தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா?- சந்தேகப் பின்புலமும் அதிர்வு கேள்விகளும்

தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா?- சந்தேகப் பின்புலமும் அதிர்வு கேள்விகளும்
தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா?- சந்தேகப் பின்புலமும் அதிர்வு கேள்விகளும்
Published on

‘இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகின்றன’ என்கின்ற புகார்கள், நெடுங்காலமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர்கூட, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகின்றன’ எனக்கூறியிருந்தார். உண்மையில், இங்கு நிலவரம் என்ன? ஏன் இந்த சந்தேகம் எழுகிறது? கொரோனா மரணம் மறைக்கப்படுவதால், என்னென்ன பிரச்னைகள் வரும்? இங்கு, விரிவாக பார்க்கலாம்.

கொரோனா மரணம் மறைக்கப்படுவதன் பின்னணியில், சொல்லப்படும் முக்கிய காரணங்களாக, ‘இறப்பு சான்றிதழில், இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. மருத்துவமனைகள் தரும் நோயாளி விளக்கத்திலும், இணை நோய்களின் பெயரில் அவர்களின் இறப்பு ஒதுக்கப்பட்டு விடுகிறது’ என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறு, இரண்டு பொதுநல மனுக்கள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தன. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “கொரோனா காலத்தில் உயிரிழந்த இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சான்றிதகளை, நிபுணர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவால் நிகழும் மரணங்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. அது சீரமைக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டது.

ஆனால் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனோ, “தமிழகத்தில், கொரோனா மரணம் குறைந்து வருகிறது. எந்த ஒளிவு மறைவுமின்றி இறப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன” எனக்கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தை சேர்ந்த, செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம். அவர் இதுபற்றி நம்மிடையே பேசுகையில், “கொரோனா மரணத்தை எப்படி நிர்ணயிப்பது என்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் சில வழிமுறைகளை பதிவிட்டுள்ளது. அதன்படி, ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அவர் ஏற்கெனவே ஆர்.டி.பி.சி.ஆர் பாசிடிவ் என்று வந்தவரா என்பது பார்க்கப்பட வேண்டும். அப்படி இருந்தால், அவருக்கு கொரோனா இறப்பு இருக்கிறது.

ஒருவேளை குறிப்பிட்ட நபருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவந்து – கொரோனா நெகடிவ் என்று அவருக்கு இருந்தால், அந்நபர் மருத்துவ ரீதியாக கொரோனா இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய நபராக (clinically susceptible) கருதப்படுவார். இப்படியானவர் இறக்கும்போது, அது கொரோனா மரணமாக ஏற்கப்படுவதில்லை.

இதுவே, ஒரு நபர் தொற்றுநோய் அறிகுறிகளால் சந்தேகத்துக்குரிய நபராக இருந்து (Epidemiologically susceptible), சிகிச்சையில் இருந்து இறந்திருக்கிறார் என்றால், அதுவும் கொரோனா மரணமாக கருத்தப்படுவதில்லை.

இந்த மூன்றும் இல்லாமல், வேறு ஏதேனும் பாதிப்பு அல்லது விபத்தால் இருந்தவர்களும் பட்டியலில் வர மாட்டார்கள். இதுவே உலக சுகாதார நிறுவனம் சொல்லும் தகவல்.

இதில், முதல் வகை மட்டுமே இப்போது கொரோனா மரணமாக பார்க்கப்படுகிறது. அதுதான் சிக்கல். இறக்கும் தருவாயில்கூட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆகவே மேற்கூறிய மூன்று தரப்பினருக்கும், அதாவது கொரோனா சிகிச்சைக்கு உட்பட்டு இறந்தவர்கள், கொரோனா சந்தேகத்தின்பேரில் சிகிச்சையிலிருந்து இறந்தவர்கள் ஆகியோருக்கு இறந்தபிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். அதனடிப்படையில், இறப்பு சான்றிதழில் மரணத்துக்கான காரணம் வழங்கப்பட வேண்டும். ஒருவேளை, இறந்தபிறகு செய்யப்படும் கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என வந்தாலும்கூட, அந்நபர் எதனால் இறந்தார் என்பதற்கான ‘மரணத்துக்கான காரணம்’ அச்சான்றிதழில் சொல்லப்பட வேண்டும். கொரோனாவின் தாக்கத்தால், கொரோனாவின் நீட்சியால்தான் அந்த மரணம் நிகழ்ந்திருக்கிறதா என்பது, சான்றிதழில் இருக்க வேண்டும்.

கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில், இந்த காரணம் இறப்பு சான்றிதழில் இருந்தது. பின் சில காலங்களில் அது நீக்கப்பட்டுவிட்டது. மத்திய மாநில அரசுகள், அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஒரு சில இடங்களில், இறப்புக்கான காரணம், மரண அறிக்கை என்ற மருத்துவமனை தரப்பு விளக்கத்தில் தரப்படுகிறது. ஆனால், இறப்பு சான்றிதழில் அவை இருப்பதில்லை.

இறப்பு சான்றிதழில் அவற்றை கூற வேண்டிய அவசியம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். உரிய நிவாரணத் தொகை கொரோனாவால் இறந்தோருக்கு கிடைக்க, இந்த இறப்பு சான்றிதழ் மிக மிக முக்கியம். தமிழக முதல்வர், பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார். குறிப்பாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இந்த விவகாரத்தில் போதிய உதவி கிடைக்க, இறப்பு சான்றிதழில் தெளிவு இருப்பது மிக மிக அவசியம்.

கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கு இடம், மயானங்களில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளிதான். உதாரணத்துக்கு, சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில், ஒரே மாதத்தில் 840 பேர் உயிரிழந்ததாகவும் – அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. மருத்துவப் பேரிடர் நேரத்தில், பேரிடர் இல்லாமல் இவ்வளவு அதிக வேறு காரணத்தினால் ஏற்படும் மரணங்களை, எப்படி நாம் சந்தேகிக்காமல் கடக்க முடியும்? சிவகங்கையில் இறந்தவர்கள் பலருக்கு நிமோனியா, மூச்சுத்திணறல் போன்றவை காரணங்களாக கூறப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா சந்தேக மரணமாகக்கூட இவை இருக்கலாம். அரசு இவற்றை ஆராய்ந்து, களத்தில் என்ன பிரச்னையுள்ளது என்பதை அறிந்து, அதை சொல்ல வேண்டும்.

இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதென கூறினால், அது ஆட்சிக்கு அவமானமென அரசு நினைக்கிறதா எனத் தெரியவில்லை. பேரிடர் நேரத்தில், இப்படியான எண்ணங்கள் அவசியமற்றது. இறப்பு எதுவாக இருந்தாலும், அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” எனக்கூறினார் அவர்.

மருத்துவர் சாந்தி கூறியவற்றிலுள்ள அடிப்படை கேள்விகளை, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம். அவர், “இறப்பு எண்ணிக்கையை மறைத்து, நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? உரிய முறைப்படி, கொரோனா இறப்புகளை வெளிப்படையாகவே நாங்கள் அறிவிக்கிறோம். இறப்புக்கான சான்றிதழில் குறிப்பிட்ட காரணியை சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை, எங்களுக்கு முறையாக வரவில்லை. ஆகவே அதுபற்றி எந்தவித ஆலோசனையும் இப்போது இல்லை” எனக்கூறினார்.

கொரோனா இறப்பில் இவ்வளவு சிக்கல் இருப்பது, இந்தியா முழுவதும் நீடிக்கிறது என்பது வேதனைத்தரும் செய்தியாக இருக்கிறது. அப்படியிருந்தும் 3 லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. எனில், மறைக்கப்பட்ட எண்ணிக்கை இன்னும் அதிகமோ என அச்சப்பட வேண்டியுள்ளது. மேலும், கொரோனாவை பேரிடராக அறிவித்திருக்கும் இந்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் படி, பேரிடரால் இறப்போர் குடும்பத்துக்கு, 4 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது அதுவும் சர்ச்சையாகி வருகிறது.

இறப்புகளின் பின்னான இந்த அரசியல், உண்மையில் அச்சம் தரும் வகையிலேயே இருக்கிறது.

- நிவேதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com