பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கு 2 ரூபாய், 3 ரூபாய், 61 ரூபாய் என இழப்பீடு தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயிர் சேதத்தால் திணறும் கடலூர் விவசாயிகள்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், நல்லூர், மங்களூர் ,கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட தானிய வகைகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு பயிர் செய்யும் போது தொடர்மழை காரணமாகவும், வறட்சி காரணமாகவும், படைப்புழு உள்ளிட்ட பூச்சி தாக்குதல், வனவிலங்குகளால் சேதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பயிர்சேதம் அடைந்ததால் மீண்டும் விவசாயம் செய்ய முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்களை சந்தித்து வந்தனர்.
கடும் நெருக்கடிக்கு மத்தியில் காப்பீடு செய்த விவசாயிகள்:
இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் பங்கேற்புடன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அதிகாரிகள் விவசாயிகளை கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்க ஏற்கனவே பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விதை வாங்கக்கூட காசு இல்லாத நிலையில் இருந்த விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான தொகையை கடனாக வங்கி 2021ஆண்டுக்கான காப்பீட்டுப் பிரிமியத்தை செலுத்தினர். நெல்லுக்கு 500 ரூபாயும், மக்காச்சோளத்திற்கு 400 ரூபாயும் என்ற கணக்கில் காப்பீட்டு பிரிமியத்தை கூட்டுறவு வங்கிகளிலும் , இ சேவை மையத்திலும் பல நாட்கள் காத்திருந்து விவசாயிகள் செலுத்தினர்.
காப்பீடு தொகை கைகொடுக்கும் என நம்பிய விவசாயிகள்:
இந்த நிலையில் கடந்த ஆண்டு பல்வேறு வகைகளில் இழப்புகளை சந்தித்து வந்த விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுகளைப் போல் இழப்பீடு கிடைக்கும் என்றும் அந்த இழப்பீடு தொகை மீண்டும் விவசாயம் செய்ய பொருளாதார ரீதியாக கை கொடுக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு இந்தாண்டு இழப்பீடு தொகை ஒரு பேரதிர்ச்சியை தந்தது.
2 ரூபாய் இழப்பீடு - காப்பீடு செய்த விவசாயிகள் ஷாக்:
காப்பீடு செய்த விவசாயிக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளில் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. 2 ரூபாய், 3 ரூபாய், 6 ரூபாய் எனவும் ஒரு சில விவசாயிகளுக்கு 61 ரூபாய், 192 ரூபாய் என்ற கணக்கிலும் இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேவை தொகையை விட இழப்பீடு தொகை குறைவு - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்:
பயிர் காப்பீடு செய்வதற்காக இசேவை மையத்தை அணுகிய போது அங்கு சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையை விட குறைவான தொகை இழப்பீடு தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய மாநில அரசுகள் மீண்டும் உரிய ஆய்வு மேற்கொண்டு இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அவ்விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
அரசுத் தரப்பு விளக்கம்:
இது குறித்து வேளாண் துறை அதிகாரியிடம் கருத்து கேட்டதற்கு, “மக்காசோளம் பாதிப்பு குறித்து குறுவட்ட அளவில் ஆய்வு செய்தோம். நெல்லுக்கு கிராம வாரியாக ஆய்வு செய்தோம். இந்த ஆய்வுக் குழுவில் புள்ளியல் துறை, வேளாண் துறை, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி குழுவாக ஆய்வு செய்தோம். விவசாயிகளுக்கு மிகக் குறைவாக காப்பீடு தொகை வழங்கப்பட்டது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேச உள்ளோம்” என தெரிவித்தார்.
- கே.ஆர்.ராஜா, ச.முத்துகிருஷ்ணன்