கோவை: சுற்றுலாவுக்கு துவங்கப்பட்ட படகுசவாரி மீனவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய அவலம்

கோவை: சுற்றுலாவுக்கு துவங்கப்பட்ட படகுசவாரி மீனவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய அவலம்
கோவை: சுற்றுலாவுக்கு துவங்கப்பட்ட படகுசவாரி மீனவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய அவலம்
Published on

கோவை வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டு அது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும் தங்கள் வாழ்வாதாரத்தை அந்த படகுசவாரி கேள்விக்குறி ஆகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள். காரணம் என்ன? இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

டீசல் படகுகள்தான் முக்கிய பிரச்னை:

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், சுங்கம், குறிச்சி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 10க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பல தலைமுறைகளாக இந்த குளங்களில் மீன்பிடி தொழில் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மீன் விற்பனையை பிரதான தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள இவர்களுக்கு பேரிடியாய் அமைந்துள்ளது கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள படகுசவாரி. அதற்கான மிக முக்கிய காரணம் படகு சவாரிக்கு பயன்படுத்தப்படும் டீசல் படகுகள்.

பெரும் வரவேற்பைப் பெற்ற படகு சவாரி:

கோவைக்கு கடந்த மாதம் வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி படகு சவாரியை தொடங்கி வைத்தார். பெடல் படகுகள், டீசல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவை இங்கு சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்த படகு சவாரி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நகரின் மையத்திலும், எளிதில் அணுகக் கூடிய வகையில் போக்குவரத்து வசதியும் இருப்பதால் இந்த படகு சவாரிக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

மீனவர்களுக்கு பேரிடி! காரணம் என்ன?

இந்நிலையில் படகு சவாரி தொடங்கிய 10 நாட்களிலேயே அதன் விளைவை சந்திக்க ஆரம்பித்துவிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் குளங்களில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வந்த மீனவர்கள். கோவை குளங்களில் கிடைக்கும் ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட சுமார் 7 வகையான மீன்களுக்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் டீசல் படகுகள் விட ஆரம்பித்ததால், படகின் அதிர்வு, அதிலிருந்து வெளியேறும் எண்ணெய், பயங்கர சத்தம் உள்ளிட்ட காரணங்களால் மீன்கள் இறந்து மிதக்க தொடங்கி விட்டதாக கூறுகின்றனர் மீனவர்கள்.

மீன்களின் இனப்பெருக்கக் கூடுகளும் அழிந்துவிட்டன - மீனவர்கள் வேதனை:

படகு சவாரி தொடங்கப்பட்டதை முழுமனதோடு வரவேற்பதாக கூறும் மீனவர்கள் டீசல் படகை மட்டும் தவிர்த்தே ஆக வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஓடும் தண்ணீர் என்றால் கூட எண்ணெய் தேங்காமல் மீன்களுக்கு சிக்கல் ஏற்படாது எனவும், குளத்தில் பல மாதங்களுக்கு தேங்கியிருக்கும் நீரில் டீசல் கலந்துவிட்டால் மீன்களின் இனப்பெருக்கம் மட்டுமின்றி பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். டீசல் படகுகள் காரணமாக மீன்கள் கட்டி வைத்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான கூடுகளும் அழிந்து விடுவதாக கூறுகின்றனர். கிட்டத்தட்ட 350 ஏக்கராக இருந்த உக்கடம் பெரியகுளம், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சுற்றளவை குறைத்துக் குறைத்து தற்போது 250 ஏக்கராக குறைந்துவிட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சிறிய குளம் என்பதால் பாதிப்பு அதிகம்:

“டீசல் படகால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இந்த குளத்து மீனை யாரும் வாங்க மாட்டார்கள். சிறிய குளம் என்பதால் டீசல் கலப்பது ஆபத்தானது. மீன்களின் இனப்பெருக்கமும் கடுமையாக பாதிக்கப்படும்” என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

மனு கொடுத்தும் பயனில்லை - மீனவர்கள்:

தங்கள் பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டதாகவும், ஆனால் டீசல் படகுகளை நிறுத்த அவர்கள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் டீசல் படகுகளின் அதிர்வுகளால் குளத்தின் நடுவே ஆங்காங்கே பறவைகளுக்காக கட்டப்பட்டிருந்த திட்டுகளிலும் தற்போது பறவைகள் வந்து அமர்வது இல்லை எனக் கூறுகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மனு அளித்துள்ளதாகவும் டீசல் படகுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குறுதியை மீறிவிட்டனர் - மீனவர்கள் வருத்தம்:

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடங்கப்பட்ட போதும் படகு சவாரிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கிய போதும் பெடல் மற்றும் துடுப்பு படகுகள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து இருந்ததாகவும் ஆனால் அதற்கு மாற்றாக தற்போது டீசல் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு டீசல் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பிரவீண்குமார், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com