பணமதிப்பு நீக்கத்தை பிரதமர் மோடி அறிவித்த அந்த உரையில் அவர் ‘பணமில்லா பரிவர்த்தனை (Cashless Transaction)’ குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு, மக்கள் காசில்லாமல் தெருவில் நின்ற பின்னர்தான் மோடி அது குறித்து பேசினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பி.ஜே.பி. பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மோடி,''ஒரு பிச்சைக்காரர் டெபிட் கார்டு வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போல வீடியோ பார்த்தேன், ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்போது பிச்சைக்காரர்கள் கூட டெபிட் கார்டு பயன்படுத்தும்போது நாம் ஏன் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறக் கூடாது?'' என்றார்.
2016 டிசம்பர் முதல் சமீபகாலம்வரை ‘பணமதிப்பு நீக்கத்தினால் ரொக்கப் பரிவர்த்தனை ஒழிந்துவருகிறது’ என்று பணமில்லா பரிவர்த்தனையை ஒரு சாதனையைப் போலப் பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஆனால் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது, "இந்தியாவில் 97 சதவீதம் பரிவர்த்தனை பணத்தின் மூலமாகவே நடக்கிறது. இந்த சூழலில் திடீரென பணமில்லா சமுதாயத்தை உருவாக்குவது என்பது சாத்தியமே இல்லை. 97 சதவீதம் பண பரிவர்த்தனையை அதிகபட்சம் 80 சதவீதம் வரை குறைக்கலாம். ஆனால் பணமில்லா சமூகமாக எப்படி மாற்ற முடியும்?" என்ற கேள்வி வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டது. இதற்கு வழக்கம் போல மத்திய அரசிடம் பதில் இல்லை.
ஏழைகள் இல்லாத நாடு, முழு கல்வியறிவு பெற்ற நாடு, முழுமையான தொழில்நுட்ப வசதிகளைப் பெற்ற நாடு - என சொல்லப்படும் ஜெர்மனியிலேயே பணப்பரிவர்த்தனை என்பது 75 சதவீதத்துக்கும் அதிகம். அப்படியிருக்க வளர்ந்து வரும், ஏராளமான ஏழைகளை கொண்ட இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனை என்பது அத்தியாவசியம் அல்ல.
தவிர பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டில் இந்திய கிராமங்களில் 60% முழு மின்வசதி அற்றவையாக இருந்தன. 24 கோடி இந்தியர்களுக்கு மின்வசதி அறவே இல்லை, இந்திய கிராமவாசிகளில் 100ல் 29பேர் மின்சாரத்தை வீட்டுக்கு வெளியேதான் பார்த்தார்கள். சில மாநிலங்களில் இந்த நிலவரம் இன்னும் மோசம். உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தின் கிராமவாசிகளில் 61% பேர் மின்வசதியற்ற வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.
நடப்பாண்டில் ’கடந்த 2 ஆண்டுகளில் 13,523 கிராமங்களுக்கு மின்வசதி கொடுத்தோம்’ என்று பெருமையாக அறிவித்தது மத்திய அரசு, ஆனால் இந்த கிராமங்களில் 8% கிராமங்களின் மக்களுக்கு மட்டுமே முழுமையாக மின்வசதி கொடுக்கப்பட்டது, மற்றவர்கள் மின்விளக்குகளைப் பார்த்தார்கள் அவ்வளவுதான். இதனால்தான்’ இந்தியா முழுமையாக மின்வசதி பெறவில்லை என்று 2017ல் ’சவுபாக்யா யோஜனா திட்டம்’ திட்டம் கொண்டுவந்தார் மோடி. மின்வசதியே சென்று சேராத மக்களுக்கு 2016ல் எப்படி பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாக இருந்திருக்கும்?.
மேலும் வறுமை, கல்லாமை, கல்வியறிவின்மை, மூடநம்பிக்கைகள், சுகாதார சீர்கேடுகள், ஜாதிப் பாகுபாடுகள் – போன்ற ஒழிக்கப்பட வேண்டிய பல சீர்கேடுகள் மலிந்த நம்நாட்டில் அரசு ’ரொக்கப் பணப் பரிவர்த்தனையை ஒழிப்போம்’ என்பது இன்னும் கேலிக்கூத்தான ஒன்று. பணப் பரிவர்த்தனை என்ன பாவமா? பணமில்லா பரிவர்த்தனைதான் புண்ணியமா?
இன்னொரு பக்கம் ’பணமில்லா பரிவர்த்தனை என்ற முழக்கம், பே.டி.எம். நிறுவனம் மீதான மோடியின் பாசம்’ - என்று பணமதிப்பு நீக்கத்தின் துவக்க நாட்களிலேயே விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனத்தின் பின்னாக பணமதிப்பிழப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் பேடிஎம் நிறுவனம் மோடியின் புகைப்படத்தோடு வெளியிட்ட முழுப்பக்க விளம்பரம் இருந்தது.
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு பிரதமர் தனியார் நிறுவன விளம்பரங்களில் தோன்றக் கூடாது, ஆனால் இந்த விளம்பரம் அந்த விதியை மீறி இருந்தது. இதற்கு முன்னதாக ரிலையன்சின் ஜியோ விளம்பரத்திலும்கூட மோடியின் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
பின்னர் இந்த விதிமீறல்கள் தனது அனுமதி இல்லாமல் நடந்ததாக பிரதமர் மறுத்தார், ஆனால் இது பற்றி அவராக ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. இதனால் பேடிஎம் என்பதை ‘பே டூ மோடி’ என்று ராகுல்காந்தி விமர்சித்தார். பின்னர் மோடியின் படம் போட்ட விளம்பரங்களால் கொழித்த தனியார் நிறுவனங்கள் கடைசியில் மிகப்பெரிய அபராதமாக ரூபாய் 500/-க் கட்டின.
இன்னொரு பக்கம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது உண்மையான பணப்பரிமாற்றமே அல்ல. ஏனெனில் உண்மையான பணப்பரிமாற்றத்தில் ஒரு நூறு ரூபாய் 10 கைகள் மாறிய பின்னும் 100 ரூபாயாகவே இருக்கும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் ஒவ்வொரு கை மாறும்போதும் 3 ரூபாய்கள் குறைந்து பத்தாவது நபரின் கைக்கு வரும்போது அது 70 ரூபாயாகக் குறைந்திருக்கும், இதன் மூலம் பணப்பரிமாற்ற நிறுவனம் மட்டுமே லாபம் அடையும். பேடிஎம் நிறுவனத்தின் 25% முதலீடுகள் சீனாவின் அலிபாபா குழுமத்திற்கு சொந்தமானது என்பது இங்கு கவனிக்க வேண்டிய தகவல். இந்தியாவின் மிக முக்கிய ராணுவ எதிரிக்கு இந்தியா செய்த நிதி உதவி என்றுதான் பேடிஎம்மை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
25 கோடி இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் உணவில்லாமல் வாழும் நாட்டில், பணமில்லா பரிவர்த்தனையை ஒரு அரசு தனது பிரதான இலக்காகக் கூறுகிறது என்றால், மக்களின் தேவைகளை அரசு இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமே அதன் அர்த்தமாக இருக்க முடியும்.