முன்னராக இந்தியாவில், நேற்று முன்தினம் (ஜூன் 21) கொரோனா தடுப்பூசி மீதான புதிய கொள்கை அமலுக்கு வந்தது. சர்வதேச யோகா தினத்தில் அமலான இந்த கொள்கையின் கீழ், அன்றைய தினம் ஒரேயொரு நாளில் 86,16,173 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. இந்த எண்ணிக்கை, உலகளவில் புது சாதனையாகவும், கவனிக்கத்தக்க விஷயமாகவும் பார்க்கப்பட்டது.
பலரும் இதை பாராட்டிவந்த நிலையில், ‘உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம், இந்தியாவில் நடைபெற்று வருகிறது’ என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருந்தார். பிரதமர் மோடி உட்பட, மத்திய அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என பலரும் இதை தங்கள் அரசின் சாதனையாக முன்மொழிந்தனர்.
“இது சாதாரணமான விஷயமில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து, துரிதமாகவும் திட்டத்துடனும் செயலாற்றியதனால்தான் இது நிகழ்ந்திருக்கிறது. அதிக தடுப்பூசி உற்பத்தியும், அதை விநியோக்கும் திறமையும்தான் இதற்கு அடிப்படை காரணம்” என்று பெருமையாக கூறினார் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். மற்றொருபுறம் அரசு சார்பில், வரவிருக்கும் ‘ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அந்தளவு துரிதமாக செயல்படுவோம்’ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஜூன் 21 ம் தேதியன்று, அரசு இந்தளவு பெருமைப்பட்டுக்கொண்டாலும், மறுநாளான ஜூன் 22ல் நிலைமை தலைகீழானது. பழையபடி, தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. ஜூன் 22 ல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தையொட்டி பதிவானது.
இந்த எண்ணிக்கை சரிவை தொடர்ந்து, ‘ஜூன் 21 மட்டும், அத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டது எப்படி, அன்றொருநாள் மட்டும், அதிகம்பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு ஏதேனும் தனி முயற்சி செய்தததா, எனில் அதை ஏன் அரசு இப்போது தொடர்ந்து செய்யவில்லை’ என்ற தொடர்ச்சியான கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில், 'ஜூன் 20 ம் தேதி தடுப்பூசிகளை மத்திய அரசினர் சரியாக விநியோகிக்கவில்லை. அன்றைய தினம் தடுப்பூசிகளை சேமித்துவிட்டு, ஜூன் 21 ல் ஒரேகட்டமாக வழங்கியிருக்கிறார்கள்' என்பது புள்ளிவிவரங்கள் வழியாக தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக, ஜூன் 21, அதாவது 86 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாளன்று, அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள மாநிலங்களில், அதற்கு முந்தைய நாளில் (ஜூன் 20), மிகக்குறைவாக சில ஆயிரங்கள் மட்டுமே தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது, தரவுகளின் வழியாக உறுதியாகியுள்ளது.
உதாரணத்துக்கு, ஜூன் 21 ம் தேதி அதிகம் பேர் (16,91,967 பேர்) தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம். அங்கு, ஜூன் 20 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை - 692 தான். இதேபோன்ற எண்ணிக்கை வித்தியாசம்தான், கர்நாடகா - உத்தர பிரதேசம் - குஜராத் - ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. அங்கெல்லாம் ஜூன் 20ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 68,172 - 8,800 - 1,89,953 - 37,537 என பதிவாகியிருந்தது. மறுநாளான ஜூன் 21 ல், இங்கெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 11,21,648 - 7,25,898 - 5,10,434 - 4,96,598 என்று பதிவானது. இந்த ஒப்பீட்டை அடிப்படையாக வைத்து, பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகிறது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம், இந்த புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, "ஞாயிற்றுக்கிழமை பதுக்கி வைக்கவும், திங்களன்று தடுப்பூசி போடவும், செவ்வாய்க்கிழமை திரும்பிச் செல்லவும் - ஒரே நாளில் அதிகம் பேருக்கு போடப்பட்டது என்ற சாதனைக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான். கின்னஸ் புத்தகங்களில், இந்த சாதனை இடம்பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். யார் கண்டது... மோடி அரசுக்கு மருத்துவத்திற்கான நோபல் அரசு கூட கிடைக்கக்கூடும். அற்புதங்களை நிகழ்த்துபவரல்லவா மோடி" என சாடியிருந்தார்.