மோடி-ட்ரம்ப்: வேற்றுமைகளும், ஒற்றுமைகளும்...

மோடி-ட்ரம்ப்: வேற்றுமைகளும், ஒற்றுமைகளும்...
மோடி-ட்ரம்ப்: வேற்றுமைகளும், ஒற்றுமைகளும்...
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையிலான வேற்றுமைகளும், ஒற்றுமைகளும்.

கலகத்துக்கு பெயர்போன ட்ரம்ப் - அமைதியான மோடி: 

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் நாட்டில் ஜனநாயகமும், அமைதியும் நிலவ பாஜக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். அதேநேரம், ட்ரம்ப்பின் அதிபர் தேர்தல் பரப்புரை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தனது பரப்புரையில் பேசிய ட்ரம்ப், இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அமெரிக்காவில் வாழும் வெள்ளை இனத்தவருன், கறுப்பினத்தவரும் சுவர் மூலம் பிரிக்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

பின்னணி: 

குஜராத்தின் வத்நகர் பகுதியில் கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ல் சராசரி குடும்பத்தில் பிறந்தவர் மோடி. சிறுவயதில் குஜராத் ரயில்நிலையங்களில் தனது தந்தையுடன் தேநீர் விற்றதாக பல இடங்களில் மோடியே நினைவு கூர்ந்திருக்கிறார். 8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அறிந்துகொண்ட மோடி, அந்த அமைப்புடன் நீண்டகாலமாக பயணித்தவர். பெற்றோர்கள் பார்த்து மணமுடித்த திருமணத்தில் உடன்பாடில்லாமல் டீன் ஏஜில் வீட்டை விட்டு மோடி வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 1946 ஜூன் 14ல் பிறந்த ட்ரம்ப், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபராக அறியப்பட்டவர். அரசியலில் காலடி எடுத்துவைக்கும் முன்பாக தொழில்துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் அமெரிக்க மக்களுக்கு அறிமுகமானவர் ட்ரம்ப். அமெரிக்காவின் பலபகுதிகளிலும் அவரது பெயரைத் தாங்கி நிற்கும் வணிக வளாகங்கள் ஏராளம். அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியில் 12 வருடங்களாக இவர் நடத்திய தி அப்ரண்டீஸ் (The Apprentice) ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலமானது. 2017ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை நிலவரத்தின்படி ட்ரம்ப், 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகின் பணக்காரர்கள் வரிசையில் 544ஆவது இடத்தில் இருக்கிறார்.

திருமண வாழ்வு: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர். இவாங்கா ட்ரம்ப் உள்பட அவருக்கு 5 குழந்தைகள் உண்டு. இதுதவிர, பெண்கள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ட்ரம்ப்பை சுற்றிவருவதுண்டு. ஆனால், பிரதமர் மோடி, இதற்கு நேர் எதிரான குணம் கொண்டவர். இளம் வயதில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணத்தை அடுத்து மனைவியைப் பிரிந்த மோடி, இதுவரை தனியாகவே வாழ்ந்து வருகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. 

அரசியல் அனுபவம்: 

அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் மோடி நீண்ட அரசியல் பின்னணி கொண்டவர். கடினமான அரசியல் சூழல்களையும் திறம்பட கையாளும் திறன் கொண்டவர் பிரதமர் மோடி. அதேநேரம், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் வணிக வளாகங்களையும், ஹோட்டல்கள், கோல்ஃப் மைதானங்கள், சூதாட்ட விடுதிகள் என பல்வேறு தொழில்களில் கொடிகட்டிப் பறந்தவர் ட்ரம்ப். அதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் வரை அவருக்கு எந்தவிதமான அரசியல் அனுபவமும் இல்லை.

ஊழல் ஒழிப்பு:
 
மோடி, ட்ரம்ப் ஆகிய இருவருமே, தங்கள் தேர்தல் பரப்புரையின் போது ஊழல் ஒழிப்பு குறித்து அதிகமாக பேசினர். நாட்டின் அரசியல் அமைப்பை ஊழல் ஒழித்து விடும் என்றும், ஊழல் ஒழிப்பை ஒரு கொள்கையாக பாஜக கொண்டுள்ளது, காங்கிரஸ் அரசு கமிஷனுக்கானது என்றும் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவை சிறந்த நாடாக்க ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று ட்ரம்ப், ஒரு பரப்புரை கூட்டத்தில் முழங்கினார். 

சமூக வலைதள செயல்பாடுகள்:

மோடி, ட்ரம்ப் ஆகிய இருவருமே சமூக வலைதளங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் எனலாம். பிரதமர் மற்றும் அதிபர் பதவியேற்ற பிறகும், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதை மோடி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இமேஜ்: 

நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாக மோடிக்கு தேசிய அரசியலில் பெரியளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்றே கூறலாம். குஜராத் முதல்வராக இருந்த மோடி, கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலமாகத்தான் தேசிய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். இதேபோலவே, அதிபர் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத ட்ரம்ப், நேரடியாக குடியரசுக் கட்சியில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com