"வாக்குவங்கி அரசியலுக்காக பிராமணர்களை இழிவுபடுத்துவதா?"-RSS தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு

"வாக்குவங்கி அரசியலுக்காக பிராமணர்களை இழிவுபடுத்துவதா?"-RSS தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு
"வாக்குவங்கி அரசியலுக்காக பிராமணர்களை இழிவுபடுத்துவதா?"-RSS தலைவர் மோகன் பகவத் மீது வழக்கு
Published on

பிராமணர்களை இழிவுபடுத்தியதாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் மீது பீகார் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்து மதக் குருக்களில் ஒருவரான சிரோமணி ரோஹிதாஸின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “நாம் சம்பாதிக்கும்போது நமக்கு பொறுப்பு உருவாகிறது. அப்படி இருக்கையில், எந்த வேலையும் பெரியது சிறியது என கிடையாது. வேலைகளில் பாகுபாடுகள் இல்லாதபோது, மனிதர்களிலும் பாகுபாடுகள் கிடையாது. நம்மை படைத்த கடவுளின் முன் நாம் அனைவரும் சமமானவர்கள். சாதி, பேதம் என்று ஏதும் இல்லை. இந்த சாதி பாகுபாட்டை பண்டிதர்கள்தான் உருவாக்கினார்கள்.

அது தவறானது. நீங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருங்கள். அதுதான் மதத்தின் சாரம். காசியில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டபோது சத்ரபதி சிவாஜி, ஒளரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில், ’இந்துக்களும், முஸ்லீம்களும் கடவுளின் பிள்ளைகள். இதில் ஒருவர்மீது விரோதத்தைக் காட்டுவது தவறு. அனைவருக்கும் மதிப்பு கொடுப்பது உங்களது கடமை. இந்துக்களுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்படவில்லை எனில் நான் வாள் எடுக்கவேண்டி வரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த விதமான வேலை செய்தாலும் அந்த வேலைக்கு மரியாதை தர வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை தராததே வேலையின்மைக்கு முக்கிய காரணம். அரசால் 10 சதவீத வேலையையும், மற்றவர்கள் 20 சதவீத வேலையையும் உருவாக்க முடியும். எந்த சமூகமும் 30 சதவீதத்தை தாண்டி வேலைகளை உருவாக்க முடியாது. எனவே, அனைத்து விதமான வேலைகளையும் மதிப்புடன் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.

மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை தொடர்ந்து, பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 504, 505 மற்றும் 506 (அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் 153 மற்றும் 153-ஏ பிரிவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கறிஞர் சுதிர் ஓஜா, “பிப்ரவரி 5-ம் தேதி மும்பையில் பிராமணர்கள் சாதிகளை உருவாக்குவதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார் அவர். வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு, சமூகத்தில் பிளவை உருவாக்கும் முயற்சியில் வேண்டுமென்றே அறிக்கையை வெளியிட்டுள்ளார் அவர்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com