ஒமைக்ரான் பரவல் தொடர்பான விவாதங்களும் அச்சமும் மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துவரும் நிலையில், அது சார்ந்த பல்வேறு கேள்விகளும் எல்லோர் மனதிலும் நிலவி வருகிறது. தற்போதைக்கு ஒமைக்ரான் தொடர்பாக நமக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களுமே தொடக்க நிலையில்தான் உள்ளதென்பதால், மனதில் தோன்றும் பல கேள்விகளுக்கு இன்னமும் அறிவியல் ரீதியான உரிய பதில் கிடைக்காமல் உள்ளது. இப்போதைக்கு ஒமைக்ரான் திரிபு கொரோனா, பல பிறழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது மட்டுமே நமக்கு தெரியவந்துள்ளது. அதுவும் எத்தனை பிறழ்வுகள் என்பது சரியாக தெரியவில்லை. 30-க்கும் மேற்பட்ட பிறழ்வு என்று, கணிப்பின்பேரிலேயே சொல்லப்படுகிறது. இக்காரணங்களையெல்லாம் கருத்தில்கொண்டே உலக சுகாதார நிறுவனமும், இதை கவலை கொள்ளவேண்டிய திரிபு என்ற பட்டியலின்கீழ் கொண்டு வந்தது.
என்னதான் உலக சுகாதார நிறுவனம் இத்திரிபை ‘கவலை கொள்ள வேண்டியவை’ என பட்டியலிட்டாலும், தென் ஆப்ரிக்காவின் மருத்துவ கழகத்தில் தலைமை மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி, "உலகம் இந்த ஒமைக்ரானை பார்ப்பது போல நிதர்சனம் இல்லை. இங்கு நிலைமை வேறாக உள்ளது. உலகின் பார்வை இதில் மாறவேண்டும், மாறுமென்று நம்புகிறோம். ஒமைக்ரான் வைரஸை கண்டு பயம்கொள்ள வேண்டியதில்லை. இந்த பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு உடல்சோர்வு, உடல் வலி, கடுமையான தலைவலி போன்றவைதான் அறிகுறிகளாக இருக்கிறது. வாசனையின்மை, கடுமையான காய்ச்சல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.
தென் ஆப்ரிக்க மருத்துவரின் இந்தக் கூற்று, கொரோனா முடிவுக்கு வருவதை காட்டுவதாக சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஆங்கிலதளமொன்றில் கட்டுரையெழுதியிருந்த கிரிஃபித் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ஹமிஷ், அதில் அவரைப்போலவே பல மருத்துவ நிபுணர்கள் ஒமைக்ரான் திரிபு, கொரோனாவின் முடிவை நோக்கியதாக இருக்கும் என்று கருவதாக தெரிவித்துள்ளார்.
1) பயண வழியில் பாதிப்பு நாட்டுக்குள் வருவது (Imported cases)
2) அவரிடமிருந்து, உடனிருப்போருக்கு நோய் பரவுவது (Local Transmission).
3) அடுத்தடுத்து நோய் பல நபர்களுக்கு அதைப் பரப்புவது (Community Transmission).
4) குறிப்பிட்ட பகுதி முழுவதும் நோய் தீவிரமாகப் பரவுவது (Epidemic).
5) இப்படி பரவும் நோய், மிகத் தீவிரமாய் ஒரு மாநிலம் முழுக்கவோ - ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கோ / ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ முழுவதுமாகப் பரவினால், அப்போது உலகளாவிய மிகத்தீவிரமான பெருந்தொற்று நோய் ஏற்படும் (Pandemic).
கொரோனா Pandemic என்று அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் மேற்கூறியவற்றை ஒப்பிட்டுப்பார்த்தால், நம்மால் இதை புரிந்துக்கொள்ளமுடியும். கடந்தகாலத்தில் கொரோனாவை போல பெருந்தொற்று நோய்களாக இருந்த பெரியம்மை, எய்ட்ஸ், ப்ளேக் நோய், ப்ளூ, காலரா உள்ளிட்டவற்றின் வரலாற்றை ஆராய்ந்தோம். குறிப்பாக அவை எப்படி முடிவுக்கு வந்தன என்பதை ஆராய்ந்தோம். அப்போது இவையனைத்துமே, கொரோனாவை போலவே ‘வைரஸ்’ வகை தொற்று என்பது தெரியவந்தது. போலவே அவையாவும், ஒருகாலகட்டத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவந்தன. ஆனால் காலப்போக்கில் அதன் தன்மையும் தீவிரத்தன்மையும் குறைந்துவிட்டது. இதை ‘வைரஸ் தனது தன்மையை குறைத்துக்கொள்கிறது’ என்றும் கூறலாம் அல்லது ‘நாள்படுகையில் மனித உடல் அந்த வைரஸூக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தானாக உருவாக்கிக்கொள்கிறது’ என்றும் கூறலாம். இந்த இடத்தில், “அதெப்படிங்க தானாகவே வைரஸூக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?” என்று நாம் நினைக்கலாம். இதை ‘குழு நோய் எதிர்ப்பு சக்தி’ என்று மருத்துவத்தில் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் ஹெர்டு இம்யூனிட்டி (Herd Immunity) என்று இது குறிப்பிடப்படும்.
அதென்ன ஹெர்டு இம்யூனிட்டி?... மனித உடலில் நோய்த்தடுப்புக்கு ஆன்டிபாடி என்றொரு விஷயம் இருக்கும். இந்த ஆன்டிபாடிதான், உடலுக்கு எதிரான வைரஸை அழிக்கும். ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு ஆன்டிபாடி இருக்கும். இந்த ஆன்டிபாடி உருவாக, இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இயற்கை; மற்றொன்று செயற்கை. இயற்கையாக உருவாக, சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த நோய்ப்பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; பின் அவர் அதிலிருந்து மீள வேண்டும். செயற்கையாக உருவாக, தடுப்பூசிதான் வழி; தடுப்பூசி மூலம் அவை உடலுக்குள் செலுத்தப்படும். இந்த இரண்டு விதங்களில் ஏதாவதொரு வகையில், பெரும்பாலானோர் ‘குறிப்பிட்ட அந்த ஒரு வைரஸூக்கு’ எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவர். அந்த பெரும்பான்மையினர், தாங்களும் வைரஸுக்கு எதிராகி - தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் தற்காப்பார்கள்.
இப்படி பெரும்பான்மை மக்கள் வைரஸூக்கு எதிரான ஆன்டிபாடியை பெறுகையில், அவர்கள் உடலில் அந்த வைரஸின் எத்தனை திரிபுகள் உள்நுழைந்தாலும் அவர்களின் உடல் தனது அதிகபட்ச திறனை வெளிப்படுத்தி, அவர்களை காத்துவிடும். அவர்கள் தற்காக்கப்படுகையில், அவர்களிடமிருந்து வைரஸ் பரவும் விகிதமும் (R number) குறையும். பரவும் விகிதம் குறைகையில், அங்கு நோய் பாதிப்பு ஏற்படாது. நாளடைவில், பரவல் தானாக வலுவிழந்து முடிவுக்கு வந்துவிடும்.
இந்த ஹெர்டு இம்யூனிட்டி கோட்பாட்டின் கீழ், நாம் (உலகம்) முடிவுக்கு வந்த மிக முக்கியமான பெருந்தொற்று - ‘போலியோ’. போலியோ, ஒரு நேரத்தில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், அதை ஒழித்ததில் தடுப்பூசியின் பங்கு மிக அதிகமாக இருந்தது. ஒருகட்டத்தில் (தற்போது) அதன் தாக்கம் வலுவிழந்து விட்டது. அதனால் பல குழந்தைகள் இன்றளவும் காக்கப்பட்டுவருகின்றனர். அதற்காக நாம் போலியோ தடுப்பூசியை விட்டுவிடவில்லை. இன்றும் அதை பின்பற்றுகிறோம்.
இந்த ‘ஹெர்டு இம்யூனிட்டி’ கோட்பாட்டின்கீழ்தான், தற்போது கொரோனாவும் பல நாடுகளில் வலுவிழந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைக்குறிப்பிட்டு, “தென் ஆப்ரிக்காவில், 25% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அங்கு இந்த வைரஸ் பரவும் விகிதம் அதிகமாக இருக்கக்கூடும்தான். ஆனால் அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுள்ள இடங்களில், பரவும் விகிதம் ஓரளவு தடுக்கப்படும். அப்படியே பரவினாலும், தீவிர பாதிப்பு தடுக்கப்படும். ஆகவே அங்கெல்லாம் இது கட்டுக்குள் வரும் சூழலும் உள்ளது” என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பூசி மட்டுமன்றி இயற்கையாக உருவான ஆன்டிபாடிகளையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. இதன்படி பார்த்தால், தென் ஆப்ரிக்காவில் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தனர். ஆகவே அங்கு தீவிர பாதிப்பு ஏற்படும் சூழலும் வரும்நாள்களில் ஏற்படக்கூடும். இப்போதைக்கு அனைத்துமே தொடக்க நிலையில்தான் உள்ளதென்பதால் வரும்நாள்களில்தான் இது தெரியவரும். எப்படியோ, ஏதோவொரு வகையில் நோய் பரவலோ அல்லது பாதித்தப்பின்னர் ஏற்படும் தீவிர பாதிப்போ தடுக்கப்படும். இதில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது, எந்தளவுக்கு அடுத்தமுறை நமக்கு உதவும் என்பதற்கு சான்று இல்லை. அதனால் மருத்துவர்கள் தடுப்பூசியையே அதிகம் பரிந்துரைக்கின்றனர்.
இப்படியாக இயற்கையாகவோ செயற்கையாகவோ நோய்ப்பரவலையும் - பின் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் தடுக்கும்போது என்பதால், நோய் குறிப்பிட்ட இடங்களுக்குள் முடிவுக்கு பரவிவந்துவிடும். அப்படி நோய் முடிவுக்கு வருகையில், அது ‘எபிடெமிக்’ என்ற நிலையிலேயே முடிந்துவிடும். அதாவது குறிப்பிட்ட பகுதிக்குள் நோய் பரவுவது - பின் பரவ வழியன்றி நோய் முடிவுக்கு வருவது. (போலியோவுடன் தொடர்பு படுத்தி பார்க்கையில் இதுபுரியும்)
தற்போது வழக்கத்திலுள்ள தடுப்பூசிகள், இந்த ஒமைக்ரான் திரிபுக்கு எதிராக செயல்படுகிறதா இல்லையா என்பது இப்போது வரை தெரியவில்லை என்பது நாம் இங்கு கவனிக்கத்தக்கது. ஒருவேளை வரும்நாள்களில் ‘இந்த திரிபு தடுப்பூசிக்கு எதிராக செயல்படாது / குறைந்தளவே செயல்படும்’ என தெரியவந்தால், அப்போதும் இயற்கையாக நம் உடலில் உருவான ஆன்டிபாடி (ஏற்கெனவே பலர் பாதிக்கப்பட்டு - மீண்ட நாடுகளில், மீண்டு வந்தவர் உடலில் இயற்கையாக உருவாகியிருக்கும் ஆன்டிபாடிகள்) நம்மை காக்கும். ஆகவே எந்தப்பக்கம் இதை யோசித்துப்பார்த்தாலும், நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை என்றே சொல்கின்றனர் மருத்துவர்கள். நம்பிக்கை தரும் வகையில், “இந்த ஒமைக்ரோன் திரிபு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மிக குறைந்த வகையிலான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது” என்று தென் ஆப்ரிக்க மருத்துவர் ஏஞ்சலிக்கேவும் இதை குறிப்பிட்டிருப்பதை நாம் இங்கு நினைவு கூறலாம்.
இங்கு இந்த ஒமைக்ரான் திரிபு பல பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பல பிறழ்வுகளை ஒரு வைரஸ் பெருகையில், அது பன்மடங்காகும் தன்மையும் அதிகமிருக்கும் என்பது அறிவியல் சொல்லும்விஷயம். அப்படி பார்க்கையில், ஒருவருக்கு ஒமைக்ரான் ஏற்பட்டால், அவருடைய உடலில் அவை பன்மடங்காகி, வெளியில் பரவும் திறனும் அதிகமாகவே இருக்கும். இதை குறிப்பிட்டுதான், ‘ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது’ என்று பலரும் சொல்கின்றனர். இருப்பினும், ஒமைக்ரான் எவ்வளவு வேகமாக பன்மடங்காகிறது என்பதும் இப்போதுவரை தெரியவரவில்லை. ஆகவே இப்போதைக்கு அதுசார்ந்த எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், அச்சம் கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வரும் நாள்களில், ஒமைக்ரானின் பரவல் விகிதம் - பரவல் வேகம் உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு, பின்னர் அவை எந்தளவுக்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது - தடுப்பூசி / இயற்கையாக உடலிலுள்ள கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிக்கு எதிராக செயல்படுகிறது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய இருக்கின்றனர். இந்த புதிய மாறுபாட்டின் தோற்றம், கோவிட்-19 தொற்றுநோயைக் கடக்க உலகளாவிய தடுப்பூசி முயற்சி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. இப்போதைக்கு, இது (கொரோனா) எபிடெமிக்காக மாறும் சூழல் அதிகமுள்ளதாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம், வைரஸூம் அதன் தன்மையை இயல்பிலேயே சற்று இழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ஒமைக்ரான் என்பது வலுவிழந்த கொரோனா போல காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. தீவிர பாதிப்புகளை இது ஏற்படுத்தவில்லை என்பதை குறிப்பிட்டு, மருத்துவர்கள் இதை குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ, இது கொரோனாவுக்கான முடிவின் தொடக்கமாக இருந்தால், மகிழ்ச்சியே!
தகவல் உறுதுணை: TheConversation, TimesNowNews