”பால்ய விவாகம், தேவதாசி முறை ஒழிப்பு..” சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

”பால்ய விவாகம், தேவதாசி முறை ஒழிப்பு..” சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
”பால்ய விவாகம், தேவதாசி முறை  ஒழிப்பு..” சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
Published on

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அது தோற்றுப் போகிறது. சட்டமன்றத்திலும் கூட தேவதாசி முறையை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அந்த மசோதாவுக்குப் போதிய ஆதரவில்லை. முன்னர் பால்ய விவாகத் தடை கோரியபோதும் இதே எதிர்ப்பு இருந்தது. இவையெல்லாம் அன்று மிகப் பெரிய சம்பிரதாய மீறல்கள்... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரும் பின்னாளில் முத்துலட்சுமி ரெட்டியைப் போற்றிப் பாடினார்கள். அதைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியே சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி உரையாற்றினார். பால்ய விவாகத் தடைச் சட்டத்தை வரவேற்றவர்கள் கூட, தேவதாசி ஒழிப்பை ஏற்க மறுக்கிறார்கள் என்று மனம் கசந்து பேசினார். ஏனென்றால் அம்மசோதாவை அமல்படுத்த முடியாமல் அது தோல்வி அடைந்துகொண்டே இருந்தது.

1912ல் அப்போதைய இந்திய சட்டமன்றத்தில் தாதாபாய் இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது அதை முன் நகர்த்திக் கொண்டுபோகவே ஓராண்டு ஆயிற்று. 1914ல் அதை அமல்படுத்த முயலும்போது முதல் உலகப் போர் மூளுகிறது. போரின் காரணமாக இயல்பாகவே மீண்டும் அது தள்ளி வைக்கப்பட்டது. 1925ல் முத்துலட்சுமி ரெட்டி மதராஸ் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகிறார். அதன் பிறகு 1927ல் மீண்டும் முயற்சி செய்கிறார். இதை ஒரு நீண்ட நெடிய போராட்டமாகவே நடத்தியிருக்கிறார். ஏன் இந்த மசோதா மட்டும் நிறைவேறாமல் நீண்டுகொண்டே போகிறது என ஆராயும் விதமாக முத்துலட்சுமி ரெட்டி, பெரியாரிடம் இது குறித்துக் கருத்து கேட்கிறார்.

பெரியாரும் ’எனக்கும் தேவதாசியர் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி தெளிவாகத் தெரியவில்லை; எங்கள் இயக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் என்ற பெண்மணி இருக்கிறார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்கிறார். அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. அப்போது முத்துலட்சுமி ரெட்டி சொல்கிறார்: “எனக்கு தேவதாசிகள் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியவில்லை” என்று. முத்துலட்சுமி ரெட்டியின் தாயார் சந்திரம்மா தேவதாசி குலத்தில் பிறந்தவர். ஆனால் அவருடைய தகப்பனார் நாராயணசாமி ஒரு பிராமணர் . அதனால், தேவதாசிகள் குடும்ப நடைமுறை, வாழ்க்கைச்சூழல் பற்றிய புரிதல் எதுவும் முத்துலட்சுமி வளர்ந்த சூழலில் இல்லை.

இந்தப் பெண்கள் இருவரும் சந்தித்துப் பேசும்போதுதான் தேவதாசி முறையிலுள்ள நடைமுறைகள் பற்றி முத்துலட்சுமியால் தெளிவடைய முடிகிறது. அதுவரை நகர்ப்புறப் பகுதிகளில்தான் தேவதாசி முறை தீவிரமாக இருக்கிறதென்று முத்துலட்சுமி ரெட்டி எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், கிராமப்புறங்களில் குறிப்பாக உள்ளடங்கிய கிராமங்கள், குக்கிராமங்கள் இங்கெல்லாம் தேவதாசி முறை மிக மோசமான நிலையில் இருந்தது. பாலியல் தொழிலை மேற்கொண்டுதான் அங்கிருந்த பெண்கள் வாழ்க்கை நடத்தினார்கள். அனைத்துக் கோயில் தேவதாசிகளும் வசதியானவர்களாக இல்லை. அவர்களுக்குக் கோயில் ஊழியத்தின் மூலம் மானியம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்திலிருந்து உணவுக்காக நெல் படியளக்கப்பட்டது. தங்குவதற்கு வீடு கொடுக்கப்பட்டிருந்தது. பாலியல் தொழில் மூலமாக ஜமீன்தார்களுக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் ஆசை நாயகிகளாக, வைப்பாட்டிகளாக அவர்கள் இருந்தார்கள். அதன் மூலமாக அவர்கள் வருமானம் பெற்றார்கள்.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் கோயில் நிலத்திலிருந்து நெல் வராது. வீடும் கோயில் வசமாகும். மூவலூர் ராமாமிர்தம் சில ஆலோசனைகளை முத்துலட்சுமி ரெட்டிக்குத் தெரிவித்தார். பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெற்றால்தான் ஒரு பெண் துணிச்சலாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும். இது தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தும் நடைபெற்றிருக்கிறது. தேவதாசி முறை கிராமப்புறங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து என்பது மிக முக்கியமானது.

கிராமப்புறங்களில் இருக்கும் தேவதாசிப் பெண்கள் பொருளாதார வசதி இல்லாததனால்தான் தேவதாசி மசோதாவை எதிர்க்கிறார்கள். அவர்கள் ஆதரவைப் பெற வேண்டுமெனில் கோயில் நிலங்கள், மானிய நிலங்களாக இருப்பவற்றை அவர்களுக்கே உரிமையாக்கி அளிப்பது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதான நிலங்கள் எனச் சொல்லப்பட்டவை. கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்கள் தேவதான நிலங்களாக ஏராளம் இருந்தன. அதில் விவசாயம் செய்யப்படும் நிலங்களும் உண்டு; வெற்றிடங்களும் உண்டு. ’தேவதாசிப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே சாசனம் செய்து கொடுத்து விடுங்கள்’ என்று மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சொன்ன ஆலோசனையை ஏற்று, முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்திலும் பேசுகிறார்.

1929ல் சட்டமன்றத்தில் தேவதாசி தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டும் அவ்வளவு எளிதாக நடைமுறைக்கு வரவில்லை. அதன் பிறகு 1937ல் முதலமைச்சர் ராஜாஜி இதற்கு ஆதரவில்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கிறார். இதற்கு முன்னதாக 1910ல் மைசூர் சமஸ்தானத்தில் தேவதாசி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாகத் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது மைசூர் சமஸ்தானத்தில்தான். அதன் பின்னர் கொச்சியிலும் இறுதியாக சென்னை ராஜதானியிலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. முதலில் இங்குதான் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால், மசோதா தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டதால் அவர்கள் முந்திக் கொண்டார்கள். மைசூரும் கொச்சியும் இந்த விஷயத்தில் நமக்கு முன்னோடிகள். அப்போது ராஜாஜி காங்கிரசில் இருந்தபோதும், பெரும் பாலானவர்களின் எதிர்ப்பினால் தேவதாசி நடைமுறையை ஒழிப்பதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனால் ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தார். அவருடைய அரசு ராஜினாமா செய்த பிறகு 1947ல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகுதான் தேவதாசி ஒழிப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஒரு ஷரத்தும் சேர்க்கப்பட்டது. இதுவரை தேவதாசிப் பெண்கள் அவர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலத்தையும் வீட்டையும் அவர்களே சொந்தமாக அனுபவித்துக் கொள்ளலாம். எந்தப் பணி செய்வதற்கென்றும் அவர்கள் இனி கோயிலுக்கு வர வேண்டாம் என்று சட்டத்தில் கடைசியாக ஒரு வரியைச் சேர்க்கிறது. ’கோயிலுக்கு இறைவனை வணங்க மட்டும் வாருங்கள், ஆனால் கோயிலுக்குச் சேவை செய்கிறோம் என்கிற பெயரில் கடவுளுக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அடிமையாக இருக்க வேண்டாம்’ என்று சொல்லி அந்தச் சட்டம் நிறைவு பெறுகிறது.

 மூவலூர் ராமாமிர்தம் பற்றி தன் சுயசரிதையில் குறிப்பிடாமல் அவரைப் புறக்கணித்ததன் பேரில் முத்துலட்சுமி ரெட்டியின் மீது வருத்தம் இருந்தாலும், பால்ய விவாகத் தடைச் சட்டம், அடையாறு புற்று நோய் மருத்துவமனை, ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லம் இவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு உண்டு.

பா.ஜீவசுந்தரி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com