வரும் 23-ஆம் தேதியன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்க உள்ளார் இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து. கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் வெள்ளி பதக்கம் வென்று சாதித்திருந்தார். இந்த முறை தங்கம் வெல்வாரா என்பதை அலசுவோம்.
சர்வதேச ரேங்கிங்கில் ஏழாவது இடம்
சர்வதேச அளவிலான மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் ரேங்கிங்கில் சிந்து ஏழாவது இடத்தில் உள்ளார். 26 வயதான அவர் இந்த முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏகபோகமாக எகிறி உள்ளது. ஒலிம்பிக் என்றால் சிந்து என ஒவ்வொரு இந்தியனும் சொல்லும் அளவுக்கு சிந்துவின் சாதனை அனைவரது மனதிலும் ஆழ பதிந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய அளவில் பேட்மிண்டன் டைட்டிலை அவர் கைப்பற்றவில்லை என்றாலும் 2019-ல் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இப்போதைக்கு அவர்தான் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியன்.
அதேநேரத்தில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கும் வகையில் கடந்த மார்ச் வாக்கில் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறி ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினிடம், சிந்து தோல்வியை தழுவினார். இந்த முறை காயம் காரணமாக கரோலினா மரின் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியுள்ளார். இவரிடம்தான் ரியோவில் சிந்து தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய ஈவெண்டுகளில் அசத்துபவர்
ஃபார்மில் இல்லை என்றாலும் முக்கிய போட்டிகளில் சிந்து அசத்தும் தன்மை கொண்டவர் என அவருக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்கள் சொல்கின்றனர். 2016 ரியோவுக்கு முன்னதாக ரெக்கார்டில் பின்தங்கியிருந்த சிந்து அந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியதே அதற்கு உதாரணம் என்கின்றனர்.
ஒலிம்பிக்கிற்கு சிறப்பு பயிற்சி
“சிந்துவின் அட்டாக்கிங் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அவரது தடுப்பாட்டம் கொஞ்சம் சுமார்தான். அதனால் அதில் கவனம் செலுத்தும் வகையில் அவர் அதிக அளவில் பயிற்சி எடுத்துள்ளார். அதற்கு இந்த கொரோனா பேரிடர் சூழலும் கைகொடுத்தது. அதனால் ஒலிம்பிக்கில் விளையாட கூடுதல் அவகாசம் கிடைக்க அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிகம் பயிற்சி செய்துள்ளார்.
சிந்துவை எதிர்த்து ஆடுபவர்கள் அவரை தடுப்பாட்டத்தில் வீழ்த்தவே முயல்வார்கள். இந்த முறை அது நடக்க வாய்ப்பில்லை. மோஷன் ஸ்கில்ஸ், வலை பயிற்சி மாதிரியானவற்றில் சிந்து கவனம் செலுத்தியுள்ளார். இது நிச்சயம் ஒலிம்பிக் களத்தில் கைகொடுக்கும்” என்கிறார் சிந்துவின் வெளிநாட்டு பயிற்சியாளர் பார்க் டே-சாங்.
எனது ஆட்டத்தில் எந்தவித தாக்கமும் கொரோனா பேரிடரால் ஏற்படவில்லை
“கொரோனா பேரிடர் எனது ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் எனது ஆட்ட நுணுக்கங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொண்டேன். இதில் நான் நிறையவே கற்றுக் கொண்டும் உள்ளேன்” என சிந்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் குரூப் J-வில் இடம்பெற்றுள்ள சிந்து சுலபமாக முதல் சுற்றிலிருந்து நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி என மூன்று வெற்றிகளை சிந்து பெற்றால் இந்த முறை தங்கப் பதக்கம் வெல்வார்.
வாழ்த்துகள் சிந்து!