மின்சார வேலிகளால் உயிரிழக்கும் யானைகள்... தடுப்பதற்கான வழிகள் என்ன?

மின்சார வேலிகளால் உயிரிழக்கும் யானைகள்... தடுப்பதற்கான வழிகள் என்ன?
மின்சார வேலிகளால் உயிரிழக்கும் யானைகள்... தடுப்பதற்கான வழிகள் என்ன?
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது. அதேபோல் ஈரோடு சத்தியமங்கலத்தில் மின்வேலியில் சிக்கி ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு யானைகள் உயிரிழந்தன. காடுகளில் உணவின்றி, நீரின்றி ஓடி வரும் யானைகள் மின்சாரத்தில் சிக்கி உயிரிழக்கும் அவலத்திற்கு என்னதான் தீர்வு என கேள்வி எழுப்புகின்றனர் விலங்கியல் ஆர்வலர்கள். விவசாய நிலங்களுக்கு தொடர் அழிவைத் தரும் விலங்குகளை என்னதான் செய்வது என செய்வதறியாது கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.

நகர மயமாக்களின் காரணமாக காடுகளின் பரப்பளவு குறைந்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை, புலி போன்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தேடி நகருக்குள் வருகிறது. இதனால் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் யானை மனிதன் இடையிலான மோதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதில் பாதிப்பு மனிதன், யானை என இருதரப்புக்குமே இருக்கிறது. பெரும்பாலான சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் செயற்பாட்டாளர்கள் யானை - மனிதன் இடையிலான மோதலை தவிர்க்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்தியாவில் 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் உணவு நீர் கிடைக்காமல் போவதும் யானைகளுக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன. பொதுவாக யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கு அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.

அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் விளைநிலங்களை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாய்ந்து இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. யானைகளுக்கு பிடித்தமான உணவுகளை காட்டின் எல்லைகளில் பயிரிட வேண்டாமென வனத்துறை கூறுகிறது.

ஆனால் யானை வருமென்று அச்சம் கொண்டால் தங்களால் எப்போதும் விவசாயம் செய்ய முடியாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு என்னதான் தீர்வு என யோசிக்கும் விவசாயிகளுக்கு ஐடியா கொடுத்தார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர். வேலி அமையுங்கள் ஆனால் செயற்கையான மின்சார வேலி இல்லை. இயற்கையான வேலி.

அதாவது கள்ளிச்செடி போன்ற சில செடிகளை வளர்த்து உயிர்வேலி அமைத்தல் முறை ஆகும். ‘யானை காத்தான்' என்று அழைக்கப்படும், நீண்டு வளரும் கள்ளிச்செடிகளை விவசாய நிலங்களை சுற்றி வளர்த்தால் யானை போன்ற வன விலங்குகள் விவசாய நிலங்களின் அருகே வராது என்கின்றார் அந்த விவசாயி. வன விலங்குகளுக்கு அந்த கள்ளிச்செடி குறித்து தெரியும் என்றும் அதனைக் கண்டால் விலங்குகள் நிச்சயம் நெருங்காது என்கிறார்.

அதேபோல் தேனீக்கள் மூலமும் யானையைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். பொதுவாக யானைகளுக்கு தேனீக்கள் என்றால் பயம் என்றும், எனவே தேனீ பெட்டிகள் மூலம் விவசாய நிலங்களில் தேனீ வளர்த்தால் அதன் சத்தத்தை உணரும் யானைகள் விவசாய நிலங்களுக்கு வராது என்பதும் அவர்களின் விளக்கம். இல்லையென்றால், தேனீ சத்தம் எழுப்பும் தொழில்நுட்பங்கள் சந்தையில் கிடைப்பதாகவும் அதனை பயன்படுத்தியும் யானைகள் வராமல் தடுக்கலாம் என்கின்றனர்.

இதுபோல இயற்கையான யாருக்கும் பாதிப்பில்லாத சில வழிமுறைகள் மூலமாகவே யானையை எளிதாக தடுத்து நிறுத்த முடியும் என்பதால், உயிருக்கு உலை வைக்கக்கூடிய மின்சார வேலிகள் தேவையில்லாத ஒன்று என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com