அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது அவரது ஆதரவாளர்களை பெருமளவில் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் தங்களது மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று தலைமை தாங்கி, 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
இதனையடுத்து மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசியதன் விவரம் பின்வருமாறு:-
“இன்றைக்கு அருமையான நாள். இந்த நாளன்று நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என ஜெயலலிதாவிடமும், எம்.ஜி.ஆரிடமும் வேண்டிக்கொண்டேன். இந்த இரு பெரிய தலைவர்கள் அருள் கொடுத்த சில நிமிடங்களிலேயே அற்புதமான செய்தி வந்திருக்கிறது. இது சக்திமிக்க தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம்.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கும் தீர்ப்பையே வழங்குவேன் எனச் சொல்லி எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அரங்குக்கு சென்றபோது இந்த தகவலை சொல்கிறார்கள். நம் தலைவர்கள் தெய்வசக்திமிக்கவர்கள்.
ALSO READ:
அதிமுகவை எம்.ஜி.ஆர். தோற்றுவித்த போது, திமுக ஒரு தீய சக்தி. அதை அழிக்கவே உருவாக்கப்பட்ட இயக்கம்தான் இது என்றார். அவரது இறுதி மூச்சு உள்ளவரை திமுகவை எதிர்த்து போராடி வெற்றியை கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது வழித்தோன்றலாக வந்த ஜெயலலிதாவும் அதையே செய்துக்காட்டினார்.
அதிமுகவை அழிக்க, முடக்க நினைத்த சில எட்டப்பர்கள், திமுகவின் B டீமாக இருந்து செயல்பட்டவர்களின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 6, 7 மாதங்களாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்ட துன்பமும், வேதனையும் எண்ணிலடங்காதவை. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லையென்றெல்லாம் குரல் எழுப்பினார்கள் எதிர்க்கட்சிகள். இதற்கெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கட்டி விட்டது.
அதிமுக அதன் தொண்டர்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இனி அதிமுக மூன்றாக, நான்காக பிரிந்துவிட்டது என்ற விவாதத்திற்கு பதில் ஒன்றாகிவிட்டது என்று குறிப்பிடுங்கள். கடந்த 7 மாதமாக எங்கள் கட்சியை வைத்தே ஊடகமும், பத்திரிகையும் நடத்தப்பட்டிருக்கிறது. போதும். இனி, அதிமுக நாட்டுமக்களுக்கான இயக்கம் என்பதை தெரிவியுங்கள்.
அண்ணா திமுக இயக்கம் மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. குடும்பத்துக்காக அல்ல. இது குடும்பக் கட்சி இல்லை. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் துணையாக நிற்க வேண்டும். ஏழை, எளிய சாமானியர்களுக்காக தொடங்கப்பட கட்சி அதிமுக. அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நாள் என்னுடைய மணநாள் என இங்கிருக்கும் மணமக்கள் எண்ணுவார்கள்.
மதுரை மண்ணை மிதித்தாலே அதிமுகவுக்கு நல்ல செய்தியும், வெற்றி செய்தியும் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல், திருமங்கலத்தில் உள்ள ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலில் வேண்டியதும் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த கோயில் மூலமாகத்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு இன்று உயிரூட்டப்பட்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. திமுக அரசு அதிமுகவினர் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுகவின் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் சொந்தக்காலில் நிற்பவர்கள். உழைப்பால் உயர்ந்தவர்கள். இப்படியெல்லாம் இருப்பதால் திமுகவின் சதிகள் அனைத்தும் தொண்டர்கள், நிர்வாகிகளால் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழகத்திலேயே வலிமையான, அதிக தொண்டர்களை கொண்ட, இளைஞர்கள் பட்டாளம் அதிகம் இருக்கும் கட்சி என்றால் அது அதிமுகதான்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறவில்லை. ஏழை வாக்காளர்களை ஆடு மாடுகளை போன்று கொட்டகையில் அடைத்து வைக்கும் திமுகவின் வேலைகளை டிவி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுபற்றி மத்திய, மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுவிட்டது.
தேர்தல் விதிகளுக்கு புறம்பாக வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலையை புரிந்துக்கொண்டிருக்கிறது திமுக.
இப்போது இருக்கும் இந்த திருமங்கலத்தில்தான் திமுக தன்னுடைய முதல் ஃபார்முலாவை உருவாக்கியது. தற்போது ஈரோட்டில் மக்களை அடைத்து வைக்கும் மற்றொமொரு ஃபார்முலாவை கொண்டு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் எத்தனையோ இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட வாக்காளர்களை அடைத்து வைத்த சரித்திரம் கிடையாது. நாங்களும்தான் ஆட்சியில் இருந்த போது இடைத்தேர்தலை சந்தித்தோம். இப்படியா வாக்காளர்களை அடைத்து வைத்தோம். எங்கள் ஆட்சியில் வாக்காளர்கள் சுதந்திரமாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்டை அடைத்து வைப்பது போல பிரியாணி சாப்பாடு எல்லாம் கொடுக்கிறார்கள். சாப்பாடு போடுங்கள் தப்பில்லை. ஆனால் ஓட்டு கட்டாயம் அண்ணா திமுகவுக்குதான் மக்கள் போடுவார்கள்.
அதிமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியின் போது பேசிய பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்த இரண்டே நாட்களில் ஜார்கண்ட் ஆளுநர் ஆவதற்கான நியனம் வந்தது. அதேபோல இன்று இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
அடுத்த தீர்ப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற்றார் என்ற இனிப்பான செய்தி கிடைக்கும். அதிமுக வெற்றி முகத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அதிமுகவிடம் உண்மை, நியாயம், தர்மம் இருக்கிறது.