யானைகளை காவு வாங்கும் மின் வேலிகள்.. இதற்கு தீர்வுதான் என்ன? செய்யவேண்டியவை என்னென்ன?

யானைகளை காவு வாங்கும் மின் வேலிகள்.. இதற்கு தீர்வுதான் என்ன? செய்யவேண்டியவை என்னென்ன?
யானைகளை காவு வாங்கும் மின் வேலிகள்.. இதற்கு தீர்வுதான் என்ன? செய்யவேண்டியவை என்னென்ன?
Published on

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 600 யானைகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடத்தில் இருக்கிறது. மேலும் ஓடிசா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மின்வேலிகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் விவசாய தோட்டத்தில் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. விளைநிலங்களில் மின்சார வேலிகளை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளன. அவையெல்லாம் எவை? யானைகளின் உயிரிழப்புகளை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.

மின்வேலிகளை எப்படி அமைக்க வேண்டும்?

விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது.

இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவை விட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸ் அளவில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க காரணமாகின்றன.

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்

விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது "அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோர் கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.

மேலும் "யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கம் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை. அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்" என்றார் அவர்.

இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஆசிய யானைகள் வல்லுநர் குழு உறுப்பினரான டாக்டர் ஈ.கே.ஈஸ்வரன் கூறும்போது, "யானைகள் மனிதன் இடையிலான மோதலை வெகு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே பெரிய விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில் வனத்துறையில் இதில் அக்கறை கொண்டுள்ளதா எனத் தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வேலிகளை அமைக்கும் கிராம மக்களுக்கு நாம் சூழலியல் குறித்த அறிவை ஏற்படுத்த வேண்டும். வன உயிரினங்கள் குறித்த முக்கியத்துவங்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கென பிரத்யேகமான ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்வு கிடைக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com