கோவை மாநகராட்சியில் மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற இளைஞர்களின் முயற்சியை அங்கீகரித்து திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு கழிவுகளை பாத்திரம், பேப்பர் காரர்களிடம் கொடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். சுற்றுச் சூழலுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கு ஆபத்தான மின்னணு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய முயற்சியை இளைஞர்கள் இருவர் முன்னெடுத்துள்ளனர். இளைஞர்களின் இம்முயற்சியை அங்கீகரித்து தமிழகத்தில் முதல் முறையாக குப்பை மேலாண்மை திட்டத்துடன் இணைத்து கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்த விரிவாக பார்க்கலாம்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இளைஞர்கள் பிராசாத், ஷ்யாம். கோவையில் வசித்து வரும் இவர்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் 'கிரீன் எரா ரீசைக்ளர்ஸ்' என்ற பெயரில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அப்புறப்படுத்துவதிலும், மறுசுழற்சி செய்வதிலும் கடும் சவாலாக உள்ள வீட்டில் சேரும் மின்னணு கழிவுகளை முறைப்படுத்தும் வகையில், நவீன குப்பைத்தொட்டியை உருவாக்கியுள்ளனர்.
இளைஞர்களின் இந்த முயற்சியை அங்கீகரித்துள்ள கோவை மாநகராட்சி, வார்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குப்பை மேலாண்மை திட்டமான சுன்யா திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக. 22வது வார்டில் உள்ள பாரதிபார்க் மாநகராட்சி பூங்காவில் மின்னணு கழிவுகளை சேகரிக்க பிரத்யேக குப்பைத்தொட்டியை நிறுவியுள்ளது. தனி தனி அடுக்குகளை கொண்டுள்ள இவ்வகை மின்னணு கழிவுகளை சேகரிக்கும் குப்பைத்தொட்டியை அடுத்தடுத்து, அனைத்து வார்டுகளிலும், முக்கிய பகுதிகளிலும் நிறுவ உள்ளனர்.
மின்னணு கழிவுகளை உற்பத்தி செய்வது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்டிக்கை விட அபாயகரமான மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதில் முறையான வழிவகை இல்லாததாலும், பயிற்சி இல்லாமல் மின்னணு கழிவுகளை கையாளுவதால் மனிதர்கள் நோய்களுக்கு உள்ளாவதுடன், சுற்றுசூழல் மாசடைவதை தடுக்கவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக கூறும் இளைஞர்கள், வீட்டில் சேகரமாகும் மின்னணு கழிவுகளை பழைய பொருட்கள் வாங்கும் நபர்களிடம் கொடுக்காமல் அரசு அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான மறுசுழற்சி மையங்களிடம் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சியை துவக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
கிரீன் எரா ரீசைக்ளர்ஸ்
குப்பைத்தொட்டியை தொடர்ந்து மின்னணு கழிவுகளை குறைப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ள இந்த இளைஞர்கள், மறுசுழற்சி, மீண்டும் பயன்படுத்தும் வகையில் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வது போன்ற தொழில்நுட்ப பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் உருவாகும் மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதை எளிதாக்கியது மட்டுமின்றி, அவைகள் பாதுகாப்பாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவது மன நிறைவை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் இந்த மின்னணு குப்பைத்தொட்டியை பயன்படுத்தி வரும் பாரதிபார்க் மக்கள்.
இங்கு சேகரமாகும் மின்னணு கழிவுகளில் மறுசுழற்சி செய்ய முடிவதை பாதுகாப்பாக பிரிக்கப்படும் மையங்களுக்கும், மக்காத எதுவும் செய்ய முடியாதவைகளை கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு குப்பை சேகரிக்கும் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமாகவே 10 அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளன (தனியார் நிறுவனங்கள்) அதனால், முறையான பாதுகாப்பில்லாமல் மின்னணு கழிவுகளை பிரித்தெடுப்பதில் லட்சக்கணக்கானோர் ஆபாத்தான வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் மின்னணு கழிவுகள் உற்பத்தி செய்வதில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியன முதல் மூன்று இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலாவது இடத்தில் உள்ளது. 2017 கணக்கீட்டின் படி, உலக அளவில் ஓராண்டிற்கு 1.8 கோடி டன் மின்னணு கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 20 லட்சம் டன்(2 மில்லியன்) மின்னணு கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.அதில், தமிழகம் 2 லட்சத்திற்கு குறைவாக அதாவது தேசிய அளவில் 10 சதவிகித மின்னணு கழிவுகளை உற்பத்தி செய்கிறது. 2022ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உற்பத்தி அதிகமாகும்.
தமிழகத்தில் சென்னை அதிகபடியான மின்னனு கழிவுகளை உற்பத்தி செய்கிறது. கோவையில் சுமார் 3ஆயிரம் முதல் 5ஆயிரம் வரை மின்னணு கழிவுகள் ஆண்டுக்கு உற்பத்தி செய்கிறது. மின்னணு கழிவுகள் அரசு அங்கீகாரம் பெற்ற அதாவது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 10 சதவிகிதத்திற்கும் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; ஆனால், மீதம் 90 சதவிகிதம் அமைப்புசாரா முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால், நரம்பு, ரத்தம், கல்லீரல், நுரையீரல், இதையம், தோள் நோய், சுவாச கோளாறு ஆகிய நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு 2கிலோ வரை மின்னணு கழிவுகளை தனி மனிதனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிக எடையிலான மின்னணு கழிவுகளில் செல்போன், கணினி உள்ளிட்ட தகவல் தொடர்புத்துறை சாதனங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டாலும், CFL, FLUORESCENT TUBES அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவைகள் தான் சூழல் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு முக்கிய பங்காற்றுவது.
மெட்ரோ நகரங்களில் தொழில் நிறுவனங்களில் இருந்து எடை அதிகமான மின்னணு கழிவுகளும், தொழில் நிறுவனங்கள் குறிப்பாக தகவல் தொடர்புத்துறை நிறுவனங்கள் குறைவாக உள்ள நகரங்களில் வீடுகளில் இருந்து எடை குறைவான குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான மின்னணு கழிவுகள் சேகரமாவதால், வீடு, தொழில் கூடங்களில் 50சதவிகிதம் என்ற விகிதாச்சாரத்தில் சரியான அளவே மின்னணு கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. ஆனால், நாளுக்கு நாள் மின்னணு பொருட்களின் பயன்பாடு சிறு வயதிலிருந்தே பயன்படுத்தும் சூழல் நிலவுவதால், வீட்டில் சேகரமாகும் மின்னணு கழிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.