இந்த ஆண்டு சினிமா வட்டாரத்தில் ரகளைக் கட்டிய சர்ச்சைகள்

இந்த ஆண்டு சினிமா வட்டாரத்தில் ரகளைக் கட்டிய சர்ச்சைகள்
இந்த ஆண்டு சினிமா வட்டாரத்தில் ரகளைக் கட்டிய சர்ச்சைகள்
Published on

சினிமா என்றால் சர்ச்சை. சர்ச்சை இல்லாமல் சினிமா இல்லவே இல்லை. ஆனால் இந்த ஆண்டு சினிமா சர்ச்சையில் அரசியல் அதிகம் கலந்துவிட்டது. அல்லது அரசிலை மையமாக வைத்து சினிமாவில் சில சர்ச்சைகள் புகுந்துவிட்டன. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி இந்த ஆண்டின் ஹைலைட் சர்ச்சைகள் என்ன? 

சுசீ லீக்ஸ்

விக்கி லீக்ஸ் பற்றி கூட யாரும் அந்தளவுக்கு பயந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் சுசி லீக்ஸை பார்த்து ஒட்டு மொத்த சினிமா நட்சத்திரங்களும் அரண்டு போய் உட்கார்ந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்போதுதான் ஜல்லிக்கட்டு சர்ச்சை தமிழ் நாட்டில் தலையாய பிரச்னையாக உருவடுத்திருந்த நிலையில் உள்ளே புகுந்தார் சுசி. பாடகி சுசி ‘ஹலோ மிஸ்டர் கந்தசாமி’ என்று பாடிய போது கூட அவ்வளவு பிரபலமாகவில்லை. அவர் அடுத்தடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஷயங்கள் பெரும் பூதமாக உருவெடுத்திருந்தது. தனுஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக முதலில் குறிப்பிட்ட சுசி பிறகு போகபோக பல ‘சென்சார்’ சமாச்சாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தார். அந்த செய்தியை எல்லா ஊடகங்களும் ‘சுசி லீக்ஸ்’ என்று அடைமொழி போட்டு அச்சிட்டன.

ஹன்சிகாவை பற்றி, ரம்யா கிருஷ்ணனை பற்றி, ராணாவை பற்றி, ஆண்ட்ரியாவை பற்றி, அனிருத் பற்றி, சுருதிஹாசன் பற்றி என அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகளை கண்டு அரண்டு போயினர் பல திரைப்பிரபங்கள். அடுத்தது என்ன ஆகுமோ என்று அடி வயிற்றை பிடித்து கொண்டு பலர் அழுத நிகழ்ச்சியும் நடந்தது. அனுயாவை பற்றி அவர் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு அவர் உடனடியாக மறுப்பளித்தார். ஆனால் தனுஷ் தன் தரப்பு பற்றி எந்த விளக்கத்தையும் தரவில்லை. மிக நாகரிகமாக அவர் பொறுமை காத்தார். என்ன நடக்கிறது? யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை. சுசியை தொடர்புக் கொண்டு பேசிலாம் என பல ஊடங்கள் முயன்றன. ஆனால் அவரை பிடிக்கவே முடியவில்லை. ஆகவே சந்தேகம் அதிகரித்தது. பல கட்ட வம்பு செய்திகளுக்கு பிறகு மிகத் தாமதமாக வந்து அவரது கணவர் கார்த்திக் குமார் விளக்கம் அளித்தார். அதாவது தனது மனைவி சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆகவே நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். அவர் சிகிச்சையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின. அவருக்குப் பாடல் வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காததால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானதாக காரணம் சொன்னார்கள். ஆனால் அது குறித்து சுசி வெளி உலகை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை. பிப்ரவரி மாதம் நடந்த இந்தப் பிரச்னை முழுமையாக அடங்கிப் போன போது மீண்டும் வெளியே வந்து சுசி காவல்துறையில் புகார் கொடுத்தார். தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்படி என்றால் அவர் கணவர் சொன்ன விளக்கம்? அவ்வளவுதான். அதை எல்லாம் ஆராயக்கூடாது என விட்டுவிட்டார்கள் கோடம்பாக்கத்தினர். இன்று வரை புரியாத புதிராக இருக்கு சுசி லீக்ஸ் இந்த ஆண்டின் மாபெரும் மர்மக்கதை. 

ட்விட்டர் அரசியல்

உலகநாயகனாக சினிமாவில் வலம் வருபவர் கமல். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு வரை மெளனமாக தன் அரசியல் ஆசையை அடைக்கி வைத்திருந்த கமல், ஆளும் கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தார். அதனை அதிமுக அமைச்சர்கள் மிக கடுமையாக விமர்சித்தனர். முதலில் சில விஷங்களை போகுறப்போக்கில் பேசிய கமல் மெள்ள மெள்ள கடுமையான கருத்துக்களால் காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார். அதற்கு ‘அவர் வீட்டில் உட்கார்ந்து பேசுகிறார்’ என்றார்கள். ‘வேண்டுமானால் அரசியல் களத்திற்கு வந்து பேசட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம்’ என்றார்கள். அதிமுக அமைச்சர்களில் மிக அதிகமாக கமலை தன் எதிர்க்கருத்துகளால் எதிர்க் கொண்டவர் அமைச்சர் ஜெயக்குமார்.

பல நேரங்களில் உடனுக்கு உடன் கமலை அவர் எதிர் கொண்டார். ‘அரசியல் களத்திற்கு வந்து பேசட்டும்’ என சொன்னதற்கு கமல், ‘நான் ஏற்கெனவே அரசியல் களத்தில்தான் இருக்கிறேன். கட்சி ஆரம்பித்தால்தான் அரசியல் களத்திற்கு வந்ததாக அர்த்தமாகாது. ஹிந்தி திணிப்பை எதிர்த்தபோதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்று புது விளக்கம் கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் மீது ட்விட்டர் அரசியல்வாதி என்ற முத்திரை விழுந்தது. அதனை உடைக்க எண்ணூர் கழி முகத்திற்குப்போய் தன் நேரடி கள அரசியலை முன் வைத்தார் கமல். எப்படியும் நவம்பர் 7 தனது பிறந்தநாளில் புதிய அரசியல் கட்சிக்கு அச்சாரம் போடுவார் என ஊரே முணுமுணுக்க அவரோ ‘ஊடக உந்துலுக்காக கட்சியை அறிவிக்க முடியாது’ என்றார். எப்படியும் கட்சி நிச்சயம் ஆனால் அதற்கு அவகாசம் தேவை என்று விளக்கம் தந்தது அவர் தரப்பு. அதனையொட்டி அரவிந்த் கெஜ்ரிவால் அவரை சந்திதார். மேலும் சூடுப்பிடித்தது அரசியல் களம். மம்தாவை சந்தித்தார். மக்கள் எதிர்பார்த்து ரஜினியை. வந்து நின்றதோ கமல். அந்த வகையில் இந்த ஆண்டின் வைரல் கண்டெண்ட் கமல் என்பது சினிமா உலகம் தாண்டிய உண்மை. 

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு

கடந்த 20 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டு வருகிறது. காவிரி தண்ணீர் வரும் என்பது எவ்வளவு கற்பனையோ அதே அளவுக்கு ரஜினி அரசியலுக்கு வருவதும் கற்பனையே என சோர்ந்து போனார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில்தான் கடந்த மே மாதம் ரசிகர்களை தனது ராகவேந்திரா மண்படத்தில் சந்தித்தார் ரஜினி. அந்த விழாவில் கலந்து கொண்ட அவரது சென்னை சகோதரர் எஸ்.பி.முத்துராமன், தனது வற்புறுத்தலின் பேரில்தான் ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார் என்றார். அதான் உண்மை. ஆனால் அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நேரம்தான் சந்தேகத்தை கிளப்பியது. முதல் நாள் அவரது பேச்சில் அதிம் சூடு பறக்கவில்லை. சுய விமர்சனத்தோடு வருகிறேன் வருகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் நானோ இன்னும் தெளிவாக முடிவெடுக்காமல் இருப்பதை பலரும் விமர்சிப்பதை நான் அறிவேன் என்றார். மேலும் இறுதி நாள் உரையில் ‘போர் வரும்போது வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன் பிறகு தினமும் சூடுப்பிடித்தது ரஜினியின் களம். அவர் வீட்டுக்கு முன்பே ஊடகங்கள் காத்திருந்தன. கஸ்தூரி போய் பார்த்தார். அவர் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில்தான் இருக்கிறார் என்றார். வழக்கமாக தன்னை வாழ்த்துபவர்களை அழைத்து சந்திப்பது அரசியல் அணுகுமுறை. ஆனால் அவரை விமர்சித்து கருத்துட்டு வந்த கஸ்தூரியை அழைத்து அவர் சந்தித்தது ஒரு முதிர்ச்சியான மனநிலையை காட்டியது. அன்பாக அவர் அனைவரையும் அரவணைக்கும் ஆற்றல் உடையவர் என்ற நம்பிக்கையை வழங்கியது.

அதே போல் தமிழருவி மணியன் போனார். அவர் கட்சி தொடங்குவது உறுதி என்றார். தனியாக அரசியல் மாநாடே நடத்தி ரஜினியை ஆதரித்தார் தமிழருவி. அவருக்கு மோடி அரசியலும் தெரியும். காங்கிரஸ் அரசியலும் புரியும். திமுகவையும் தெரியும். அதிமுகவையும் அவர் அறிவார். ஆகவேதன் சீமானை புரட்சியாளர் என்றார் ரஜினி. ஸ்டாலினை நல்லவர் என்றார். திருமாவை பாராட்டினார். எல்லா தரப்பையும் அவர் சமமாக எடுத்து பேசியது ஆச்சர்யத்தை அளித்தது. அவர் வீட்டுக்குப் பலரும் போயினர். அரசியல் பேசினர். ஆனால் வெளியே வரும்போதெல்லாம் அவகாசம் வந்தால் அழைத்து கூறுவேன் என்றார் ரஜினி. அதை கண்ட ஒரு ஊடகவியலாளர் ‘ உங்களை சந்திப்பவர்கள் எல்லாம் நீங்கள் அரசியல் பற்றி விவாதிப்பதாக கூறுகிறார்கள். நீங்களோ மறுக்கிறீர்கள்’ என்று நேருக்கு நேராக கேட்டார். அதற்கு ரஜினி ‘இல்லையே நான் மறுக்கவில்லையே. பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். முடியட்டும் சொல்கிறேன்’ என்றார். அந்தப் பக்குவம் அவரை இன்னும் வேறுபடுத்திக் காட்டியது. அவர் அரசியல் கட்சி தொடங்குகிறாரோ இல்லையோ ஆனால் அவர் அரசியல் களத்தில் ஹாட் நியூஸாக இந்த ஆண்டு இருந்தார். அதை யாரும் மறுக்க முடியாது.

டி.ராஜேந்தர் V/S சாய் தன்ஷிகா

’விழித்திரு’ ஒரு வழக்கமான ஆடியோ நிகழ்ச்சியாகதான் இந்த ஆண்டு ஆரம்பித்து. அந்த விழா மேடையில் அனைவரும் அப்படிதான் எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருந்தனர். ஆனால் சர்ச்சை யாரை விடும். கிடைத்த சைக்கிள் கேப்பில் சலசலப்பு தோரணம் கட்டி விளையாட ஆரம்பித்தது. விழாவை பற்றி பேசிய சாய் தன்ஷிகா எல்லோருடைய பெயரையும் குறிப்பிட்டு பேச டி.ராஜேந்திரன் பெயரை மறந்து போனார். பல மேடைகள் கண்டவர் டி.ஆர். ஒரு மேடையை எப்படி வசப்படுத்த வேண்டும் என்று அறிந்தவர். தன்ஷிகா அப்படியா? ஒரு நடிகை எந்தளவுக்கு தன் பேச்சை தயாரித்து கொண்டு வந்து பேச முடியுமோ அந்தளவுக்கு அவர் பேசினார். ஒரு பெரிய நடிகர் தன் பெயரை விட்டுவிட்டாரே என வருத்தம் கொண்டது தவறில்லை. அதற்கான அவர் ஆவேசமானதுதான் வன்முறை. தன்ஷிகா கண்களில் நீர்வழிய வருத்தம் தெரிவித்தும் அவர் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அடுத்த நொடி டி.ஆர். ஹாட் நியூஸ் ஆனார். எப்படி இந்தப் பெண்ணை இவர் இப்படி செய்யலாம் என நீதிக் கேட்டார்கள் நெட்டிசன்கள். ‘தன்ஷிகா ஆர்மி’ என ஹேஷ் டேக் வைரல் ஆனது. பல நடிகர்கள் தங்களின் ஆதரவை தன்ஷிகாவுக்கு தெரிவித்தனர். ஆனால் தன்ஷிகா போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு அமைதியாகிவிட்டார். அதன் பிறகு மேடையில் இருந்தவர்கள் பக்கம் பார்வையாளர்களின் கோபம் திரும்பியது. வெங்கட் பிரபு, கிருஷ்ணா என பலர் மீது பாய்ந்தது. இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட தன்ஷிகா-டி.ஆர். சர்ச்சை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நிகழ்ச்சியல்ல; சம்பவம்.

அமலா பால் விவாகரத்து


இயக்குநர் ஏ.எல்.விஜய் - நடிகர் அமலா பால் ஜோடியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. முதலில் இவர்களது காதல் இரகசியமாக இருந்தது. அமலா தன் காதல் பற்றி கருத்து எதுவும் கூறவே இல்லை. ஆனால் அமலா பாலுக்கு காதல் அடையாளமாக விஜய் வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக செய்தி வெளி வந்தது. அப்போதும் அவர் காதலை மறுத்தார். இறுதியில் இருவரது காதலும் உறுதியனது. இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2014 ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் மிக அழகாக வாழ்ந்தது இந்த ஜோடி. விஜய் திருமணத்திற்குப் பிறகு அமலாவை நடிக்கக் கூடாது என்று கூறியதாகவும் அதற்கு அவர் முதலில் சம்மதித்ததாகவும் ஆனால் மணம் முடிந்த பிறகு அவர் மனம் மாறிவிட்டது என்றும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் ஏறினர். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்தாண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து அளித்தது. அதனை தொடர்ந்து அமலா முழு நேரமாக நடிகையானார். மண முறிவு குறித்து அவர் தமிழ் ஊடகங்களில் பேசவே இல்லை. மலையாள பத்திரிகை உலகில் அவர் ‘விஜய்யை இன்னும் விரும்புவதாக’ குறிப்பிட்டு பேசியிருந்தார். வலிகள் நிறைந்த விஷயத்திற்குப் பிறகு அவர் இவ்வளவு நாகரிகமாக பேசியிருந்தது சினிமா உலக கலாச்சாரத்திற்கு புதிது. அந்த வகையில் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இந்த ஜோடியின் மண முறிவு அமைந்திருந்தை பலரும் அறிவர்.

பிக் பாஸ் ஓவியா

தொடக்கத்தில் கமல்ஹாசனை மையமாக வைத்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆனால் இறுதியில் ஸ்டார் ஆனதோ நடிகை ஓவியா. ஓவர் நைட்டில் அவர் புகழ் உச்சத்திற்குப் போனது. காயத்ரி ரகுராம் வில்லியாக சித்திரிகப்பட்டார். ஜூலியே கொடுமைக்காரியாக வர்ணிக்கப்பட்டார். சிநேகன் மீதும் பல்வேறு விமர்சனங்கள். இதற்கு நடுவில் ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. அந்தக் காதல் ஆன் லைனில் அவ்வளவு அழகாக வெளிப்பட்டது. ஆனால் தனக்கு ஒன்றுமே புரியவில்லை. இயல்பாக பழகுவதாகவே நான் நம்பினேன் என விளக்கம் கொடுத்தார் ஆரவ். ஆனால் ஓவியாவை அவரால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. ஓவியாவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதிக்கேட்டு ‘ஓவியா ஆர்மி’ படை கிளம்பியது. விவாதித்தது. அன்பை கொட்டியது. கோடிக்கணக்கில் அவரது நிகழ்ச்சியை பார்த்தனர். ஆனால் அதை எதுவும் உலகம் பார்க்காததை போலவே ஆரவ் காண்பித்து கொண்டார். அதனால்தான் கமஹாசனே நேரடியாக களத்தில் இறங்கி நாசுக்காக ‘மருத்துவ முத்தம்’ பற்றி சந்தேகத்தை எழுப்பினார். அதன் பின் ஓவியா மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டது. இரவோடு இரவாக அவர் சிகிச்சைக்குப் போனார். அதன் பிறகு ஓவியா தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையானார். அவரது புகழ் கூடிக்கொண்டே போனது. அவர் போன இடத்திற்கு எல்லாம் கூடியது கூட்டம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் பட்டியலிலே இல்லாமல் இருந்த ஓவியா இந்த ஆண்டில் ஓஹோ என்று உயர்ந்தது சர்ச்சையால்தான். அந்தச் சர்ச்சை இந்தாண்டின் தமிழ் சினிமாவின் டாக் ஆப் த வாஸ்.

(தொடரும்)


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com