நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை...

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை...
நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? ஓர் பார்வை...
Published on

நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்ந்தறிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நீட் தேர்வுக்கு முன்னும், பின்னும் மாணவர் சேர்க்கை எவ்வாறு இருந்தது என்ற புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன. அதன்படி நீட் தேர்வுக்குப் பின்னர் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களில் அதிகமானோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு முன்:

2013-14ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3251 பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 4 பேர். பிறர் 12 பேர், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்க, 2014-15 கல்வி ஆண்டைப் பொருத்தவரையில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3147 பேர் இவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,140பேர், சிபிஎஸ்இ மாணவர்கள் 2 பேர், பிறர் 5பேர். 

2015-16ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட சற்று குறைந்தது. மொத்தம் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோர் 3,015 பேர். இவர்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 2,996பேர். சிபிஎஸ்இ மாணவர்கள் 2பேர் பிறர் 17 பேர்.

2016-17ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட சற்று அதிகரித்தது. மாநில அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 3,544 பேரும், சிபிஎஸ்இ மாணவர்கள் 35 பேரும், பிறர் 29 பேரும் என அந்த ஆண்டில் 3,608 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்வுக்குப் பின்:

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க சேர்ந்தோர்களில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 2017-18ஆம் ஆண்டில் ஆயிரத்து 113ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் முன்னர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த 3000 அதிகமானோர் மருத்துவப்படிப்பில் சேர்ந்து வந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கையானது 2,303ஆகக் குறைந்தது.

அதற்கு அடுத்த 2018-19ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 3,618ஆகும். இதில் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படித்தோர் 2626 பேரும் சிபிஎஸ்இ மாணவர்கள் 894 பேரும், பிறர் 118 பேரும் அடங்குவர். 

2019-20ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தோரின் எண்ணிக்கை 4ஆயிரத்தைத் தாண்டியது. மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் படித்த 2,762 பேர், சிபிஎஸ்இ மாணவர்கள் 1,368 பேர், பிற கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் 72பேர் என மொத்தம் 4,202 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

2020-21ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் 336 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இடங்களை ஒதுக்கினர். மீதமுள்ள 92.5 விழுக்காடு இடங்களில் மொத்தம் 4,129 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். முன் எப்போதும் இல்லாத அளவில் சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 1,604ஆக உயர்ந்தது. அதே போல் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 2,453 ஆக குறைந்தது.

மேலும், நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும், கிராமங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. கிராமத்திலுள்ள மாணவர்களும், நகரங்களில் உள்ள ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படும் என்றும், தமிழ்நாடு சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு சென்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்பில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு பின்தங்கிவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்கள், ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் பெறும் பெற்றோரின் குழந்தைகள் நீட் தேர்வால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.ராஜன் குழு விரிவான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்னதாக 2016-17 ஆம் கல்வியாண்டில், அரசு பள்ளியில் படித்த 1,173 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 34 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்தது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளியில் படித்த எவருக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2019-20 ஆம் கல்வியாண்டில் 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், 336 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்கிடைத்தது.

இதுபோல, நீட் தேர்வுக்குப் பிறகு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், தமிழக மருத்துவ கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்னதாக 0.39 விழுக்காடாக இருந்த சிபிஎஸ்இ மாணவர்கள் எண்ணிக்கை, நீட் தேர்வுக்கு பின் 26.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நீட்-க்கு முன்னாள் 12.14 சதவிகித தமிழ்வழி மாணவர்கள் மருத்துவம் படித்த நிலையில், நீட் தேர்வுக்கு பின்னர் அது படிப்படையாக குறைந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் 1.7 சதவிகித தமிழ்வழி பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com