1949-ல் அறிஞர் அண்ணா திமுக.வை தொடங்கியதும் அவரே பொதுச்செயலாளராக இருந்தார். ‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியார். அவருக்காக கழகத்தில் தலைவர் பதவி எப்போதும் காலியாக இருக்கும்’ என அறிவித்திருந்தார் அண்ணா. எனவே முழு அதிகாரங்களும் பொதுச்செயலாளர் வசம் இருக்கும்படியாகவே திமுக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அண்ணா மறைந்ததும் கருணாநிதி முதலமைச்சராகவும் தற்காலிக பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பதவி வகித்தனர். அதன்பின்னர்தான் பொதுச்செயலாளர், தலைவர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும், திமுக தலைவராக கருணாநிதியும் தேர்வு செய்யப்பட்டனர்.
கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர் இருந்தபோது அவருக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது. அவர் பிரிந்து அதிமுகவை உருவாக்கியதும் திமுக பொருளாளர் பதவி அன்பழகனுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே நெடுஞ்செழியன் தனிக்கட்சி ஆரம்பித்து பிரிந்து சென்றதும் பொருளாளர் பதவி வகித்து வந்த பேராசிரியர் அன்பழகன், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் பதவியை சிறப்பாக நிர்வகித்ததால் பொதுச்செயலாளர் பதவியை அன்பழகனுக்கு முன்மொழிய கருணாநிதி விரும்பினார். அப்போதைய காலகட்டத்தில் இருந்து இறக்கும் வரையில் திமுக பொதுச்செயலாளராகவே இருந்து மறைந்தார் அன்பழகன். கிட்டத்தட்ட 43 வருடங்கள் அவர் பொதுச் செயலாளர் பதவியில் இருந்துள்ளார்.
இதனிடையே கருணாநிதி மறைவுக்கு பின்னர், தலைவர் பதவியில் அவரது மகன் ஸ்டாலின் அமர்ந்துள்ளார். இதையடுத்து தற்போது திமுகவின் மூத்த தலைவர்கள் வரிசையில் முன்னோடியாக இருப்பது அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன். இதனால் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மார்ச் 29/ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில், தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகியுள்ளார். துரைமுருகன் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
இதனால் திமுக பொருளாளர் பதவிக்கும் மார்ச் 29-ஆம் தேதியே போட்டி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, க.பொன்முடி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.