சினிமா எனும் கலை அது உருவான காலத்தில் இருந்து பல்வேறு பரிணாமங்களை கடந்து தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. ஒரு திரைப்படத்தை எடுக்கும் விதத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், ஒரு காட்சியை உணர்வுபூர்வமாக சொல்லும் திரைமொழியிலும், சமூக ரீதியாக கதைகளை கையாளும் விதத்திலும் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ் சினிமாவும் அத்தகைய மாற்றங்களை கடந்துதான் வந்திருக்கிறது. ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்திற்குள்ளும், வயல்வெளிகளிலும் உலாவ விட்டவர் பாரதிராஜா. அதேபோல், ஒரு காட்சியை சொல்லும் விதத்திலும் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதில் இருந்து குறைவான வசனங்கள் அல்லது மௌன மொழியிலே கதையை சொல்லும் வித்தையையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஒரே கதையம்சம் கொண்ட கர்ணன்(1964), தளபதி(1994) இரண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கர்ணன் படத்தில் சிவாஜியின் நடிப்பும், தளபதி படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பும் முற்றிலும் வேறுபட்டவை. கர்ணன் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் என்பது நாடக பாணியில் இருந்து சினிமா மெல்ல மெல்ல பிரிந்து வந்த காலகட்டம். அப்போது வசனங்கள் பக்கம் பக்கமாகவும் கத்தியும் பேசும் பாணி என்பது இயல்பானது. ஆனால், திரைமொழியில் வித்தகரான மணிரத்னம், ஒளிப்பதிவு இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் உதவியுடன் காட்சிப்படுத்துதலில் புதிய அம்சங்களை நிகழ்த்தி காட்டினார்.
ஏனெனில், சினிமா என்பது விஷூவல் மீடியம் என்று சொல்வார்கள். ஒரு திரைப்படம் என்பது ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டும். அது பிரசாரமாக இருந்தாலும் உணர வைப்பதில் வெற்றிபெற்றால்தான் அது அந்த கலையின் முழு வெற்றியை அடைய முடியும். ஒரு காட்சி எப்படி விஷூவலாக காட்சிப்படுத்தலாம் என்பதற்கு மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் படத்தில் இருந்து ஒரு காட்சியை பார்க்கலாம். சுந்தரவடிவேலு கதாபாத்திரத்தில் விஜயனும், லட்சுமி கதாபாத்திரத்தில் அஸ்வினியும் கணவன், மனைவியாக நடித்திருப்பார்கள். மனைவி மீது அக்கறையே இல்லாத ஒரு கொடுமைக்கார கணவராக விஜயன் இருப்பார். அப்படி இருக்கையில் ஒருநாள் லட்சுமி வீட்டில் வாசப்படியில் உட்கார்ந்திருப்பாள். அப்போது அவளது குழந்தை வந்து ‘அப்பா எல்லோரையும் ரெடியா இருக்க சொன்னாரு எல்லோரும் சினிமாவுக்கு போறமாம்’னு சொல்லும். அவளால் அதனை நம்பவே முடியாது. நம் கணவனா சினிமாவுக்கு கூட்டிட்டு போறனு சொல்லியிருக்காருனு ஒரே பிரமிப்புடன் பார்ப்பாள். இதனை இயக்குநர் மகேந்திரன் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். லட்சுமி வெளியே வந்து வானத்தை பார்ப்பாள். அதாவது கிராமத்தில் நடக்காதது நடந்தால் மழை வரும் போல் என்று கிண்டலாக சொல்வார்கள். லட்சுமி கதாபாத்திரம் ஒரு வார்த்தை கூட பேசியிருக்காது. ஆனால், எல்லாம் நமக்கு புரிந்துவிடும்.
தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் திரைமொழியை பொறுத்தவரை எப்படி கையாண்டிருக்கிறது என்பதை நாம் இங்கு விரிவாக பார்க்கலாம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் இயக்கிய படங்களில் அவர் கையாண்ட திரைமொழி குறித்து சற்றே பின்னோக்கி பார்க்கலாம். அட்டக்கத்தி திரைப்படம் பெரிய அளவில் ரீச் ஆனதற்கு காரணம், படம் சொல்லப்பட்ட விதம்தான். வாழ்வின் ஓட்டங்களோடு கதையை நகர்த்தி, கலகலப்பான உணர்வுகளால் இதயத்திற்கு கிச்சுகிச்சு மூட்டியிருப்பார். மெட்ராஸ் படத்தில் திரைமொழி மிகவும் மிரட்டலாக இருக்கும். சுவரில் வரைப்பட்ட உருவம் ஒன்று போதுமானது எப்படி கதையோடு நம்மை கட்டிப்போட்டது என்று. அதுமட்டுமில்லாமல், தொடக்கத்தில் கதையின் வரலாற்றுப் பின்னணியை அவர் நிறங்களை கொண்டு சொன்னவிதம் அருமையாகவும், புரியும் படியும் இருக்கும். கதையை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருந்தது. படத்தின் அன்புவின் கதாபாத்திரத்தை செதுக்கி இருப்பார்.
கபாலி, காலா படங்களை பொறுத்தவரை திரைமொழியில் ஒரு சிக்கல் இருக்கவே செய்தது. அதுதான் படத்தை முழுமையாக ஒன்றவிடாமல் செய்தது. கபாலியில் ரஜினியின் மாஸான இன்ட்ரோ, கபாலிடா என்ற வசனம், ப்ளாஷ்பேக் காட்சிகள் என தரமான காட்சிகள், பாடல்கள் இருக்கவே செய்தன. ஏன், ரஜினியின் வெள்ளை தாடி கெட்டப்பே அட்டகாசம் தான். படம் முழுக்கவே ரஜினி கெத்தாவே இருப்பார். ஆனாலும், ஏதோ ஒன்று ஆடியன்ஸ் உடன் கனெக்ட் ஆகவில்லை. கபாலியை விட காலா இன்னும் நேர்த்தியான படம் என்பதில் சந்தேகமில்லை. க்ளைமேக்ஸ் காட்சியை அவர் வடிவமைத்த விதம், காலாவும், செரீனாவும் சந்திக்கும் காட்சிகள், காலாவும் ஹரிதாதாவும் சந்திக்கும் காட்சிகள், பின்னணி இசை எல்லாமே நன்றாகவே இருந்தது. ஆனாலும், திரைமொழியில் காட்சிகளை அடுக்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக காட்சிகள் உணர்வுகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்! துண்டிக்கக் கூடாது. காலா படத்தில் அப்படி துண்டித்துவிடும் காட்சிகள் நிறையவே இருந்தது. காலாவின் மனைவி, மகன் இறந்த பிறகு நடக்கும் நினைவேந்தல் நிகழ்வு உட்பட பல காட்சிகள் ஒட்டவில்லை. அதாவது ஒரு கதையின் உணர்வை விட்டு நம்மை வெளியே சென்றுவிடாமல் அதற்குள்ளே கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே சினிமாவின் வெற்றி. கபாலி, காலா படங்களில் திரைமொழியை விட பிரச்சார நடை அதிகமாக இருந்ததாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
கபாலி, காலா படங்களுக்கு பிறகு பா.ரஞ்சித் மீது விமர்சனங்கள் அழுத்தம் கொடுத்திருந்தன. அந்த விமர்சனங்கள் குறித்து அவரே வெளிப்படையாக பல இடங்களில் பேசியிருக்கிறார். பின்னர், அவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. திரைமொழியை பொறுத்தவரை பரியேறும் பெருமாள் பலரையும் ஈர்த்திருந்தது. அந்த கதையின் தன்மையும், முன்வைக்கப்பட்ட கேள்விகளும் பலரது இதயங்களை சென்று சேர்ந்தது. விவாதங்களும் எழுந்தன. பரியேறும் பெருமாளின் வெற்றி பா.ரஞ்சித் மீது கூடுதலாக அழுத்தத்தை கொடுத்தது. அதனால், எல்லோருக்கும் சென்று சேரக்கூடிய, எல்லோரையும் கதையம்சத்தில் ஆட்கொள்ள வைக்கக் கூடிய சினிமாவை எடுக்க வேண்டிய ஒருவித நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
இந்த நேரத்தில்தான், சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்து ‘நான் திரும்பி வந்துட்டேன்’ என்று எல்லோருக்கும் கேட்கும்படி ஓங்கி சொன்னார் பா.ரஞ்சித். உண்மையில் பா.ரஞ்சித் எடுத்த படங்களிலும் கதை சொல்லும் விதத்தில் சார்பட்டா பரம்பரை மிகவும் நுட்பமான தெளிவான படம். ரங்கன் வாத்தியாரை அவர் வடிவமைத்த விதம் மிகவும் அருமை. டான்சிங் ரோஸ், ஜான் விஜயின் ஆங்கிலோ இந்தியன் கெவின் உட்பட படத்தின் எந்த கதாபாத்திரமும் நம்மை விட்டுச் செல்ல நீண்ட நாட்கள் ஆகியிருக்கும். படத்தின் கதை உலகில் நாமும் நீண்ட நாட்கள் பயணித்து இருப்போம். திரைக்கதையின் சுவாரஸ்யமும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். இசை, கலை வேலைப்பாடுகள் என எல்லாவற்றிலும் அசத்தி இருப்பார்கள்.
சார்பாட்டா பரம்பரை படத்திற்கு பிறகு தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ வெளியாகியுள்ளது. திரைமொழியில் இதுவரை அவர் கையாண்ட அத்துனை விதத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏன் தமிழ் சினிமாவுக்கே சற்றே புதிதானது. திரைப்படத்தின் பெரும்பகுதியை உரையாடல்களாலேயே கையாண்டு இருக்கிறார். ஒரு இயக்குநராக தான் சொல்ல நினைத்ததை எவ்வித சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதை உறுதியுடன் அவர் இருந்ததை படம் எடுக்கப்பட்ட விதம் காட்டுகிறது. பெண் கதாபாத்திரத்தை முதன்மை ரோல் ஆகவும், அம்பேத்கரிஸ்ட் ஆகவும் துணிச்சலான கேரக்ட்ராக காட்டியிருப்பதே அந்த உறுதியை காட்டுகிறது. திருநங்கைகள், தன் பாலின ஈர்ப்பாளர், வயது முதிர்ந்தவருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காட்சிகள் என இதுவரை தனித்தனியாக அங்கொன்றும் பேசப்பட்டு வந்ததை மிகவும் வெளிப்படையாக, ஒளிவு மறைவுமின்றி பேசியிருக்கிறார்.
நாம் தொடக்கத்தில் பார்த்தது போல் சினிமா என்பது விஷூவல் மீடியம் என்பதை மறந்து திரும்பவும் நாடக பாணியை ரஞ்சித் கையில் எடுத்திருப்பது எல்லோரும் கதையோடு ஒன்றுவதற்கு வாய்ப்பு குறைவு. படத்தில் எந்நேரமும் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அர்ஜூன் கதாபாத்திரம் (கலையரசன்) ஊரில் நடக்கும் காட்சிகள் வரும் போது மட்டுமே நாம் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது. மற்றநேரங்களில் நேரடியாக அவர்களோடு இருப்பது போல் இருக்கிறது. அப்படி நேரடியாக இருப்பதால் குறிப்பிட்ட நேரங்களுக்கு பின் நம்மால் படத்தோடு ஒன்ற முடியாமல் போய்விடுகிறது. படத்தில் அழகுணர்ச்சியான காட்சிகள் இல்லாமல் இல்லை. நட்சத்திரங்களையும், அதன் அழகையும் காட்சிப்படுத்திய விதம் கொஞ்சம் மேஜிக்கல் மொமண்ட் தான். சில இடங்களில் அவர்கள் நடித்துக்காட்டும் காட்சிகளில் ரெனே - இனியன் இடையிலான கெமிஸ்ட்ரி அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தில் அர்ஜூன் கதாபாத்திரம் மட்டும் மிகவும் இயல்பாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் மட்டும் நம்முடன் அதிக அளவில் கனெட் ஆகிறது. அவர் மனமாற்றம் அடைந்த பிறகு சற்றே தடுமாற்றம் இருக்கிறது. ஏனெனில் மனமாற்றம் திடீரென நடப்பதுபோல் இருக்கிறது. ஆவணப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கீழே குனிந்து கண்கலங்குவதை காட்சிப்படுத்தி இருந்தாலும் இன்னும் உணர்வு ரீதியான மாற்றத்திற்கு கூடுதல் காட்சிகளை வைத்து இருக்கலாம்.
படம் தொடங்கி முதல் கதைக்குள் நாம் ஒன்றுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. படத்தில் பேசப்படும் விஷயங்கள் புதியவை. அவற்றை நாம் அசைபோட கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதை எப்படி இயக்குநர் மறந்தார்? எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொண்டு கண்முன்னே நிறுத்திவிட்டு இதுதான் ரியாலிட்டி ஒத்துக்கோ என நம்மிடம் சொல்கிறார். க்ளைமேக்ஸ் காட்சிகளும் அப்படித்தான். திடீரென கடைசியில் அறிமுகம் ஆகும் அந்த கதாபாத்திரத்தை உணரவைப்பதற்கு கூடுதலாக ஏதேனும் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது நம்மை படத்தை விட்டு துண்டித்துவிடுகிறது. இன்விசிபிளான ஒரு உளவியலை, கலாச்சாரத்தின் அதிகார தொனியை, மெட்டாபர் தன்மையுடன் உள்ள ஒன்றை ஒரு உருவகத்தில் கொண்டு வரும் போதும் இன்னமுமே சினிமாட்டிக்காக காட்சிப்படுத்தியிருக்கலாம். அந்த கதாபாத்திரத்திடம் அடி வாங்குபவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழிப்பது போல் பார்வையாளர்களாகிய நாமும் விழிபிதுங்க வேண்டியிருக்கிறது.
வெறுமனே குறிப்பிட்ட சில பேருக்கு படம் எடுக்கப்படும் நாடகத்தின் தன்மை என்பது வேறு. சினிமா என்பது லட்சக்கணக்கான மக்களை சென்று சேரும் ஒரு மீடியம். அந்த மீடியத்தில் கதை சொல்லும் போது இந்த பாணி முற்றிலும் பின்னோக்கியதே. டார்கெட்டடு ஆடியன்ஸ் தான் என இயக்குநர் முடிவு எடுத்து இப்படி படத்தை உருவாகியிருந்தால் அவரைப் பொறுத்தவரை அந்த முடிவு சரியானதே. ஆனால், பொதுவான ஒரு ஆடியன்ஸ்க்கு படத்தை உணர்வுபூர்வமாக உள்வாங்கவே தயாராக இருப்பான். மூளையையும், இதயத்தையும் ஒருசேர ஆக்கிரமிக்க வேண்டும். புத்தகங்கள் படித்துவிட்டு, சிந்தனை ரீதியான உரையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு விவாத மெட்டீரியல். ஆனால், மற்றவர்களுக்கு?!
சார்பாட்டா பரம்பரை படம் எடுத்தப்பின் எப்படி இப்படியொரு திரைமொழியில் படம் எடுக்க அவர் முடிவெடுத்தார் என தெரியவில்லை. கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற வித்தையை அவர் கற்றிருக்கிறார். ஆனால், அவரது சோதனை முயற்சியில் நம்மை சிக்கவைத்துவிட்டார்.