”தோனியை அவ்வளவு எளிதாக நிராகரிக்க இயலாது” - சடகோபன் ரமேஷ் சிறப்பு பேட்டி

”தோனியை அவ்வளவு எளிதாக நிராகரிக்க இயலாது” - சடகோபன் ரமேஷ் சிறப்பு பேட்டி
”தோனியை அவ்வளவு எளிதாக நிராகரிக்க இயலாது”  - சடகோபன் ரமேஷ் சிறப்பு பேட்டி
Published on

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருப்பதால், இப்போதே கிரிக்கெட் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடப் போகிறார் என்ற மகிழ்ச்சி சென்னை ரசிகர்களிடையே நிலவி கொண்டிருந்த வேளையில், ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இது ஒரு பக்கம் என்றால் இந்த கொரோனா வேறு “இங்கு நானும் இருக்கிறேன்” என்று கூறி தனது வேலையை காட்டி விட்டது. இப்படி ஆரம்பம் முதலே அனுபவ வீரர்களை இழந்து, பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை அணி  இந்த தொடரில் போட்டியை எப்படி சாமாளிக்கப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.


ஆரம்ப கட்டத்திலேயே சி.எஸ்.கே இரண்டு அனுபவ வீரர்களை இழந்து நிற்பதை நீங்கள் எப்படி பார்க்கீறீர்கள்?

ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா இரண்டு வீரர்களுமே அனுபவம் வாய்ந்த வீரர்கள். குறிப்பாக ரெய்னா. சி.எஸ்,கே என்ற அணி ஆரம்பமான முதலில் இருந்தே, அணிக்கான அவரது பங்கு மிக அதிகம். தோனி எப்படி ஒரு கேப்டனாக கலக்கினாரோ, அதே போல ரெய்னாவும் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக கலக்கியிருக்கிறார். ஹர்பஜன் சிங்கும் அதே போலதான்.

இந்த ஐபிஎல் தொடரைபொறுத்தவரை அனுபவம் பெரும் பங்காற்றும் என நினைக்கிறேன். காரணம் இந்த ஐபிஎல் தொடர் சவால்கள் நிறைந்த தொடராக இருக்கிறது. இதனால் வீரர்களிடையே அதிக அழுத்தம் நிலவும். ஆகையால் களத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இரு வீரர்களும் அணியில் இருந்து வெளியேறியது நிச்சயம் ஒரு பின்னடைவுதான்.

இருப்பினும் தல தோனி அணியை வழி நடத்துவதால் சென்னை அணியின் மீது உள்ள நம்பிக்கை ரசிகர்களிடம் குறையாது என்று நினைக்கிறேன். எனக்கும் தோனி மீது நம்பிக்கை இருக்கிறது. மைதானமும் நமக்கு ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

தோனி - ரெய்னா காம்பினேஷனை ரசிகர்களை மிஸ் செய்கிறார்களே?

அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் வெளியே சென்றது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், இது போன்ற இக்கட்டனா சூழ்நிலைகளில் தான், நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு புதிய கிரிக்கெட் வீரர்கள் உருவாவர். ஆகையால் புதிய வீரர்கள் உருவாகிறார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி களத்தில் இறங்குகிறார். அவரின் ஆட்டம் எப்படியிருக்கும் என நீங்கள் நினைக்கீறீர்கள்?

தோனி தனது பேட்டிங் திறமையாலும், தலைமைத்துவத்தினாலும் சில போட்டிகளை தனியாக நின்று ஜெயித்து கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

தோனி மாதிரி ஒரு கிரிக்கெட் வீரரை அவ்வளவு எளிதில் நாம் நிராகரித்து விட முடியாது. குறிப்பாக அவரது கேப்டன்சி. ஐபிஎல் பார்மெட்டை முதலிலேயே அருமையாக புரிந்து கொண்டு கேப்டன்சி செய்தவர் அவர். ஐபிஎல் மட்டுமல்ல 20-20 கிரிக்கெட் போட்டிகளிலும் கூட, எந்த வகையில் விளையாடினால் சரியாக இருக்கும் என்பதை நன்கு அறிந்து கேப்டன்சி செய்தவர் தோனி.

இந்த ஐபிஎல் தொடருக்காக அவர் அதிக பயிற்சி எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆகையால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

துபாயில் அமைந்துள்ள மைதானங்கள் சிஎஸ்கே வீரர்களுக்கு எந்த வகையில் சவாலானதாக இருக்கும்?

ஸ்லோ பிட்சானது பேட்ஸ்மேன்களுக்கு சவாலானாதகவே இருக்கும். காரணம் பந்து வீச்சாளர் வேகமாக பந்து வீசும் போது அதன் வேகத்தைப் பயன்படுத்தி வீரர்கள் அதனை நெடுந்தூரம் அடிக்க முயல்வர். ஆனால் ஸ்லோ பிட்சானது அதன் வேகத்தைக் குறைத்து விடும். இதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு அதிக எனர்ஜியை போட வேண்டி இருக்கும்.

இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பவுன்ஸ். ஆரம்பத்தில் பவுன்ஸ் பந்துகள் அதிக வந்தாலும், நாளடைவில் அது குறையத்தொடங்கும். ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பவுன்ஸர்களை அதிக பயன்படுத்துவர். ஆகையால் இந்த ஐபிஎல் தொடர் அவர்களுக்கு சவாலானதாக இருக்கும்.

உங்களைப் பொருத்தவரை யார் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கீறீர்கள்?

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை பொதுவாக ஓபனர்களுக்கே அதிக ஓவர்களை விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கும். அந்த வகையில் கோலி, டேவிட் வார்னரின் ஆட்டங்களை நாம் நிறைய பார்த்து விட்டோம். அந்த வரிசையில் இளம் வீரரான கே.எல்.ராகுல் அதை சாதிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

 - கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com