மனித உடலுக்கு இன்றியாமையாதது உணவு. நாம் உண்ணும் உணவானது நமது உடல் மட்டுமல்லாது உணர்விலும் பெரும் பங்கு ஆற்றும் என்பதாலாயே, நமது முன்னோர்கள் உணவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அதற்காகவே காலை மதியம் இரவு என சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி நமது உணவு பாராம்பரியம் வடிமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிய நாம், நாகரிகம் என்ற பெயரில் உணவுக்குப் பதிலாக பல நேரங்களில் விஷத்தை உண்டு வருகிறோம்.
குறிப்பாக இரவு உணவு. அவரவர் உடலுக்கு ஏற்றவாறு உணவு எடுத்துக்கொண்டு, உள்ளுறுப்புகளுக்கு உதவ வேண்டிய அந்த தருணத்தில்தான் நாம் அள்ளி இரைத்து கொண்டு உண்கிறோம். இதனால் நமது உடல் எதிர்கொள்ளும் பிரச்னைகளோ சொல்லில் அடங்காதவை. ஆகையால் இரவு உணவானது எப்படி இருக்க வேண்டும். அதை எந்த விகிதத்தில் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், சித்த மருத்துவம் அதை எப்படி பார்க்கிறது, ஆரோக்கியத்தில் இரவு உணவின் பங்கு என்ன உள்ளிட்ட விடயங்களை, சித்த மருத்துவர் பரணிதரன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி ஆகியோரிடம் முன் வைத்தோம்.
அவர்கள் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு: மருத்துவர் பரணிதரன் கூறும் போது “ உணவைப் பொருத்தவரை, அவரவர் உடலுக்கு என்ன உணவு பொருந்துகிறதோ அதை உட்கொள்ளலாம். இரவு உணவானது மிக எளிமையாக ஜீரணமாகக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். அதை அவரவர் உடலின் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பசியை அடக்கிக்கொண்டோ அல்லது பாதிவயிறு நிரம்ப மட்டும் சாப்பிட்டுக்கொண்டோ படுக்கைக்குச் செல்லக் கூடாது.
இரவு நேரத்தில் பழங்கள் மற்றும் கீரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வகையான உணவுகளை இரவில் நாம் உண்ணும் போது, அந்த உணவுகள் செரிமானமாகி ஆற்றலை உருவாக்கும். ஆனால் இரவில் போதுமான உடல் உழைப்பு இருக்காது என்பதால், அந்த உணவுகளால் உருவாக்கப்படும் ஆற்றலானது உடலின் பல பகுதிகளில் தேங்கி விடும். இதனால் உடல் பல்வேறுப் பிரச்னைகளை எதிர்கொள்ளும்.
பொதுவாகவே பழங்களை வெறும் வயிற்றில் உண்ணும் போது, அது வயிற்றில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் வீரியத்தைக் குறைத்து விடும். ஆகையால் பழ உணவுகளை உண்ண விரும்பினால் திட உணவை உண்ட பின்பு, 1 மணி கழித்து உண்பது நலம் பயக்கும்.
அதே போல சப்பாத்தி, புரோட்டா, தோசை மற்றும் அசைவ உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. மேற்குறிப்பிட்ட உணவுகள் நமது வயிற்றில் வறட்சித்தன்மையை அதிகரிக்கும். அதன் காரணமாக நமது உடலுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். இந்தத் தண்ணீர் அஜிரணமாகி காலையில் சளி, அசிடிட்டி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். குறிப்பாக புரோட்டாவை எடுத்துக்கொண்டால், அந்த உணவு செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். அதனால் அந்த உணவு இரைப்பையினுள் அதிக நேரம் இருக்கும். அதை வயிறானது ஜீரணம் செய்வதற்கும் அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் வழக்கமான செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் பெருங்குடலும் அதிலிருந்து சத்தைப் பிரித்தெடுக்க அதிக ஆற்றலை செலவழிக்கும். இதனால் உடல் சோர்வடைந்து விடும்.
2. அசைவ உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவுகள் செரிமானமாக மிக மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். சித்த மருத்துவத்தில் உண்ணும் உணவை உடலுக்கு மட்டுமன்றி உணர்வுக்கும் ஏற்ப வடிவமைத்தனர். அந்த வகையில் முன்னோர்கள் இரவில் அசைவை உணவை முற்றிலும் தவிர்த்தனர். ஏனெனில் அசைவை உணவை நீங்கள் உண்ணும் போது அதனால் உடலில் உண்டாகும் உணர்வானது தூக்கத்தை பாதிக்கும். தூக்கம் பாதிப்புக்குள்ளாகும் போது அவை கனவுகளாக மாறும். அதன் பாதிப்பு அடுத்த நாளில் கட்டாயம் பிரதிபலிக்கும். ஆகையால் இவைத் தவிர்த்து அவரவர் உடலுக்குப் பொருந்தும் வகையிலான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இரவில் பால் அருந்துபவர்களாக இருப்பவராயின் அதில் தேன் அல்லது ஏலக்காய் போட்டு குடிக்க வேண்டும். இவை பால் முறையாக ஜீரணமாவதற்கு உதவும். நள்ளிரவு நேரங்களில் உணவு உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதற்கு வழியில்லாதவர்கள் அரிசிக்கஞ்சி, கேழ்வரகு கஞ்சி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம். கேழ்வரகு கஞ்சியை எடுத்துக்கொள்ளும் போது, அதன் தோலை நன்றாக தூய்மைப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதே போல திணை, சாமை, சோளம் உள்ளிட்ட தானியங்களை தவிர்த்து விட்டு, மீதமுள்ள தானிய வகை கஞ்சிகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இரவு உணவில் பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாசிப்பூ உள்ளிட்ட மசாலா உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது, அவை இரவில் நமது உடலுக்குத் தேவையான முறையான உஷ்ணத்தைக் கொடுத்து செரிமானத்திற்கு பேருதவியாக இருக்கும். ஒரு வேளை புரோட்டா மற்றும் அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டால் ஓமத்தண்ணீரை 10 மி.லி.யும் சாதாரண தண்ணீரை 20 மி.லி.யும் கலந்து பருகலாம் அல்லது சோம்பு(1\4 பங்கு) மற்றும் சீரகம் ((1\4 பங்கு) உள்ளிட்டவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். இது மட்டுமன்றி பச்சை வெங்காயம் மற்றும் வெற்றிலையையும் உபயோகிக்கலாம். இம்முறையில் நாம் இரவை உணவை அணுகும் போது, அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
அதைபோல இரவு உணவை உட்கொண்டு விட்டு உடனடியாக நடைபயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 24 நிமிடங்கள் கழித்து மேற்கொள்வது சாலச்சிறந்தது. பலவீனமானவர்கள் நடைபயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. அந்த நடைப்பயிற்சியும் உலா வருவதை போல மிக இலகுவாக இருக்க வேண்டும்.
ஒரு வேளை உடலுறவு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தால் நிச்சயம் உணவு உட்கொண்ட பின்பு 11/2 மணி நேரம் கழித்துதான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக மேற்கொள்ளும் போது நமது உடல் பலப் பிரச்னைகளை சந்திக்கும்.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கூறும் போது “ இரவு உணவை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு மிக எளிமையாக ஜீரணமாகக் கூடிய உணவுகளாக இருக்க வேண்டும். உணவை எந்த வேளை எடுத்துக்கொண்டாலும், வயிறு முக்கால் வாசி நிரம்பும் வகையிலே எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், குறைவாக சாப்பிடுவது நல்லது.
இரவில் புரோட்டா, சப்பாத்தி போன்ற கடினமான உணவுகள் எடுப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஒரு வேளை அதை கடினமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் போது அதனை ஜீரணம் செய்ய உதவி செய்யக் கூடிய உணவுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
- கல்யாணி பாண்டியன்