தமிழ்மொழியைப் பற்றிய அறிவு தமிழ் இலக்கணத்தோடு தொடர்புடையது. மொழியைப் பற்றிப் பேசப்படும் கருத்துகள் யாவும் மொழியின் இலக்கணத்தைத்தான் வெவ்வேறு சொற்களில் கூறுவதாக அமையும். இலக்கணத்தின் இன்றியமையாமையை எவ்விடத்திலும் மறத்தல் கூடாது. தமிழ் சார்ந்து ஒன்றைச் சொன்னால் அது தமிழ் இலக்கணக் கருத்துத்தான்.
“இலக்கணம் என்றாலே வேப்பங்காய், அது எனக்குப் பிடிக்காது, எவ்வளவு முயன்றாலும் என் மண்டையில் ஏறாது” என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கலாம். அது முற்றிலும் தவறு. முன்னே எப்போதோ விளங்காமல் போய்விட்ட பகுதி – தற்போதும் அவ்வாறே இருக்குமென்று நினைப்பது - தொடர்ந்து அத்தகைய மனப்போக்கிலேயே ஊறித் திளைப்பது தவறு.
நாம் பேசுகின்ற பேச்சு வழக்கில் மொழி இலக்கணம் இருக்கிறது. நம் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்ற மொழி மனத்தில் இலக்கணம் வீற்றிருக்கிறது. அவன் வருவான், அவள் வருவாள், அது வருகிறது, அவர்கள் வருகிறார்கள், அவை வருகின்றன – என்று சொல்கிறோமே, அதுதான் இலக்கணம். அதாவது மொழியை எவ்வாறு பயன்படுத்தவேண்டுமோ அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
இலக்கணப்படியே மொழியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரியாத ஒரு பகுதியாக இலக்கணம் செயல்படவில்லை. நமக்கே தெரியாதபோதும் நம் மொழிப்பயன்பாடு ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்திருப்பதுதான் இலக்கணம். அந்தச் சொல்தான் மிரட்சியாக இருக்கின்றதேயொழிய, இலக்கணம் சொல்வது மொழிவழிமுறைகளைத்தான்.
ஆங்கிலத்தில் யாராவது ‘A Apple’ என்று எழுத முடியுமா ? அவ்வாறு பேசத்தான் முடியுமா ? முடியாது. ஏனென்றால் ஆங்கில உயிரெழுத்துகளின் முன்னே A என்று பயன்படுத்துவது பிழை. An என்றுதான் பயன்படுத்தவேண்டும். An Apple என்றுதான் சொல்லவேண்டும்.
A Apple என்று சொல்லக்கூடாதா ? சொல்லக்கூடாது. ஏனென்றால் A என்பதும் Apple என்ற சொல்லில் வரும் A என்பதும் சேர்ந்தொலித்தால் என்ன ஆகும் ? மொழியின் இறுதிப்பயன்பாடு பேச்சு வழக்குத்தானே ? பேச்சில் இரண்டு சொற்களுக்கிடையே எழுத்தில் விடுவதுபோல் இடைவெளி இல்லை என்பதுதானே உண்மை ? Aapple என்று ஒரே சொல்லாக – புதுச்சொல்லாக மாறிவிடும். ஒலிப்பே மாறிவிடும். ஒரு நிறுத்தம் வேண்டும் என்பதற்காகத்தான் A => An என்று ஒரு மெய்யெழுத்தைச் சேர்த்து நிறுத்தித் தருகிறார்கள்.
A, an என ஆங்கிலத்தில் இருப்பதைப்போலவே தமிழிலும் எண்ணற்ற இலக்கண முறைமைகள் இருக்கின்றன. ஒரு, ஓர் பயன்பாடு அவற்றில் ஒன்று. ஆங்கிலத்தில் மேற்சொன்ன இலக்கணத்தைப் போன்றே, ஆங்கிலத்தைக் காட்டிலும் பலப்பல நூற்றாண்டுகள் முன்னே தோன்றிய மொழியான தமிழிலும் அந்த முறை இருக்கிறது. ஒரு, ஓர் என்னும் பயன்பாடு. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னே ‘ஓர்’ என்று பயன்படுத்தவேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னே ‘ஒரு’ என்று பயன்படுத்தவேண்டும். ஒரு காடு, ஒரு குடை, ஒரு குருவி, ஒரு பாடல் என்று கஙசஞ வரிசை எழுத்துகளில் தொடங்கும் சொற்களின் முன்னே ஒரு பயன்படுத்த வேண்டும். ஓர் உயிர், ஓர் எழுத்து, ஓர் அருவி என்று உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களின் முன்னே ஓர் பயன்படுத்தவேண்டும். இவ்வளவுதான் இலக்கணம்.
ஆங்கிலச் செய்தித்தாள், தமிழ்ச் செய்தித்தாள் – இரண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலச் செய்தித்தாளில் எவ்விடத்திலும் A, An ஆகிய இரண்டும் வரவேண்டிய இடத்தில் தவறில்லாமல் வரும். பிழைப்பயன்பாடே இராது. தமிழ்ச்செய்தித்தாளில் ஒரு, ஓர் பயன்பாட்டில் பல பிழைகள் இருக்கும். நமக்கு அது பிழைதான் என்பதும் தெரியாது. ஏனென்றால் நாம் எத்தகைய வேறுபாட்டையும் கருதாமல் எல்லா இடங்களிலும் ‘ஒரு ஒரு’ என்றே பயன்படுத்திச் செல்வோம். ஒரு ஊரில் என்று எழுதாமல் ‘ஓர் ஊரில்’ என்று எழுதவேண்டும்.
ஏன் இலக்கணத்தைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும் ? எங்கள் விருப்பப்படியே மொழியைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாதா ? எங்களுக்கு எது எளிதில் வருகிறதோ அப்படியே மொழியைப் பயன்படுத்திக்கொள்கிறோமே… ஏதேனும் விலக்குமுறையில் இதனை ஏற்கக்கூடாதா ? இவ்வாறு சிலர் நினைக்கக்கூடும். நீங்கள் நினைப்பதனையே செயல்படுத்திக்கொண்டும் உள்ளீர்கள். அதனையே சரியென்றும் கருதுகிறீர்கள். அது பிழையில்லையா ?
மொழியை நாம் எவ்வாறு கேட்டறிந்தோமோ அவ்வாறுதான் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கு என்பது எண்ணற்ற விகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது. பேச்சு வழக்கில் தோன்றும் ஏற்ற இறக்கங்கள், கூட்டல் குறைத்தல்கள், நீட்டல் நெரித்தல்கள், விடுபாடுகள், இசைகள் என யாவும் விகாரங்களே. இம்முறையால்தான் ஒவ்வொரு பேச்சு வழக்கும் வட்டார வழக்காகத் தனியழகோடு விளங்குகிறது. வட்டார வழக்கு என்பதே சிறிய பெயர்தான். அந்தந்த நிலத்திற்குரிய பண்பாட்டுச் செறிவோடு அவை தோன்றி வாழ்கின்றன. பேச்சு வழக்கானது ஒருவரின் செவிவழி அறிதலின் விளைவு. மொழியானது தன் ஒலிப்பளவின் அனைத்து வாய்ப்புகளையும் ஒருவருடைய பேச்சு வழக்கின்வழியே கண்டடைகிறது.
எழுத்து வழக்கு என்பது கற்றறிந்த பின்னர் ஏற்படுவது. இதுதான் எழுத்து என்று அ, ஆ, இ, ஈ கற்றுக்கொள்கிறீர்கள். இந்தச் சொல் இப்படித்தான் அமைவது என்று எழுத்து முறையின்வழியாகக் கற்றுக்கொள்கிறீர்கள். எழுதி எழுதி மொழியின் செம்மையான வடிவத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் எழுத வருகிறீர்கள். கல்வியின் பின்னர் ஏற்படுவது எழுத்தறிவு. அதனால்தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அதனால்தான் கல்விக்கழகு கசடற மொழிதல். பேச்சு உயிரியற்கை. எழுத்து என்பது கல்வியின் விளைச்சல். தானாகப் பேசத்தெரிந்துவிடும். தானாக எழுதத் தெரிந்துவிடுமா ? கற்றபின் வரும் கலையே எழுத்து. அந்தக் கல்வி எழுத்தினைப் பிழையின்றி ஆளக் கற்றுத் தரும். கற்றுக்கொண்ட பிறகு எழுதப்படும் எழுத்தில் பிழையிராது. படித்த நீங்கள் தவறாக எப்படி எழுதலாகும் ?