தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 4

தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 4
தீரன் அத்தியாயம் 2: குற்றப்பரம்பரை – உண்மையும் கற்பிதங்களும்…பகுதி – 4
Published on

குற்றப்பரம்பரைச் சட்டத்தில் இருந்து விலக்கு:

சில ஊர்களில் காவலர்களுக்கு பதிலாக உள்ளூர் பெரிய மனிதர்கள் அடங்கிய குழுக்கள் கையெழுத்து வாங்கும் பணியைச் செய்தன. கள்ளர் பகுதிகளில் இந்தக் குழுக்கள் ‘கள்ளர் பஞ்சாயத்துகள்’ என்று அழைக்கப்பட்டன. விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அரசு அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் – ஆகியோர் பலர் இந்தக் குழுக்கள் மூலம் கைநாட்டு வைப்பதில் இருந்து விலக்குகளையும் பெற்றனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களுக்கே இந்த விலக்குகள் அளிக்கப்பட்டன. 

பல சாதிய அமைப்புகள் தங்கள் மக்களை இந்தச் சட்டத்தில் இருந்து காப்பாற்றப் போராடின, சில வெற்றியும் பெற்றன. செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியர்குல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் தங்கள் சாதியினரைப் பட்டியலில் இருந்து மீட்டன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் ஆங்கிலேய அரசின் ஆதிக்க மையங்களில் எல்லாவற்றிலும் போராடி தஞ்சை, திருச்சி பகுதிகளில் இருந்த கள்ளர்களை பட்டியலில் இருந்து மீட்டார். ஆனால் மதுரைக் கள்ளர்கள் மீட்கப்படவில்லை. 

குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்களிடம் இரக்கமே இல்லாமல் நடக்கும் படி ஆங்கிலேய அரசால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அனைவருமே பாகுபாடின்றி குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். குற்றத்தை மறுப்பது தந்திரமாகப் பார்க்கப்பட்டது. பதிலுக்கு ஆங்கில அரசும் சில தந்திரங்களை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது. இவர்களின் உறவினர்களை இவர்கள் முன்பாகவே கொடுமைப்படுத்துவது ஆங்கிலேயர்களின் தந்திரங்களில் ஒன்று. லன்லக் என்ற ஆங்கிலேயர் குற்றப்பரம்பரையினருக்கு எதிராக ஆங்கிலேய அரசு அதிகாரிகள் எவ்வகையான தந்திரங்களை எல்லாம் கையாளலாம் என்பது குறித்து தனி அறிக்கை ஒன்றையே தயாரித்துக் கொடுத்தார்.

குற்றப் பரம்பரையினர் நடமாட்டத்தினால் தங்கள் கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற பயத்தை பிற சாதியினர் இடையே ஆங்கில அரசு தோற்றுவித்தது. அவர்களின் வழக்குகளில் குற்றப்பரம்பரையினரைக் குற்றவாளிகளாகச் சேர்த்து அவர்களைப் பிற சாதியினருக்கு எதிராக ஆங்கில அரசு தூண்டியது. 

கைரேகைச் சட்டமும் பெருங்காமநல்லூர்க் கலவரமும்:

இந்தச் சட்டத்தின் மிகப்பெரிய அழிவு கி.பி.1920ஆம் ஆண்டில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஏற்பட்டது. கைரேகைச் சட்டம் பெருங்காம நல்லூரில் அமலாக்கப்பட உள்ளது என்ற தகவல் கி.பி.1920 மார்ச் மாதத்தில் அங்கிருந்த மக்களுக்குத் தெரிய வருகின்றது. அவர்கள் அந்தச் சட்டத்தை எதிர்க்க ஒன்றாகக் கூடி முடிவெடுக்கின்றனர். இது ஆங்கில அரசுக்குத் தெரியவர, கி.பி.1920 ஏப்ரல் 3ஆம் தேதி காவல்துறையினர் கிராமத்தை சுற்றி வளைத்து பின்னர் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்கிறார்கள். முதல் கட்டமாக பதிவேட்டை ஊர் நடுவே வைத்துவிட்டு மக்களைக் கைநாட்டு வைக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள். மக்கள் மறுத்து வாக்குவாதம் செய்ய, எதிர்த்தவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். சுட்டுத் தள்ளப்பட்டவர்களுக்கு உதவ வந்தவர்களும் சுடப்படுகிறார்கள். காயம் பட்டவர்களுக்கு நீர் கொடுக்க வந்த மாயக்கா என்ற பெண்ணை அதற்காகவே காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள்.

பெருங்காம நல்லூரின் 700 மக்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருந்த திருமங்கலம் காவல் நிலையத்திற்கு நடத்தி இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீர் கூட தரப்படாமல் காவலில் வைக்கப்பட்டு பெருங்காம நல்லூரில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. 

கி.பி.1933ஆம் ஆண்டில் அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னர் நடந்த விசாரணையில் இந்தச் சட்டத்தின் கொடுமைகளைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில அரசுக்கு எடுத்துரைத்தார். கி.பி.1936ல் ஜவஹர்லால் நேரு ‘சட்ட நூலில் இருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.

ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பராவ், ஹரிஜன சேவாசங்கத் தலைவர் கி.சி.தக்கா ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடினர். கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் தங்கி இருந்தவருமான வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் கி.பி.1921முதல் கள்ளர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைத் திரட்டி ‘குற்றப் பழங்குடிகள் சட்ட’த்திற்கு எதிராக மட்டுமே போராடி வந்தார். வைக்கத்திற்கு பெரியாரை அழைத்துச் சென்றவரும் இவர்தான். இவரது நினைவாக மதுரை மக்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு ‘ரோசாப்பூ துரை (சோசப்பு துரை)’ என்று பெயர் வைக்கின்றனர்.

தள்ளுபடியான கைநாட்டுச் சட்டம்:

கி.பி.1947ல் சுதந்திரத்திற்கு முன்பாகவே காவல்துறை அமைச்சர் பி.சுப்பாராவ் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்காக தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் வெற்றியும் அடைந்தது. சுதந்திர இந்தியாவில் 1949 ஆகஸ்டில் இந்தச் சட்டம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தத் தள்ளுபடியால் அதுவரை குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டவர்கள் சட்டத்தால் ‘குற்ற மரபினர் பட்டியலில் நீக்கப்பட்டவர்’ என்று அழைக்கப்பட்டனர். இன்றைய இந்தியாவில் 313 நாடோடிப் பழங்குடி மக்களும், 1989 பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சீர் மரபினரும் குற்றப் பழங்குடிகள் சட்டத்தின் வடுக்களைச் சுமந்து வாழ்கின்றனர். குற்றப் பரம்பரையினர் – என்று ஆங்கிலேயர்கள் யாரை அழைத்தார்களோ அவர்கள் மண்ணின் மக்களாகவும், சுதந்திரப் போராளிகளாகவும் இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com