ஒரு திரைப்படம் என்பது திரையில் வருபவர்கள் மட்டுமே சார்ந்தது இல்லை. நடிகர்கள், நடிகைகள் என்பதைத் தாண்டி பல ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பில்தான் ஒரு திரைப்படம் உருவாகிறது. படப்பிடிப்புத் தளத்தில் சரியான நேரத்திற்கு நடிகர்கள் நடிக்க வருகிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவுபகலாக வேலைபார்ப்பார்கள்.
செட் அமைப்பது, ஒளி அமைப்பு என ஒருகாட்சி உருவாகப் பல உழைப்பாளர்களின் உழைப்பு தேவைப்படுகிறது. அப்படி பணியாற்றும் உழைப்பாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஊதியம் அடுத்தக்கதை, அவர்களின் உயிர்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக சில நேரங்களில் உள்ளது. படப்பிடிப்புத்தளத்தில் விபத்து என்பது சர்வசாதாரணமாகி வருகிறது. விபத்து என்பது உயிரிழப்பாவதும் சில நாட்களில் அந்த செய்தி மறைந்துபோவதுமாகவே நகர்கிறது நாட்கள்.
தமிழ்த்திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடைபெற்ற விபத்து 3 பேரை பலி வாங்கியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இரவு பகலாக இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் சிக்கிய உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். தமிழ் சினிமாத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கோரச் சம்பவத்தில் கிரேன் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரு மிகப்பெரிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்திற்கு கிரேன் ஆபரேட்டர் மட்டுமே காரணம் ஆகிவிட முடியுமா?. இது போன்ற விபத்துகள் தொடர யார் காரணம்? தொழிலாளர்களின் உயிர்களை பலி வாங்கும் இது போன்ற விபத்திற்கு காரணமான கவனக்குறைவு எங்கு உள்ளது?
படப்பிடிப்புத்தளத்தில் விபத்து என்பது தற்போதைக்கான செய்தி மட்டுமல்ல. அதே ஈவிபி பிலிம் சிட்டியில் பிகில் திரைப்படத்திற்கான மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டபோது ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் படுகாயம் அடைந்த ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பல நாட்கள் சிகிச்சைபெற்றும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அதேபோல் காலா படத்திற்காக மும்பை தாராவி போல செட் அமைக்கப்பட்டபோது மின்சாரம் தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இப்படி பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் என்ற மிகப்பெரிய படப்பிடிப்பு எல்லாம் தொழிலாளர்களின் உயிரிழப்பு நிகழும் நிலையில், விபத்து ஏற்படுவதற்கான காரணங்களை திரையுலகினர் கண்டுகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக தற்போது படப்பிடிப்புத்தளத்தில் பயன்படுத்தப்படும் கிரேன்கள் போன்ற படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாம் சீனாவிலிருந்து வருவதாகவும், அதனை இயக்க இங்குள்ளவர்களுக்கு உரியப் பயிற்சியும், தொழில்நுட்ப அறிவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. வேண்டியவர்கள், பழக்கப்பட்டவர்கள் என அனுபவம் இல்லாதவர்கள் பலபேர் கிரேன்களை இயக்குகின்றனர். அனுபவம் இல்லை, தொழில்நுட்ப அறிவு இல்லை, இப்படி எதுவும் தெரியாமல் மிகப்பெரிய உபகரணங்கள் இயக்கப்படும் போது அது விபத்தில் போடமுடிவதாகத் திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஒருபடத்தின் உருவாக்கம் என்பது அனைத்து தொழிலாளர்களையும் சார்ந்தே உள்ளது. செட் அமைப்பது, மின்சாரம் என அனைத்து வித பணிகளையும் இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பு முறையாகக் கண்காணிக்க வேண்டும். கிரேன், லைட்டிங் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்களுக்கு உரிய அனுபவம் இருக்கிறதா? தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நடிகர் நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும், இனி ஒரு இழப்புக்கு சினிமாத்துறை வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்பதுமே திரையுலகைத் தொழிலாளர்கள் கோரிக்கையாக உள்ளது.