இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகன் மகேந்திரசிங் தோனி...

இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகன் மகேந்திரசிங் தோனி...
இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகன் மகேந்திரசிங் தோனி...
Published on

தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில், சிறுவயதில் பெற்றோரிடம் சச்சின் போஸ்டரை கேட்டு அடம் பிடிப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், காலம் அந்த ஜாம்பவானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராக தோனியை உயர்த்தியுள்ளது. வெறும் அதிர்ஷ்டம் மட்டுமே தோனியை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துவிடவில்லை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பும், முயற்சியும் அபாரமானது.

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை என்ற அளவில் இந்திய அணியை 331 சர்வதேச போட்டிகளில் தோனி வழிநடத்தியுள்ளார்.

மகேந்திரசிங் தோனி, 60 டெஸ்ட் போட்டிகள், 199 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 சர்வதேச டி20 போட்டிகளின் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பினை வகித்துள்ளார். இளம் இந்திய அணிக்கு கடந்த 2007ம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்ற தோனி, ஐசிசியின் முதல் டி20 உலககக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். கோபமான கேப்டன்களையே பார்த்து வந்த கிரிக்கெட் உலகம் தோனியின் அணுகுமுறையைக் கண்டு வியந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அமைதியான கேப்டன் கூலாக அறியப்பட்ட தோனியின் பேட், அவரைப் போல அமைதியானதல்ல. உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் சுழற்பந்து வீச்சாளர்கள் வரை தோனியின் மட்டை சுழலும் வேகத்தை அறிவர். சிறந்த பினிஷர் என்று புகழப்படும் தோனி, கடைசி சில ஓவர்களின் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அபாயகரமான பேட்ஸ்மேனாகவும், அமைதியான கேப்டனாகவும் அறியப்பட்ட தோனியின் சாதனைகள்.

* சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டம் என அனைத்து சாதனைகளையும் தனது கேப்டன்ஷிப்பில் பெற்ற ஒரே கேப்டன் என்று தோனியை கிரிக்கெட் உலகம் தலையில் வைத்து கொண்டாடுகிறது.

* சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (230) மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் (218) ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகளில் (199) கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் தோனி.

* சர்வதேச கிரிக்கெட்டில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் கண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. மொத்தம் 9 சதங்கள் கண்டுள்ள தோனி, அதில் ஏழாவது வீரராகக் களமிறங்கி 2 சதங்களை விளாசியுள்ளார்.

*அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் தோனியே முன்னிலை வகிக்கிறார். 439 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், இதுவரை 152 பேரை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றியுள்ளார்.

* ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் தோனிதான். 73 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1112 ரன்களை குவித்துள்ளார். ஆனால், ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

*சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலில் தோனியே முந்தி நிற்கிறார். 324 போட்டிகளின் முடிவில் தோனி 204 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்றுவிதமான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தோனி தலைமையிலான இந்திய அணி வாகை சூடியிருக்கிறது. 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை. இதுமட்டுமல்லாமல் தோனி தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ர் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த 2009ல் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com