பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள் டெல்லி பல்கலைகழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்தும், விளக்கங்கள் குறித்தும் பார்ப்போம்.
பொதுச் சமூகத்தில் தங்களது படைப்புகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் இந்த நடவடிக்கைக்கு படைப்பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த பட்டியலின எழுத்தாளர்களான பாமாவின் சங்கதி என்ற நாவலும், சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய கவிதைகளும் மற்றும் மகாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற திரெளபதி சிறுகதையும் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயும், கல்விக்குழு உறுப்பினர்களாக உள்ள 15 பேரின் எதிர்ப்பையும் மீறி இந்த படைப்புகளை பல்கலைக்கழக மேற்பார்வைக்குழு நீக்கியிருக்கிறது.
இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தங்களது படைப்புகள் நீக்கப்பட்டிருப்பதற்கு எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணி கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய தலைமுறையிடம் பேசிய பாமா, பட்டியலின, பழங்குடியின மற்றும் விளிம்பு நிலை மக்களின் படைப்புகளை மத்திய அரசு இருட்டடிப்பு செய்வதாக குற்றம்சாட்டினார். அவர்களின் கலைகளோ, இலக்கியங்களோ வளரக்கூடாது என்றும், ஆதிக்க சாதியினர் படைப்புகளை மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என மத்திய அரசு நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
புதிய தலைமுறையிடம் பேசிய எழுத்தாளர் சுகிர்தராணி, தனது படைப்புகள் நீக்கப்பட்டதற்கு, வாசகர்களும், சமூகமும்தான் எதிர்வினையாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். எழுத்துகளைக் கட்சி, அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு, டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளை மீண்டும் சேர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், வேண்டுமென்ற திட்டமிட்டு செய்த செயலா என்ற கேள்வியை எழுப்புவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பாமா, சுகிர்தராணி, மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். பெண்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது என்று, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார். இதேபோல், ஈராயிரம் ஆண்டு தமிழ் மரபைப் போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாமா, சுகிர்தராணி உள்ளிட்டோரின் பாடப்பிரிவுகளை நீக்கியது குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி பல்கலைக்கழகம் தனி மனிதர் அல்லது சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தம் நோக்கம் அல்ல என்று தெரிவித்துள்ளது. படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி, பின்புலத்தை வைத்து டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை என்றும், குறிப்பிட்ட சமுதாயத்தையோ, தனிநபரையோ தாக்கும் வகையில் படைப்புகள் இருந்தால் மட்டுமே நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பாடப்பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும், பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக் குழுவானது கடந்த ஆறு ஆண்டுகளாக பாரபட்சமின்றி செயல்பட்டு வருவதாகவும் டெல்லி பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் சுகிர்தராணி பேசுகையில், ''நேற்று காலையில் ஊடகத்தின் வாயிலாகத்தான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன். மாறாக, பல்கலைகழகத்தின் வாயிலாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. படைப்புகள் நீக்கப்படும்போது தகவல்கள் தெரிவித்து, கருத்துகள் கேட்கப்பட வேண்டும். என்னுடைய கவிதைகள் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமூகத்தையோ காயப்படுத்தும் வகையில் இல்லை. கைமாறு, என்னுடல் என்ற இரண்டு கவிதைகள் உண்டு. கைமாறு என்பது மலம் அள்ளும் தொழிலாளி குறித்த கவிதை தான் அது.
இதில் அந்த மக்களின் மணம் புண்பட்டதாக எப்படி கருத முடியும்? காலம் காலமாக அந்த தொழிலே செய்துவரும் அந்த மக்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது தான் அந்த கவிதை. சமூகத்தில் நடப்பதை தானே எழுதுகிறோம். கட்டுக்கதைகளை எழுதவில்லைதானே?. அந்த உண்மையை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்தியாவின் முகமாக இந்த கவிதைகள் இருக்கு. ராக்கெட் அனுப்பும் நாட்டில் மலம் அள்ளும் அவலம் நிகழந்துகொண்டு தானே இருக்கிறது?'' என்றார்.
தொடர்ந்து, ''திரௌபதி படைப்பில், பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் வகையில் காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலை ராணுவ வீரர்கள் செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ராணுவத்தின் மீதான மதிப்பை குறைக்காதா?'' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''இந்திய ராணுவ வீரர்கள் பழங்குடியின மக்கள் மீது நடத்தியிருக்கும் பாலியல் வன்முறைகள் உண்மைதானே. அதைத்தானே அந்த படைப்பு விவரிக்கிறது. நிஜத்தன்மையுடன் இருப்பதால் தான் அந்த படைப்பு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள் என அச்சமடைந்து, படைப்பை நீக்க வேண்டும் என கூறுவது எப்படி சரியாக இருக்கும். ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்யும் தவற்றை எப்படி ஏற்க முடியும்?'' என்றார்.