இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் என்றால் உயிர் மூச்சு. அதுவும் இப்போது வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு தோனிதான் ஆதர்ச நாயகன். இந்தாண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி தன் ஓய்வை அறிவித்தபோது, உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் மனம் அதனை ஏற்க மறுத்தது. இந்திய ஜெர்சியில் தோனியை காண முடியாது என வருந்தினர். ஆனாலும் அவர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் தோனியை சிஎஸ்கே ஜெர்சியில் பார்க்கலாம் என்பதுதான்.
அதற்கு ஏற்றார் போல முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தியது. தோனியின் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். "திரும்ப வந்துட்டேனு" சொல்ல என ஆர்ப்பரித்தார்கள். ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வி முகம் கண்ட சிஎஸ்கே. இப்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. காலகாலமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற சிஎஸ்கே இந்தாண்டு கடைசி இடத்தில் என்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆடும் லெவனை மாற்றாமல் இருந்தது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, சொதப்பலான முடிவுகள் என தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் தோனி. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இம்முறை தோனி மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. இதில் உச்சக்கட்டமாக நேற்றையப் போட்டியில் ராஜஸ்தானுடனான படுதோல்விக்கு பின் தோனி பேசியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
போட்டிக்கு பின் பேசிய தோனி இளம் வீரர்களிடம் "ஸ்பார்க்" இல்லை என்றும் இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். தோனியின் இந்தக் கருத்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் முன்வைத்துள்ளார். தோனியின் இந்தக் கருத்து அபத்தமானதென்றும் ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க் கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லாவிடம் இருக்கிறதா என்று சரமாரியான கேள்வியை முன் வைத்துள்ளார்.
"அவுட் ஆஃப் பார்மில்" இருக்கும் கேதர் ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது ஏன், கரன் சர்மாவுக்கு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்காமல் சொதப்பும் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது ஏன் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடிய இம்ரான் தாஹீருக்கு அணியில் இடமளி்க்காமல் போனது ஏன் என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிகையாளரும் கிரிக்கெட் விமர்சகருமான டாக்டர் சுமந்த் சி ராமன் கூறும்போது "தோனி இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வாய்ப்புகள் வழங்கினால்தான் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஒரு போட்டியில் வாய்ப்பு வழங்கிவிட்டு ஸ்பார்க் இல்லை என கூறக் கூடாது. கடந்த 3, 4 போட்டிகளில் அணியின் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது.
அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும்போது கேதர்ஜாதவ் நான்காம் நிலையில் இறங்கி விளையாடும் வீரர்கள் என்கிறார். ஆனால் இந்தத் தொடரில் அவர் ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் 6 அல்லது 7 இல் களம் இறங்குகிறார். அந்த இடத்தில் ஆடுவதற்கு நல்ல ஆல்ரவுண்டரே போதுமானது, பேட்ஸ்மேன் தேவையில்லை. கடந்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு கைகொடுத்த திட்டம் இந்தாண்டு கை கொடுக்கவில்லை. மேலும் இந்த சீசனில் அணி தேர்வும் மோசம். மொத்தத்தில் பல்வேறு கேள்விகளை முன் வைத்தால் சிஎஸ்கே இந்தாண்டு புரியாத புதிராகவே இருக்கிறது" என்றார்,