பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்படுமாயின், உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.
தீபாவளி என்றால் நமது நினைவுக்கு வருவது பட்டாசு. காலை உணவை ஒரு கட்டுகட்டிவிட்டு பட்டாசை பற்ற வைத்தோம் என்றால் சரவெடிச் சத்தம் நள்ளிரவு வரை காதைப் பிளக்கும்.
ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் சில நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கும்போது எதிர்பாரதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுவிடும். அது போன்ற அசாதாரண சூழ்நிலைகளை நாம் எப்படி கையாளவேண்டும் என்பதை பார்க்கலாம்.
இது குறித்து மருத்துவர் டாக்டர் ஷில்பி பதானி கூறும்போது “ இது போன்ற சூழ்நிலைகளை கையாள்வது குறித்து மக்களிடம் பல வதந்திகள் நிலவுகிறது. தீக்காயம் ஏற்பட்டுவிட்டால், காயம் பட்ட இடத்தில் சிலர் ஐஸ்கட்டிகளையும், டூத்பேஸ்டையும் வைக்கின்றனர். இந்த இரண்டுமே காயத்தை இன்னும் மோசமாக்கும்.
ஒருவேளை எதிர்பாரதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக குழாயில் வரும் சாதாரண நீரை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஊற்றலாம். இது தீக்காயம் ஏற்பட்ட இடத்தை குளுமைப்படுத்துவதோடு தீக்காயத்தின் ஆழத்தன்மையை குறைக்கும். மாறாக நீங்கள் டூத் பேஸ்டை உபயோகிக்கும்போது, தீக்காயம் பட்ட இடத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து காயம் இன்னும் மோசமாகும்.
5 நிமிடம் சாதரண நீரில் தீக்காயம் பட்ட இடத்தை அலசிய உடன் முதலுதவி சிகிச்சையை அளிக்கலாம். தீக்காயம் ஏற்பட்டு கொப்பளங்கள் உண்டாகுமாயின், அதை உடைக்காமல் மருத்துவ உதவியை நாடுவது சாலச்சிறந்தது.
பட்டாசு வெடிக்கும்போது தளர்வாக இருக்கும் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
சேலை, துப்பாட்டா அணிந்திருக்கும்போது கூடுதல் கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
குழந்தைகள் பட்டாசுகளை கையாளும்போது பெற்றோர் அவர்களுடன் இருப்பது மிக முக்கியம். ஏனெனில் தீக்காயங்கள் குழந்தைகளில் உடலில் மிகத்தீவிரமாக செயல்படும்.