சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் பலர் மாரடைப்பால் உயிரிழந்து வருவதற்கும் கடந்த மூன்றாண்டுகளில் பல அலைகளாக பரவிய கொரோனா பாதிப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி மக்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு, “இதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை” என சுகாதாரத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது. எனினும் மாரடைப்பை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும் , இது குறித்து இந்திய ஆராய்ச்சி கவுன்சிலிங் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
மக்களவையில் எழுப்பப்பட்ட இக்கேள்வி குறித்து Apollo Hospitals Senior Consultant Intervententional Cardiologist, Professor Dr. REFAI SHOWKATHALI, MRCP(UK), FRCP(Lon) CCT in Cadio (UK), FAA (USA) FESC (Europe), Fellowship in TAVI/TAVR (Lon) அவர்களிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம்.
“கொரோனா காலகட்டங்களில் வந்த மாரடைப்புகளில் பெரும்பாலானவை கொரோனா சம்பந்தப்பட்ட மாரடைப்புகளாகவே இருந்தன. இது உலகளவில் அனைத்து மருத்துவர்களுக்கும் தெரியும். கொரோனா வைரஸ் (COVID) என்பது ரத்தக்குழாயில் கிளாட் ஃபார்மேஷன் (blood clot formation) அதாவது ரத்தக்கட்டியை உருவாக்கி இதயத்தில் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
அதனால் அப்பாதிப்பு ஏற்பட்டோருக்கு இறப்பின் சதவிகிதமானது அதிகரித்து இருந்தது. இத்தாலி, நியூயார்க் போன்ற நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்தபோது அவர்களின் இதயத்திலும் நுரையீரல்களிலும் உள்ள அடைப்புகள் எல்லாமே கொரோனாவின் பாதிப்பாக அடையாளம் காணப்பட்டன.
லேசான கொரோனா வந்தவர்கள் அல்லது தனக்கு கொரோனா வந்துள்ளது என்றே தெரியாதவர்கள் கூட நுரையீரல் தாக்கம் அல்லது சரியாக மூச்சு விடுவதில் சிரமம் என்று மருத்துவமனை வருவார்கள். அவர்களுக்கு நாங்கள் ECHO, ECG எடுத்து பார்த்ததில் அவர்களின் இதய செயல்பாடு குறைவாக இருப்பதை அறியமுடிகிறது. ஆகையால், கொரோனா நோயாளிகளாக இருந்தோரை Echo எடுக்க சொல்லி நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம்.
இது ஒருபக்கம் எனில், தற்சமயம் அதாவது கொரோனா காலகட்டம் முடிந்த இந்த காலகட்டத்தில் வரும் இதய நோய்க்கு காரணம் கொரோனா தாக்கம் என்று சொல்வதற்கு சரியான ஆய்வறிக்கை நம்மிடையே கிடையாது. ஆய்வு இல்லாமல் ‘இதுதான் காரணம்’ என்று சொல்லவும் முடியாது.
அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் உள்ள Cedars – Sinai என்ற மருத்துவமனையின் ஆய்வறிக்கையின் படி, கொரோனாவிற்கு பிறகு, மாரடைப்பினால் ஏற்படும் 25 – 44 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பின் சதவிகிதமானது 30% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் இது கொரோனாவின் பாதிப்பால் வருகிறதா என்பது அவர்களுக்கும் சரியாக தெரிவிக்கவில்லை.
2023 மார்ச் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும் பொழுது, ‘கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு அதிகரிப்பிற்கான காரணத்தை 3 மாத கால அவகாசத்தில் ஆய்வு மேற்கொள்வோம்’ என்றார். ஆனால் அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதா, ICMR நடத்தியதா, அதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் வந்துள்ளதா என்றும் தெரியவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. அப்படியிருக்க இந்த முடிவுக்கு அவர்கள் எப்படி வந்தார்கள் என்பது குறித்து சரியான விளக்கமும் இல்லை.
என்னைப் பொருத்தவரையில் இதற்கான சரியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் மாரடைப்பின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மக்களிடையே உள்ள விழிப்புணர்ச்சி. முந்தைய காலங்களில் மாரடைப்பு என்று தெரியாமலேயே இறந்தவர்கள் உண்டு. இன்றைய காலங்களில் டெஸ்ட் எடுத்து மாரடைப்பை தெரிந்துக் கொள்வதால் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். அல்லது கொரோனா பாதிப்பினாலும் இருக்கலாம். இதை யாராலும் ஆராய்ச்சி செய்யாமல் சொல்லமுடியாது. ஒருவர் சக்கரை அளவு, கொழுப்பின் சதவிகிதம், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருந்தால் மாரடைப்பை கட்டுப்படுத்த முடியும்.
இப்பொழுது வரும் நோயாளிகள் யாருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பது இல்லை. ஒரு நோயாளிக்கு ஒவ்வொரு முறையும் கொரோனா டெஸ்ட் எடுப்பது சாத்தியமும் இல்லை. நோயின் வீரியதன்மையைப் பொருத்து தான் டெஸ்ட்க்கு அறிவுறுத்தப்படுகிறது. எல்லோருக்கும் ப்ளூ காய்ச்சல் வருவது போல் கொரோனாவும் வந்துவிட்டு செல்லலாம். ப்ளூ காய்ச்சலில் பலவகை உருமாறி வருவது போல் கொரோனாவும் உருமாறி வரலாம். இருந்தாலும், நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் பொழுது கொரோனாவின் வீரியமானது கட்டுப்படுத்தப்படும்”
என்று கூறினார்.