இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் முதலான வட இந்திய மாநிலங்களில் தீவிரமடைந்த நோய்த் தொற்று பரவலின் தாக்கம் இப்போது அப்படியே தென்னிந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. அதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என தென்னிந்தியாவின் மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் செய்துள்ளன மாநில அரசுகள். அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா தொற்று பரவலின் நிலவரம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு விவரம் குறித்து பார்ப்போம்.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இதுவரை சுமார் 20.9 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 6.2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதன் காரணமாக அண்மையில் அதிக நாட்கள் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லுமாறு அம்மாநில முதல்வர் எடியூரப்பா மக்களுக்கு கோரிக்கையும் வைத்திருந்தார்.
கர்நாடகத்தில் மொத்தம் 1,09,94,304 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு முழு முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் நோய் தொற்று பாதிப்பு குறையாததால் மே 24ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
கேரளா: மலையாள தேசமான கேரளாவில் இதுவரை சுமார் 20.5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் 4.4 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 6150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 81,81,551 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவலை தடுக்க கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல் செய்தது பினராயி விஜயன் தலைமையிலான அரசு. இந்நிலையில், தற்போது அதனை வரும் 23ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கேரளாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கொரோனா மட்டுமல்லாது பருவ மழை மற்றும் இயற்கைப் பேரிடரையும் கேரளா சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஆந்திரா: ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆட்சி செய்து வரும் ஆந்திர மாநிலத்தில் இதுவரை சுமார் 13.7 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.1 லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 9077 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 74,13,446 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு 20,000-க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வரும் 19ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. காலை 6 முதல் பகல் 12 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 144 தடை உத்தவரவு அமலில் உள்ளது.
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை சுமார் 5.16 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000 பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 2867 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 54,19,430 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
வரும் 22ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் உள்ளது. காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளிவர அரசு அனுமதித்துள்ளது. மீதமுள்ள 20 மணி நேரம் முழுமுடக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 80,947 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,424 பேர் தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். 1099 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 2,26,096 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் எதுவும் இயங்க அனுமதி இல்லை என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது தமிழகத்தை பின்பற்றி முழு முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசின் செயலர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தமிழ்நாடு: தமிழகத்தில் இதுவரை சுமார் 15.31 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 16768 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 68,22,834 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதலே கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4000 ரூபாய் அறிவித்துள்ளது அரசு.
தற்போது வரும் 24ஆம் தேதி வரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது அரசு. அத்தியாவசிய கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தடுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இந்த அனைத்து மாநிலங்களின் பொது தேவையாக உள்ளது.
- எல்லுச்சாமி கார்த்திக்