ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்; தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசியுள்ளார்
வேலூர் ஒன்றியம் கேவி குப்பம் நகரில் பொதுமக்கள் பூங்கா, மகாத்மா காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடந்தது. ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட நிர்வாகி கேவி பாஸ்கர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பூங்காவை ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட் காலையில் திறந்துவைத்தார். மாலையில் காந்தி சிலை மற்றும் பேருந்து நிறுத்தத்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திறந்து வைத்தார். பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தமிழருவி மணியன் பேசினார்.
அப்போது அவர்,“ரஜினிகாந்தின் ரசிகர்கள் சேர்ந்து மகாத்மா காந்தியின் சிலையை புனரமைப்பார்கள் என்று யாராவது ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். ரஜினி ரசிகர்களுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் காலத்தால் மறக்கடிக்கப்படுகிற உத்தம மனிதனை, இந்தத் தேசத்துக்காகவே தன் வாழ்வையே வேள்வியாக்கிக் கொண்டு, இந்த மண்ணில் இருக்கும் அத்தனைப் பேரும் சாதி, மதம் கடந்து ஒன்றாக நிற்க வேண்டும் என்பதையே தன் வாழ்வின் தவமாகக் கருதிய மாமனிதனை படுகொலை செய்த பிறகு, இந்த மண்ணில் இருக்கிற மக்கள் காந்திய வழியில் நடப்பார்கள் என்ற நம்பிக்கை முற்றாகத் தகர்ந்துவிட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் கொண்டாடுகிற ரஜினியின் ரசிகரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் காந்தி சிலையைப் புனரமைத்திருப்பதை நான் உள்ளம் திறந்து பாராட்டுகிறேன்.
ரஜினிகாந்த் அவர்களை முதல்முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் போனேன். அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன். அடுத்து அடுத்து அவரை நான் சந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டே இருக்கிறேன். என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது.
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று. மலேசிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார்: "ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல" என்றார்.
அபூர்வ ராகங்கள், பதினாறு வயதினிலேவில் அவர் வெறும் நடிகர். பல நடிகர்களில் ஒருவர். அடுத்த மெல்ல மெல்ல வளர்ந்து, தனது போட்டியாளர்கள் அனைவரையும் கடந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார். ஒரு நடிகனாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கக் கூடிய மனிதனுக்கு அதுதான் உச்சம். அதுவே போதும். ஆனால் அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நடக்க வேண்டும் என்று நினைக்கிற போதுதான், சூப்பர் ஸ்டார் என்கிற இடத்திலே இருந்து அடுத்த இடம் நோக்கி நகர்கிறார். அதுதான் தமிழகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு தருகிற முதல்வர் என்கிற இடம். அந்த இடத்தை நோக்கி அவர் நடக்க வேண்டும், அவர் அப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்க' என்று சொல்வதை நிறுத்திவிட்டு, 'தமிழக முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க' என்று சொல்லிப் பழகுங்கள்.
நான் காமராஜர் காலடியில் அரசியல் கற்றவன். என் வாழ்வின் இறுதி நாள் வரை பெருந்தலைவர் காமராஜரின் லட்சியத்திலே உறுதியாக இருப்பேன். அவர் லட்சியத்தை நிறைவேற்றுவேன். இது அவர் காலடியில் நான் எடுத்த சத்தியம். காமராஜர் வாழ்ந்த இறுதிக் காலம் வரை சொன்னது, 'இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்'. தமிழகம் நல்வாழ்வு பெற வேண்டும் என்றால் இரண்டு கழகங்களையும் முற்றாக தூக்கி எறிய வேண்டும். இதுதான் என் தவம். இந்தத் தவத்தை நிறைவேற்ற கடைசியில் எனக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைதான் ரஜினிகாந்த்.
சிஸ்டம் கெட்டுவிட்டது என்றார் ரஜினி. எத்தனைப் பொருள்மிக்க, அர்த்தமிக்க வார்த்தை அது. இந்த மாநிலத்தை ஆண்ட இரு கழகங்களின் ஒட்டுமொத்த ஊழல்களையும் சீர்கேடுகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார். என் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போதே ஓடிவிடுங்கள் என்று பகிரங்கமாகச் சொன்னார் ரஜினி. தமிழக அரசியல் சரித்திரத்தில் எந்தத் தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்? ரஜினிகாந்த் ஒருவரால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது.
திரும்பத் திரும்ப சிலர் சொல்வது... ரஜினிகாந்த் வெறும் நடிகர்...அவருக்கு என்ன தெரியும் என்று. இப்படிச் சொல்பவர்கள் யார் தெரியுமா... எம்ஜிஆர் என்ற நடிகரின் பின்னால் நின்று கொண்டாடியவர்கள்... ஜெயலலிதா என்ற நடிகைக்குப் பின்னால் இருந்துகொண்டு சம்பாதித்துக் கொழுத்தவர்கள். அறிஞர் அண்ணா அவர்களே, எம்ஜிஆர் முகத்தைக் காட்டி, இதயக்கனி என்று சொல்லித்தானே திமுகவை வளர்த்தார்.
தமிழகத்தில் இப்போது நடப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினிகாந்த் மனதில் யார் மீதும் வெறுப்பே கிடையாது. அன்பு அன்பு அன்பு... அவர் மனசு முழுக்க அன்புதான். அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் பாராட்டுகிறார். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அன்பு சார் அரசியலை தமிழகத்தில் வளர்த்தெடுக்க விரும்புகிறார் ரஜினி.
அதேபோல, போட்டிக்கு பதில், ஒத்துழைப்பு அரசியலை அவர் முன்னெடுக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று அரசியலை அவர் முன் வைக்கிறார். ஒருவனை விமர்சித்தால்தான் தனக்கு வாழ்வு என நினைக்கிறார்களே... அவர்கள் முன்னெடுப்பது வெறுப்பரசியல். ஆனால் ரஜினி முன்வைப்பது அன்பு ததும்பும் மாற்று அரசியல்.
சுயநலத்துக்கு மாற்றாக பொது நலத்தை முன் வைத்துள்ளார் ரஜினி. அவர் என்னிடம் ஒரு முறை சொன்னார்: “அய்யா நான் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு வந்தபோது, பட வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, மவுன்ட்ரோடு எல்ஐசிக்கு எதிரில் ப்ளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தவன். நான் அங்கிருந்துதான் புறப்பட்டேன். இன்று எனக்கு வந்திருக்கிற கவுரவம், செல்வம் அனைத்துமே இந்தத் தமிழ் மக்கள் கொடுத்தது. இந்த மக்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்தாக வேண்டும். ஒரு திருமண மண்டபம் கட்டி சில இலவசத் திருமணங்களைச் செய்தால் போதாது... இந்தத் தமிழகத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்," என்றார் தமிழருவி மணியன்.