கடி நிலையை அமல்படுத்த குடியரசுத்தலைவருக்கு நெருக்கடி கொடுத்தார். குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவால் நெருக்கடி நிலை நல்லிரவில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

அமலானது நெருக்கடி நிலை:

இரவோடு இரவாக நாட்டின் முக்கியமான அனைத்துப் பத்திரிகை அலுவலகங்களின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். அரசை எதிர்க்கும் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். அனைத்துத் தேர்தல்களும் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் பதவி ஏதுமில்லாமலேயே அதிகாரங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.

நெருக்கடி நிலையில் ஒடுக்குமுறை:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது. வானொலி, பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான மிசா மூலம் ஆயிரக்கணக்கானவர்கள கைது செய்யப்பட்டனர். பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திரைப்படங்கள், நாடகங்கள்கூட அரசியல் கருத்துகளுக்காகத் தடை செய்யப்பட்டன. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை அனைத்தும் முற்றிலும் ஒடுக்கப்பட்டன.

இந்தியாவில் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்குள்ளாகி தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லமி ஆகிய இரண்டு அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன. ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், விஜயராஜே சிந்தியா, சரண் சிங், ஆசார்ய கிருபளானி, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யேந்திர நாராயண் சின்ஹா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

நெருக்கடி நிலையை எதிர்த்ததால் தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 1976 பிப்ரவரி 1 ஆம் தேதி கலைக்கப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சிறையில் மு.க.ஸ்டாலின் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டார்.

யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடிக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர்.

கொடூரமான குடும்பக்கட்டுப்பாடு திட்டம்:

மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்ட அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  வீதிகளில் படுத்திருந்தவர்கள், நள்ளிரவில் பேருந்து மற்றும் ரயில்களைத் தவறவிட்டதால் பொது இடங்களில் தூங்கியவர்கள், ஏழைகள், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். இதில் பலர் மிக மோசமாக பாதிப்பும் அடைந்தனர், பலர் இறந்தும் போயினர். குடிசையில்லா நாட்டை உருவாக்குவேன் என்று கூறிக்கொண்டு, டெல்லியில் துருக்மான் கேட் என்ற பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த மக்கள் முன்னறிவிப்புகூடத் தரப்படாமல் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். குடிசை வீடுகள் புல்டோசர்கள் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் சிலர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

20 அம்ச திட்டம்:

அதிகாரிகள், ஊழியர் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. ரயில்கள் சரியான நேரத்தில் வந்து சென்றன.

இந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

20 அம்ச திட்டத்தில் சஞ்சய் காந்தி முதியோர் கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, ஜாதியை முற்றிலும் அழிப்பது, மரம் நடுவது, கருத்தடை ஆகிய 5 திட்டங்களை தேர்ந்தெடுத்த நடைமுறைப்படுத்த முற்பட்டார். கொத்தடிமைக் கூலி முறையை நீக்குவது, அவ்வாறு கடன் பத்திரம் கொடுக்கப்பட்டு, அடிமைகளாக வேலை செய்வோருக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவது, பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி புத்தகங்களை வழங்குவது போன்றவையும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் சஞ்சய் காந்திக்கு ஆர்வம் இருந்தது. அதற்கான இடையூறுகளை, பழைய வீடுகளை, ஆக்கிரமிப்புகளை நீக்குவதில் மிக மோசமான செயல்பாட்டோடு அவர் இயங்க ஆரம்பித்தார். அதுவே, மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இவ்வாறாக 1977 மார்ச் 23-ல் ஒரு வழியாக நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது.

தேர்தல்:

1977 ஜனவரி 18-ம் தேதி மக்களவைக்குப் பொதுத் தேர்தலை அறிவித்த இந்திரா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்களை விடுதலை செய்தார். நெருக்கடி நிலையை மார்ச் 23-ல் வாபஸ் பெற்றார். அதற்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், பாரதிய லோகதளம் ஆகிய நான்கு பெரிய எதிர்க் கட்சிகள் ஒரே அரசியல் கட்சியாக உருவெடுத்தன. “இந்தத் தேர்தல் ஜனநாயகமா, சர்வாதிகாரமா எது தேவை என்பதைத் தேர்வு செய்வதற்கான கடைசித் தேர்தல்” என்றே எதிர்க் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. வட இந்தியாவில் ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இனியொரு முறை நெருக்கடி நிலையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கொண்டுவர முடியாதபடிக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.

பிறகு கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட பதவிப்போட்டி காரணமாக, கட்சிகள் பிரிந்து, ஆட்சி பறிபோனது. பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை கைப்பற்றியது. இந்திரா காந்தியே மீண்டும் பிரதமரானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com