“இரண்டு டோஸ் போட்டாலும் கொரோனா தாக்கும், பரவும்” - புதிய ஆய்வுகள் விடுக்கும் எச்சரிக்கை

“இரண்டு டோஸ் போட்டாலும் கொரோனா தாக்கும், பரவும்” - புதிய ஆய்வுகள் விடுக்கும் எச்சரிக்கை
“இரண்டு டோஸ் போட்டாலும் கொரோனா தாக்கும், பரவும்” - புதிய ஆய்வுகள் விடுக்கும் எச்சரிக்கை
Published on

டெல்டா வகை கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவோருக்கு தடுப்பூசி மிகச்சிறந்த உதவியாக இருக்குமென கூறியிருந்த நிலையில், அவற்றுடன் கூடுதலாக சில விஷயங்களையும் பின்பற்றுவது அவசியமென சமீபத்திய ஆய்வொன்று கூறியுள்ளது.

அந்த ஆய்வில் ‘தடுப்பூசி மட்டுமே போதாது. அவற்றுடன் உரிய நோய்த்தடுப்பு நடவடிக்கை - நோயை கட்டுப்படுத்தும் திறன் போன்றவையும் அவசியம். இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் அதிகமிருக்கும் இடத்தில் வாழும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் என்றாலும்கூட, அவருக்கும் நோய்ப் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம்’ என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 113 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ ஆய்வில், இவையாவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை இரண்டு மருத்துவமனைகள் முன்னெடுத்து நடத்தியுள்ளது. ஆய்வில், ‘தடுப்பூசி மக்களை கொரோனாவின் தீவிரத்திலிருந்து காக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம், தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா ஏற்படும் என்றே தெரியவருகிறது. போலவே தடுப்பூசி போட்டவர்களிடமிருந்து கொரோனா பரவும் வாய்ப்பும் உள்ளது தெரியவருகிறது. குறிப்பாக இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவருக்கு, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இந்தியன் சார்ஸ் - கோவிட் 2 ஜீனோமிக் கான்சார்டியம் (INSACOG), சி.எஸ்.ஐ.ஆர், தேசிய நோய்த்தடுப்பு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தங்களின் இந்த ஆய்வு, “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கும் கொரோனா வரக்கூடும்” என்பதை நிரூபிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வாளர்கள், டெல்டா வகை கொரோனாவை தங்களுடைய ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்கள். தற்போது டெல்டா கொரோனாதான் அதிகம் பரவுகிறது என்பதால், தடுப்பூசி செலுத்தியவர்கள் மிக மிக கவனமாகவும், மாஸ்க் அணிந்தும் இருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ‘ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் ஒரே இடத்தில் இருந்தால், அவர்கள் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கக்கூடாது. அவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என தமிழக அரசு பொதுச் சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்து அரசாணையொன்று வெளியிடப்பட்டிருந்தது. தடுப்பூசி கட்டாயம் என அரசு கூறிவரும் நிலையில், ‘தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது’ என்ற இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதேநேரம் இந்த ஆய்வில் எந்த இடத்திலும் தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசப்படவில்லை என்பதால், தடுப்பூசியினால் நன்மையில்லை என்ற முடிவுக்கும் நம்மால் வர இயலாது. ஆக, தடுப்பூசி கொரோனாவை தடுக்க உதவும். ஆனால் தடுப்பூசி மட்டுமே போதாது. உடன் கூடுதலான தடுப்பு மற்றும் எச்சரிக்கைகளும் நமக்குத் தேவைப்படுகிறது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட பேராயுதம் என்பதால், அதை யாரும் தவிர்க்காமல் இருப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் பலரும் அழுத்தமாக கூறி வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தகவல் உறுதுணை: TOI

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com