கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு சித்த மருத்துவமனையில் இதுவரை 493 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது இங்கு 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சித்த மருத்துவ ரீதியில் இங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர் பிரபு கூறும்போது, "முதலில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் வேப்ப இலை மாத்திரை, தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருத்துவ சூரணம், உரிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர், ஆடாதோடை சிரப் போன்றவை வழங்கப்பட்டு 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் அவர்களுக்கான ஆக்சிஜன் அளவை சீராக்குகிறோம். தினமும் கபசுரக் குடிநீர் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் சிறப்பு மருத்துவமனையிலேயே தயார் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூலர் பிராண பயிற்சி மற்றும் சுவாச பயிற்சிக்கான யோகாசனங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கப்படுகிறது. சிகிச்சை முடித்து வீடு திரும்புகிறவர்களுக்கு ஆரோக்கியா மருத்துவ மருந்துகள் அடங்கிய மாத்திரைகள் வழங்கப்பட்டு, அவர்களை வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம்" என்றார்.
மாவட்ட சித்த மருத்துவ ஆலோசகரான மருத்துவர் மாலா கூறும்போது, "கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவத்தை அனைவரும் நாடி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்குத் தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறையும் நிலவும் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சிறப்பு சித்தா மருத்துவமனையில் இதுவரை 493 பேர் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் நலமாக இருக்கின்றனர். தற்போது இங்கு 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
தற்போது இங்கு கிடைத்து வரும் பலன் காரணமாக, விழுப்புரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவர் என தெரிகிறது.
- ஜோதி நரசிம்மன்