‘133 ஆம் ஆண்டில் காங்கிரஸ்’: சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா ராகுல்?

‘133 ஆம் ஆண்டில் காங்கிரஸ்’: சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா ராகுல்?
‘133 ஆம் ஆண்டில் காங்கிரஸ்’: சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா ராகுல்?
Published on

133ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது காங்கிரஸ் கட்சி. பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ள நிலையில், சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா என்று அக்கட்சியினரும், ஆதரவாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

1885ஆம் ஆண்டு இதே நாளில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்றதில் முக்கிய பங்காற்றியது. 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சக்தி மிக்க அரசியல் கட்சியாக உருவெடுத்தது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் மறைவுக்குப் பின் காங்கிரஸில் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்த ஜவஹர்லால் நேரு, 1952, 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அணிசேரா கொள்கையை கடைபிடித்து உலகப் புகழ் பெற்ற அவர், சோசலிசப் பாதையில் நாட்டை வழிநடத்தி மக்களின் நன்மதிப்பையும் பெற்றார். இதனால், நேருவின் காலத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக தொடர்ந்தது.

‘கிங்மேக்கர்’ காமராஜர்

1964 ஆம் ஆண்டு நேருவின் மறைவுக்குப் பின், புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, கட்சித் தலைவராக இருந்த காமராஜரின் முயற்சியால் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டே ஆண்டுகளில் லால் பகதூர் சாஸ்திரி மறைந்துவிட, புதிய பிரதமரை தேர்வு செய்யும் நிலை உருவானது. தமக்கு இருந்த நன்மதிப்பையும், செல்வாக்கையும் பயன்படுத்தி நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமராக்கி, கட்சியில் எழுந்த சலசலப்பை ஒன்றுமில்லாமல் செய்த காமராஜர் ‘கிங்மேக்கர்’ என்று புகழப்பட்டார்.

இந்திராவின் தனி ஆவர்த்தனம்

பாகிஸ்தானைத் பிரித்து வங்கதேசம் உருவாக்கம். வங்கிகள் தேசியமயமாக்கல் போன்றவற்றால் புகழ்பெற்ற இந்திரா காந்தி, 1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டார். ஆயினும், அமேதி தொகுதியில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975-ல் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திராகாந்தி. இரண்டாண்டுகளுக்குப் பின் 1977-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், நெருக்கடி கால கொடுமைகளை மறவாத மக்கள் முதன் முறையாக காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினர். மொரார்ஜி தேசாயும், அவரைத் தொடர்ந்து சரண் சிங்கும் பிரதமர்களாக பொறுப்பேற்றாலும், அவர்களது அரசுகள் அற்ப ஆயுளில் கவிழ, 1980-ல் காங்கிரசை மீண்டும் அரியணை ஏற்றினார் ‌இந்திரா காந்தி.

ராஜீவ் காந்தி பொறுப்பேற்பு

அமிர்தசரஸ் பொற்கோயிலில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் சீக்கியர்களின் வெறுப்பை சம்பாதித்த இந்திரா காந்தி, அவருக்கு பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியது. இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி அரியணையில் அமர்ந்தார்.

சோதனைக் காலத்தில் காங்கிரஸ்

1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட, மெஜாரிட்டிக்கும் குறைவான தொகுதிகளிலே காங்கிரஸ் வென்ற போதிலும் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தந்தார் நரசிம்மராவ். 1996 ஆம் ஆண்டு முதல் காங்கிரசுக்கு சோதனை தொடங்கியது. முதன்முறையாக, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரசுக்கு சீதாராம் கேசரியால் வெற்றி தேடித் தர இயலாத நிலையில், வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த மீண்டும் நேரு குடும்பத்திடம் கட்சி ஒப்படைக்கப்பட்டது.

புத்துயிரூட்டிய சோனியா காந்தி

காங்கிரசின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்திய சோனியா காந்தி, படிப்படியாக மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் காங்கிரசை ஆளுங்கட்சியாக்கினார். 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரசை அரியணை ஏறச் செய்தார்.

ராகுல் காந்தி சாதிப்பாரா?

சோனியா காந்திக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். தலைமைப் பதவியேற்ற உடனேயே குஜராத், இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விகளை அவர் சந்திக்க நேர்ந்தது. இனிவரும் தேர்தலில் சோதனைகளை சமாளித்து ராகுல் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com