குளிர்காலம் வந்தாலே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குளிரானது ரத்த நாளங்களை சுருங்கச்செய்வதால், ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அழற்சி, வலி குறைப்பு, அழுத்தம் குறைப்பு, புண்கள் ஆறுதல் மற்றும் சோர்வு போன்றவற்றிலிருந்து விடுபட நிறையப்பேர் குளிர்ந்த, ஜில் தண்ணீரில் குளிப்பர். தசைகளுக்கு போதிய ரத்தம் கிடைக்காதபோது அல்லது ரத்தக்கட்டிகள் ஏற்படும்போது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதே இதுபோன்ற மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட வயது, குடும்ப வரலாறு, ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு போன்ற வேறு பல காரணங்களும் இருக்கிறது. இதுதவிர சில வெளிப்புற காரணிகளும் வாழ்க்கைமுறையும் ஆரோக்கிய குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. அதில், குளிர்காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதும் ஒரு காரணி என்கின்றனர் நிபுணர்கள்.
குளிர்ந்த தண்ணீர் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?
திடீர் மற்றும் எதிர்பாராமல் குளிர்ந்த தண்ணீரில் இறங்கும்போது அது இதய நோய்களை வருவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். திடீரென உடலில் படும் குளிர்ந்த நீரானது சருமத்திலுள்ள ரத்த நாளங்களை சுருக்கி, உடலை அதிர்ச்சிக்குள்ளாக்குவதால், ரத்த ஓட்டம் மெதுவாகிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த இதயம் வேகமாக இயங்க ஆரம்பிக்கிறது. இதுகுறித்து பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் கூறுகையில், அவரது 68 வயது நோயாளி ஒருவரும் இதுபோல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார், குளிர்ந்த தண்ணீரில் குளித்த அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து மூளை ஸ்ட்ரோக் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
குளிர்காலங்களில் பக்கவாதம் ஏற்படுவதை குறைப்பது எப்படி?
இந்தியாவில் முடக்குவாதம் மற்றும் இறப்புக்கு ப்ரெய்ன் ஸ்ட்ரோக் ஒரு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 18 லட்சம் பக்கவாத வழக்குகள் பதிவாகின்றன. குறிப்பாக குளிர் மாதங்களில் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க சில டிப்ஸ்:
குளிர்தண்ணீரில் குளிக்காதீர்கள்: எப்போதும் சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் குளியுங்கள்.
உடலை எப்போதும் கதகதப்பாக வைத்திருக்கவும்: குளிர்காலத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராக இருந்தால், போதுமான உடைகளை அணிந்து உடலை சூடாக வைத்திருங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்: தினமும் குறைந்த 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செல்லுங்கள் அல்லது வாக்கிங் செல்லுங்கள். ரன்னிங், ஜாக்கிங், ஏரோபிக்ஸ், யோகா, உடற்பயிற்சி, டான்ஸ் அல்லது தியானம் என ஏதேனும் ஒரு உடல் இயக்க செயலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது உடலை சூடாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு: எப்போதும் ஃப்ரெஷ்ஷான, பழங்கள், பச்சை கீரைகள் காய்கறிகளை சாப்பிடுங்கள். வறுத்த, கொழுப்பு, சர்க்கரை நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, கொழுப்பையும் அதிகரிக்கும். குறிப்பாக சூடான உணவுகளையும், இஞ்சி போன்ற செரிமான சக்தி நிறைந்தவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தொடர் பரிசோதனை அவசியம்: நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரக பிரச்னை மற்றும் பிற உடல்நல பிரச்னை உள்ளவர்கள் தொடர் பரிசோதனை செய்து அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதீத உடலுழைப்பு கூடாது: அதிக மற்றும் கனமான வேலைகளை செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடலாம். குறிப்பாக இதய நோயாளிகள் இதனை கடைபிடிக்கவும்.
மது அருந்துதல் கூடாது; புகைபிடித்தல் அறவே கூடாது.