கொட்டாவியானது தூக்கமின்மையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் இது அதி தீவிரமாக மற்றவர்களுக்கும் தொற்றக்கூடியது என்றே சொல்லலாம். ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்த அடுத்த நொடியே நமக்கும் கொட்டாவி வந்துவிடும். ஆனால், மூளையின் வேகம் குறைந்துவிட்டதை உடல்மொழி மூலம் உணர்த்தும் ஒரு செயலே கொட்டாவி என்கின்றனர் நிபுணர்கள்.
அதேசமயம், உடலின் வெப்பநிலையை மூளை சமநிலைப்படுத்தவே கொட்டாவி வருவதாக கூறுகின்றன ஆராய்ச்சிகள். உடலியல் மற்றும் நடத்தை இதழில் வெளியான ஆராய்ச்சியில், 120 பேரின் கொட்டாவி பழக்கவழக்கங்களை சோதனைக்கு உட்படுத்தியதில், குளிர்காலத்தில் குறைவாகவே கொட்டாவி வந்தது தெரியவந்திருக்கிறது.
மூளையின் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, காற்றை உள்ளிழுப்பது அதை குளிர்விக்க உதவும். இதுவே கொட்டாவி எனப்படுகிறது. இதுதவிர உடல் தன்னை தானே எழுப்ப, நுரையீரல் மற்றும் அதன் திசுக்களை நீட்சியடைய செய்ய பயன்படுத்தும் ஒரு வழிதான் கொட்டாவி எனவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொட்டாவியானது விழிப்பை ஏற்படுத்த முகம் மற்றும் மூளைக்கு ரத்தத்தை அனுப்புகிறது.
கொட்டாவி தொற்றும் தன்மையுடையது என்கின்றன ஆராய்ச்சிகள். ஆனால், இது அருகிலுள்ளவர்மீது உள்ள அனுதாபத்தால் வருவதால் நேர்மறையாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு முக அசைவுகளுக்கு அவற்றின் எதிர்வினைகள் எப்படியிருக்கிறது என்பது குறித்து கல்லூரி மாணவர்களிடையே பேய்லர் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. அதில், குறைவான அனுதாபம் உள்ள நபர்கள் பிறரைவிட குறைவாகவே கொட்டாவி விட்டதாக கூறியுள்ளது.
கொட்டாவி விடுவது என்பது கெட்ட செயல் இல்லை என்றாலும், நிறைய நேரங்களில் பொது இடங்களில் சங்கடங்களுக்கு வழிவகுக்கிறது.
மூச்சு இழுத்து விடுங்கள்
அதீத சோர்வு, மயக்கம் மற்றும் தூக்க உணர்வு இருந்தால் நீண்ட, நெடிய மூச்சுவிட வேண்டும். குறிப்பாக மூக்கு வழி சுவாச பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடலுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை உணர்த்தவே தொடர்ந்து கொட்டாவி வருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் இயக்கம்
ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், சோம்பலான வாழ்க்கைமுறையை மேற்கொள்பவர்களுக்கு கொட்டாவி அதிகமாக வரும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட மூளையை தூண்டுவது அவசியம் என்கின்றனர். எப்போதெல்லாம் அதிகமாக கொட்டாவி வருகிறதோ, அப்போதெல்லாம் மனதை திசைதிருப்ப சிறிது தூரம் நடக்கவேண்டும் அல்லது 5-10 நிமிடங்கள் ஜாக்கிங் செய்யவேண்டும்.
குளிர்வித்தல்
மூளை எப்போதெல்லாம் சூடாகிறதோ அப்போதெல்லாம் கொட்டாவி அதிகமாக வரும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே எப்போதெல்லாம் சோர்வாக தோன்றுகிறதோ, அப்போது ஐஸ் பேக்கால் ஒரு நிமிடம் தலைக்கு ஒத்தடம் கொடுப்பது சிறந்தது என்கின்றனர். இதனால் தலை குளிர்வதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர்.
குளிர்ந்த உணவுகள்
கொட்டாவி வர ஆரம்பிக்கும்போதே ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழங்கள் அல்லது குளிர்ந்த தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளலாம். குளிர்ந்த திராட்சை, பெர்ரீஸ் அல்லது பிற தின்பண்டங்களும் உதவும்.
உடல் நீரேற்றம்
உடல் வறட்சியும் சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் கொட்டாவி வரும். எனவே அதிகளவு நீர் மற்றும் நீராகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கொட்டாவி கட்டுப்படும்.
தூக்கம்
உடலின் சீரான இயக்கத்துக்கு மிக மிக அவசியமானது தூக்கம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் சோர்வு மற்றும் கொட்டாவி நாள் முழுதும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி 7-9 மணிநேர தூக்கம் அவசியம். போதிய தூக்கமின்மை மோசமான உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை எப்போதும் மறக்கவேண்டாம்.