நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் மாநிலங்களவை முடக்கிய நிலையில், அவையின் தலைவரான வெங்கையா நாயுடு புதன்கிழமையன்று கண்ணீர் மல்க "அத்துமீறல்களை கைவிட வேண்டும்" என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டார். மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடும் அமளி காரணமாக தன்னால் இரவு முழுவதும் உறங்ககூட முடியவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தினார் வெங்கையா நாயுடு.
தொடர்ந்து அவைத்தலைவர் இருக்கை முற்றுகையிடப்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரதாப் சிங் பஜ்வா செவ்வாய்க்கிழமை மாலை மாநிலங்களவையில் உள்ள ஒரு மேஜை மீது ஏறி நின்று, புத்தகம் ஒன்றை கிழித்தெறிந்தார். அவர் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி அந்தப் புத்தகத்தை வீசி எறிந்தது மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது தொடர்பான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்நிலையில், அவைத்தலைவரான வெங்கையா நாயுடு புதன்கிழமை காலை மாநிலங்களவையில் பேசினார். அப்போது, "நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில் போன்றது. எதிர்க்கட்சிகளின் அத்துமீறல்கள் மாநிலங்களவையின் மாண்பை சிதைத்து, ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது" என்று பேசிக்கொண்டிருந்தபோதே, அவரது நா தழுதழுத்தது. தொடர்ந்து பேச முடியாமல் அவர் நின்றபடியே கண்ணீர் வடித்தார்.
பின்னர் வெங்கையா நாயுடு தொடர்ந்து பேச முற்பட்டபோது, டெரிக் ஓ பிரையன் தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். வேறு பல எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். நேற்று கடும் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதுகுறித்து வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில், வெங்கையா நாயுடு மாநிலங்களவையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
கடும் அமளியில் ஈடுபட்ட பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், வெங்கையா நாயுடு அத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. ஓபிசி மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அந்த மசோதாவுக்கு மாநிலங்களவையிலும் ஆதரவு அளிப்பது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்த நிலையில், முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதா மீதான விவாதத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாந்தனு சென், பேகசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து மத்திய ஐடி மற்றும் எலக்ட்ரானிக் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கையை பிடுங்கி, கிழித்து ஏறிந்ததால் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவரைத்தவிர, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு நாளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர் அமளி மற்றும் உறுப்பினர்கள் இடைநீக்கம் போன்ற நிகழ்வுகள் வெங்கையா நாயுடுவுக்கு மனஉளைச்சலை அளித்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
"சிறந்த எம்பியாக இருப்பதா அல்லது மோசமாக அமளியில் ஈடுபடுவதா என்பதை ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினரும் முடிவு செய்ய வேண்டியது முக்கியம். விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை சிறப்பான வாய்ப்பு இருந்தும், அதைப் புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது எனக்கு மிகவும் வேதனையளித்தது" என்றார் வெங்கையா நாயுடு.
அவைத்தலைவர் இப்படி கண்ணீர் மல்க அமளி குறித்து வேதனை தெரிவித்து இருந்தாலும், எதிர்க்கட்சியினர் 'பேகசஸ் உளவு மென்பொருள் குறித்து விவாதம் நடத்துவது மற்றும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது போன்ற கோரிக்கைகளில் எந்த சமரசமும் இல்லை' என முடிவு செய்துள்ளனர்.
- கணபதி சுப்பிரமணியம்