கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை குறித்தும், பிளாஸ்மா தானம் குறித்தும் எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், அரசு பொதுநல மருத்துவரான சாய் லட்சுமிகாந்த்.
பிளாஸ்மா தெரபி என்றால் என்ன?
ஒருவருக்கு நோய்தொற்று வரும் பொழுது நம் உடல் அதற்கான எதிர்ப்பு சக்தியான Immunoglobulin, அதாவது நோய் எதிர்ப்பு புரதத்தை தயார் செய்து அந்நோய் தொற்றை கட்டுக்கொள் கொண்டு வரும். அந்த நோய் எதிர்ப்பு புரதம், நம் உடலில் சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும். இந்த புரதம் அதே நோய் தொற்று நம்மை அண்டாத வண்ணம் பாதுகாக்கும். இயற்கையின் கொடை என்றே சொல்லலாம்.
அப்படி நோய் தொற்று குணமடைந்த ஒருவரின் உடலில் இருந்து அந்த புரதம் அதிகமுள்ள பிளாஸ்மாவை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து அந்த நோய் பாதிப்புக்குள்ளான இன்னொருக்கு செலுத்தி அந்த நோயில் இருந்து அவரை மீட்பதே Convalescent Plasma Therapy எனப்படும்.
இது புதிய மருத்துவ முறையா?
இல்லை. இந்த மருத்துவமுறை 19-ம் நூற்றாண்டில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது. சமீபமாக கோவிட்19 வைரஸின் அண்ணன்களான ஈபோலா, SARS, MERS போன்ற அதிவேகமாக பரவும் நோய் தொற்றுகளிலும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பழைய முறை என்றால் ஏன் இந்த முறை பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை?
இந்த மருத்துவமுறை நாம் நினைப்பதை போல் அவ்வளவு எளிதானதல்ல. மேலும் நுண்ணுயிர் கொல்லி எனும் Antibiotics/Antivirals கண்டுபிடிக்கப்பட்ட பின் இந்த மருத்துவ முறைக்கான தேவை குறைந்துவிட்டது. தற்போது இது நுண்ணுயிர் கொல்லிகள் இல்லாத நோய் தொற்றுகளுக்கு ஆராய்ச்சி ரீதியில் தான் உபயோகப்படுத்தப்படுகிறது.
யார் எல்லாம் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம்?
தற்போது நம்மிடையே பரவி வரும் கோவிட்-19 நோய் வந்தவர்களில் 90% எந்தவித நோய் அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள். நோய் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களின் குருதியில் இந்த நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களின் குருதியை கொடையாக பெற்று அதில் உள்ள நீரை தனியாக பிரித்து நோயால் பாதிக்கப்பட்ட இன்னொருவருக்கு கொடுப்பதே இந்த மருத்துவமுறை
நோய் தொற்று பூரணமாக குணமானவர்கள் அதாவது கோவிட் பரிசோதனை நெகடிவ் என்று ஆன பிறகு வீடு திரும்பிய 14 நாட்களுக்கு பிறகு அவர்கள் குருதி தானம் கொடுக்க தகுதியானவர்களாகிறார்கள்
தகுதியானவர்கள் குருதி தானம் கொடுக்கும் முன் கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக அவர்கள் குருதியில் உள்ள நோய் எதிர்ப்பு புரதம் குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே அவர்களின் குருதி எடுக்கப்படும்.