பாலா படங்கள் கடந்து வந்த சர்ச்சைகள் - ஒரு எக்ஸ்ரே ஸ்டோரி

பாலா படங்கள் கடந்து வந்த சர்ச்சைகள் - ஒரு எக்ஸ்ரே ஸ்டோரி
பாலா படங்கள் கடந்து வந்த சர்ச்சைகள் - ஒரு எக்ஸ்ரே ஸ்டோரி
Published on

பாலா இயக்கத்தில் வெளியாக இருந்த ‘வர்மா’ திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அந்தப் படத்தின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்கம் முதலே மிக அமைதியாக நடைபெற்று வந்த ‘வர்மா’ படம், பாலாவின் வழக்கமான சர்ச்சைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. 

முதலில் இந்தப் படத்திற்கு பாலா பொருத்தமான இயக்குநர் இல்லை என படம் தொடங்கியதில் இருந்தே முணுமுணுப்புகள் நெட்டிசன் மத்தியில் எழுந்து வந்தது. அதையும் மீறி, இந்தக் காதல் கதையை பாலாதான் இயக்க வேண்டும் என நடிகர் விக்ரம் விரும்பியாதாக தெரிகிறது. தன் மகன் தன் குருநாதர் கையால் அறிமுகமாக வேண்டும் என அவர் விரும்பினார். அதை வெளிப்படையாகவே தெரிவித்தார். அதன்பின் போஸ்டர் வெளியானபோது நெட்டிசன்கள் பாலாவை வச்சு செய்தார்கள். தாடியும் மீசையுமாக துருவ் வலம் வரும் போஸ்டர் ஊர் பகுதிகளில் ஒட்டப்பட்டு, அதன் பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அது பதிவிடப்பட்டது. அப்பவே பெரிய எதிர்ப்பை சம்பாத்தித்தது போஸ்டர்.

இளம் தலைமுறையினர் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த பிறகு சினிமா சார்ந்த விளம்பரங்கள் அனைத்தும் ட்விட்டர், யுடியூப் என வரிசை கட்ட ஆரம்பித்தன. ஆனால் அதற்கு மாறாக ஊர் சுவர் பக்கம் கவனம் செலுத்தினார் பாலா. ஆகவே ‘வர்மா’ போஸ்டர் பழைய சினிமா பாணியில் சுவரில் கொண்டுபோய் ஒட்டப்பட்டது. ஆனால் அந்த எதிர்மறையான செய்திகள் குறித்து படக்குழு சார்ப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அது எப்போதும் பாலாவின் பாணிதான். தனது படங்கள் குறித்து சர்ச்சை எழும்போது எல்லாம், அவர் அதை அமைதியினால் மட்டுமே கடந்து போய்விடுவார். அதே அமைதிதான் இப்போது அவர் பக்கம் நிலவுகிறது. இதையெல்லாம் மீறி ‘வர்மா’ டீசர் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு நிலவியது.

இதற்கு முன் ‘நாச்சியார்’ படமும் இதேபோல சர்ச்சையில் சிக்கியது. படத்தின் டீசர், கடந்த வருடம் 2017 நவம்பர் மாதம் வெளியானது. அப்போது அந்த டீசரில் நடிகை ஜோதிகா, சர்ச்சை மிகுந்த ஒரு வசை சொல்லை பயன்படுத்த போக, பற்றிக் கொண்டது தமிழ்நாடும் தமிழ் சினிமாவும். இப்படிதான் ஒரு அசிங்கமான வார்த்தையை வகைதொகை இல்லாமல் பயன்படுத்துவதா என வரிசையாக வசனம் எழுத ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். அப்போதும் அமைதி காத்தார் பாலா. ‘ஒரு பெண் வலுவானவள் எனக் காட்ட இப்படி வசை சொல் பேசினால்தான் அது பொருந்துமா?’ எனக் கேள்வி கேட்டனர் பலர். 

இதற்குமுன் இதேபோல ‘பரதேசி’ படம் சர்ச்சையில் சிக்கியது. அதாவது படம் சம்பந்தமான ஒரு வீடியோ வெளியாக அதில், பாலா குச்சியை வைத்துகொண்டு நடிகையை அடிப்பதைப்போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. உடனே பாலா ஒரு குரூர மனநிலை கொண்டவர் என நெட்டிசன்கள் அவரை கொத்தி எடுத்தனர். படம் வெளியான பிறகு மதமாற்றம் சம்பந்தமாக படத்தில் இடம்பெற்ற வசனம் சர்ச்சையானது. 

இது ஏதோ முதல்முறை சர்ச்சையல்ல; பாலாவின் ‘அவன் இவன்’, ‘தாரைதப்பட்டை’ போன்ற படங்களில், இதே மாதிரி இடம்பெற்ற வசை வசனங்களுக்காக பாலா விமர்சிக்கப்பட்டார். ‘அவன் இவன்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட ஜமீனை கேலி செய்ததால் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்த ஒரு வழக்கும் பல காலமாக நடந்து வருகிறது. வரலக்ஷ்மியின் பாத்திரப் படைப்புக்காகவும் இவர் மீது சில விமர்சனம் வைக்கப்பட்டன. 

இதற்குமுன் ஒரு சர்ச்சை. ‘குற்றப்பரம்பரை’ சம்பந்தமானது. பாரதிராஜா காலம் காலமாக இந்தக் கனவு படத்தைப் பற்றி பேட்டிகள் கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு முன் ஒரு ‘குற்றப்பரம்பரை’ படத்தை எடுக்க பாலா திட்டமிட்டார். இதை அறிந்த பாரதிராஜா ‘பாலா என் எச்சிலைத் திங்க மாட்டான் என்று நம்புகிறேன்’ என்ற தொனியில் ஒரு வாரப் பத்திரிகைக்கு பேட்டிக் கொடுத்தார். அதற்கும் பாலா மிகமிக அமைதியை கடைபிடித்தார். பிறகு சர்ச்சை அதிகமாக, பாரதிராஜா அவசர கதியில் தன் சொந்த மண்ணில், ‘குற்றப்பரம்பரை’க்கான ஒரு பூஜையை வெகு விமர்சையாக போட்டார். விவகாரம் பெரிதாகிக் கொண்டே போக இறுதியில் விளக்கம் அளித்தார் பாலா. 

அதில், “'குற்றப்பரம்பரை' என்பது கதையல்ல, அது நடந்த உண்மைச் சம்பவம். நான் கதை எழுதினேன், நான் கதை எழுதினேன் என்று யாருமே உரிமை கொண்டாட முடியாது. இது வரலாறு. ஜாலியன் வாலா பாக் படுகொலையை நான் மட்டும் தான் எடுப்பேன் என்று யாராவது சொல்ல முடியுமா? 'மருதநாயகம்' படத்தை நான் மட்டும் தான் எடுக்க முடியும் என்று கமல் சார் சொல்ல முடியுமா? வரலாற்றை யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எடுக்கலாம். அந்த வரலாற்றை நான் தான் படமெடுப்பேன் என்று அடம்பிடிப்பது சிறுபிள்ளைத்தனமான ஒரு விஷயம்” என்று கூறினார். 

எப்போதும் படம் தொடங்கும் போதும் அல்லது ரிலீசின் போதும் பாலா படங்கள் சர்ச்சையை சந்திப்பது வழக்கம். ஆனால் அதற்கு நேர்மாறாக இவர் மீது ஒரு சர்ச்சை எழுந்தும் உள்ளது. ‘நான் கடவுள்’ படம் வெளியாகி பல வருடங்கள் தாண்டி, அந்தப் படத்தில் நடித்ததாக கூறப்பட்ட ஒரு பெண்மணி, “எங்களுக்கு அதிக சம்பளம் தருவதாக கூறி அழைத்து போனார்கள். ஆனால் தரவே இல்லை. இதனால் 9 மாதங்கள் பிச்சை எடுக்கும் பிழைப்பை விட்டு போனது வீணாக ஆகிவிட்டது” எனக் கூறி ஒரு வீடியோ வெளியாக விஷயம் தீயாக பரவியது. அதற்கு பாலா எதுவும் மறுப்பு தரவில்லை. ஆனால் அந்தப் படத்தில் வேலை செய்த பார்த்திபன் ஜெயராமன் முகநூலில் விளக்கம் அளித்திருந்தார். 

இதை அனைத்தையும் மீறி பாலாவின் முதல் படமான ‘சேது’ வெளியான போது அவரின் திரைக்கதைக்காக மிகவும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒருவகுப்பினரை அவர் தூக்கிப் பிடிக்கிறார் எனக் கூறப்பட்டது.  இந்தப் படங்களின் வரிசையில் இப்போது பாலாவின் ‘வர்மா’ சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com