திண்டுக்கல்: தாயில்லாமல் நான் இல்லை... எம்.ஜி.ஆர் மீது ரசிகன் கொண்ட காதல்!

திண்டுக்கல்: தாயில்லாமல் நான் இல்லை... எம்.ஜி.ஆர் மீது ரசிகன் கொண்ட காதல்!
திண்டுக்கல்: தாயில்லாமல் நான் இல்லை... எம்.ஜி.ஆர் மீது ரசிகன் கொண்ட காதல்!
Published on

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளான இன்று அவரது உருவ சிலைக்கு அதிமுகவினரும் அவரது ரசிகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தாய்மீது பிள்ளைக்கு காதல். மனைவிமீது கணவனுக்கு காதல். காதலனுடன் காதலிக்கு... விளையாட்டின் மீது, பாடலின் மீது, நாடகத்தின் மீது, தான் வைத்திருக்கும் வாகனத்தின் மீது என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றின் மீதும் வெவ்வேறு கோணத்தில் காதல் பற்றுள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில் எம்.ஜி.ஆர் மீது ரசிகனுக்கு ஏற்பட்ட காதல் இது.


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளை அதிமுகவினரும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது கோடான கோடி ரசிகர்களும் அதிவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக கரை வேட்டியுடன் கட்சியினர் திரண்டிருந்தனர்.

அப்போது எம்.ஜி.ஆர் வேடமிட்டு ஆளுயர மாலையுடன் வந்த ரசிகர் ஒருவர் எந்த ஆரவாரமும் இல்லாமல் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றார். அதை கவனித்த நாம் அவரிடம் பேசினோம்...

" இந்நேரம் எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்துல ஏழை எளிய மக்களே இருந்திருக்க மாட்டார்கள். யாரு கண்ணுபட்டதோ தெரியல ஆண்டவன் அவரை சீக்கிரமே அழைத்துக் கொண்டான் என கண்களில் வழிந்த நீரை கைக்குட்டையால் துடைத்தபடி கம்மிய குரலில் பேச ஆரம்பித்தார் ஜெயபிரகாஷ்.

'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்' என்று பாடியதோடு மட்டுமல்ல அதுபோலவே வாழந்து காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பு மற்றும் அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரின் தீவிர ரசிகனானேன்.

விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆருன்னா எனக்கு உசுரு. அவர்கிட்ட எனக்கு பிடித்ததே அவரோட தாய்மீது அவர்கொண்ட பக்திதான். அதனாலதான் அடிமைப்பெண் படத்துல தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை என்று பாடுவாரு. இந்த பாட்டுக்காகவே அடிமைப்பெண் படத்தை பத்து பதினைந்து தடவை பார்த்திருப்பேன்.

என்னோட சின்னவயசுல சௌராஷ்டிரா சமூக நாடகங்கள்ல கதாநாயகனா நடிச்சிருக்கேன். அப்படி நடிக்கும்போது ஒரு பாட்டாவது, எம்.ஜி.ஆர் பாட்ட பாடாம இருக்க மாட்டேன். புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழைகள் நமக்காக. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று. போன்ற பாடல்களில் ஏதாவது ஒன்றை தத்ரூபமாக பாடுவேன். இதைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் சிலசமயம் பாடலை பாராட்டி பரிசும் கிடைக்கும்.

எம்.ஜி.ஆர் படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கி முதல்நாள் முதல் ஷோவே பாத்திருவேன். அதுக்காக பலமுறை எங்க அப்பாகிட்ட அடிவாங்கி இருக்கேன். அதேமாதிரி தலைவர் நடித்து டைரக்ஷன் செய்த நாடோடி மன்னன், அடிமைப்பெண், நம்நாடு, எங்க வீட்டுப்பிள்ளை, நவரத்தினம், மீனவ நண்பன், ஊருக்கு உழைப்பவன், ரிக்ஷாகாரன் போன்ற படங்களை அதிகமுறை பார்த்திருக்கேன்.

நான் எப்பவுமே எம்.ஜி.ஆர் போலவே டிரஸ் போடுவேன். அதனால் நகர மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்றே அழைக்கின்றனர். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இப்ப நான் விடுதி ஒன்றில் வாட்ச்மேனாக வேலை பார்க்கிறேன். சாலையில் நிற்கும் என்னைப் பார்த்து சாலையில் செல்பவர்கள் தலைவா என்று கத்தியபடி கையை ஆட்டிச் செல்கின்றனர். இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். படத்தில் நடித்து சம்பாதித்த காசு முழுவதையும் ஏழைகளுக்கே கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் வீட்டிற்கு அவரை பார்க்கச் செல்லும் ரசிகர்களை உள்ளே அழைத்து உணவு கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப் படுவாராம்.


தேர்தல் சமயத்துல தலைவர் எம்.ஜி.ஆர் நாகல்நகருக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பேன். எத்தனை மணிக்கு வந்தாலும், படியில குடுகுடுன்னு ஓடிவந்து மேடைல ஏறி மைக்கை பிடித்து என் உயிரிலும் மேலான அன்பு உடன் பிறப்புகளேன்னு சொல்லுவாரு அதுக்காகவே காத்திருப்பேன்.

ஒருதடவ ஆரம்ப கால அதிமுகவில் இருந்த சிவநாத்பாபுக்கு கல்யாணம் அங்குநகர்ல நடந்துச்சு. அந்த கல்யாணத்தை எம்.ஜி.ஆர்தான் நடத்தி வெச்சாரு. அப்ப எம்.ஜி.ஆர பக்கத்துலபோய் நேரா பார்த்திருக்கேன். எம்.ஜி.ஆர் உடம்பு சௌகரியம் இல்லாம அமெரிக்காவுல இருந்தப்ப அவர் நலமாக நாடு திரும்ப வேண்டும்னு வீட்டுல மைக்செட் கட்டி ஒளிவிளக்கு படத்துல வர்ற இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு பாடலை திரும்ப திரும்ப போட்டு பிராத்தனை செய்தேன்.

கட்சி ஆரம்பித்து தமிழக முதல்வரா பொறுப்பேற்று ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில நல்லாட்சி நடத்திக்கிட்டு இருந்தாரு.. யாரு கண்ணுபட்டதோ எல்லாம் முடுஞ்சுபோச்சு என்று கண்கலங்கியவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரோட நினைவுநாள் அன்று அவரோட சிலைக்கு முதல்ஆளாய் போய் மாலையை போட்டு பத்தி ஏற்றி கும்பிட்டுவிட்டு வருவேன்.

அன்றைய நாள் முழுவதும் விரதம் இருப்பேன். அதேமாதிரி அவரோட பிறந்த நாள் அன்று எல்லோருக்கும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து கொண்டாடுவேன். இப்போதுதான் முதல் மாலையாக நான் வாங்கிச் சென்ற மாலையை எம்.ஜி.ஆருக்கு போட்டுவிட்டு வந்தேன். ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுக்கப்போறேன் இருந்து சாப்பிட்டுவிட்டு போங்க என்றார் சிரித்தபடி.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உலகைவிட்டு பிரிந்தாலும் ஜெயபிரகாஷ் போன்ற உண்மையான ரசிகர்கள் மூலம் இன்றும் நம்முடைய இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com