'மாஸ்' நாயகர்களின் நம்பிக்கை படைப்பாளி... 'விஜய் 66' பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி யார்?!

'மாஸ்' நாயகர்களின் நம்பிக்கை படைப்பாளி... 'விஜய் 66' பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி யார்?!
'மாஸ்' நாயகர்களின் நம்பிக்கை படைப்பாளி... 'விஜய் 66' பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி யார்?!
Published on

நடிகர் விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முக்கிய இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவனத்துக்குரிய இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் திரையுலகப் பயணம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

வழக்கமாக நடிகர் விஜய் ஒரு படம் நடித்துகொண்டிருக்கும்போதே அவரின் அடுத்தப் படத்தின் இயக்குநர்கள் யார் என்பது தொடர்பாக ஒரு பெரிய விவாதமே எழும். ஒரு பட்டியலே இயக்குநர்கள் தொடர்பாக வெளியாகும். 'மாஸ்டர்' படத்தின்போதும் விஜய்யின் அடுத்த இயக்குநருக்கு இப்படி ஒரு விவாதம் எழுந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் முதல் பாண்டிராஜ் வரை பல பெயர்கள் சொல்லப்பட்ட நிலையில் கடைசியாக 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அறிவிக்கப்பட்டார். 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் 65-வது படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்போது 66-வது படத்துக்கான நேரம். இந்தமுறையும் பல இயக்குநர்கள் பெயர்கள் சொல்லப்பட்டு, கடைசியாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளியை டிக் செய்துள்ளார் விஜய். படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கின் பிரபல தில் ராஜு. படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.170 கோடிக்கும் அதிகமாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 'கிங்' ஆக இருக்கும் விஜய்க்கு தமிழ் எல்லையைத் தாண்டி ரசிகர்கள் வட்டமும், வணிக வட்டமும் இருக்கிறது. இந்த மாஸ் காரணமாக விஜய்யும் தனது எல்லையை விரிப்படுத்த தொடங்கியுள்ளார். அதனொரு முயற்சிதான் இது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து வம்சி குறித்த பேச்சுக்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளன.

யார் இந்த வம்சி பைடிபள்ளி?

தெலங்கானா பகுதியில் உள்ள பீமரம் தான் வம்சியின் பூர்விகம். பொதுவாக இவரின் குடும்பம் ஓரளவு வசதி கொண்டவர்கள். அந்தப் பகுதியில் ஒரு தியேட்டரை பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவோ என்னவோ சிறுவயதில் இருந்தே வம்சிக்கு திரைப்படங்கள் மீது தனி ஆர்வம். ஆனால், சினிமாவை முதலில் அவரின் தொழிலாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக, ஹைதராபாத்தின் புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், தனது கனவான சினிமா துறைக்குப் பதிலாக சாஃப்ட்வேர் துறையில் ஆரம்பகாலத்தில் கவனத்தை செலுத்தினார்.

சில வருடங்கள் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவருக்கு சினிமா மீதான காதல் அதிகரித்துகொண்டே இருந்தது. இந்த நேரத்தில்தான் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் அண்ணன் திரைத்துறையில் இருப்பது தெரியவருகிறது. அவர்தான் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற எடிட்டர் மார்தாண்ட் கே.வெங்கடேஷ். நண்பன் மூலமாக எடிட்டர் வெங்கடேஷை சந்திக்கிறார். அந்நாளில் வெங்கடேஷ், சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு என பல நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ஜெயந்த்தின் ஆஸ்தான எடிட்டர்.

இதனால் வம்சி வெங்கடேஷிடம் தனது சினிமா ஆசையை கூறி இயக்குநர் ஜெயந்த் உடன் உதவி இயக்குநராக பணிபுரிய உதவி கேட்கிறார். வெங்கடேஷ் உதவ சாஃப்ட்வேர் வேலையை உதறிவிட்டு ஜெயந்த்திடம் உதவி இயக்குநராக இணைகிறார் வம்சி. அவரின் முதல் படமே 'ஈஸ்வர்'. இதே 'ஈஸ்வர்' படம் பிரபாஸுக்கும் முதல் படம். முதல் படம் என்றாலும் செட்டுக்குள் அனைவருக்கும் பரிச்சயமான வலம்வந்திருக்கிறார் வம்சி. குறிப்பாக பிரபாஸுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உருவானது. இந்த நட்பு பின்னாளில் வம்சிக்கு உதவவும் செய்திருக்கிறது. 'ஈஸ்வர்' படத்துக்கு பிறகு 'வர்ஷம்', லாரன்ஸ் இயக்குநராக அறிமுகமான 'மாஸ்', பாலகிருஷ்ணாவுடைய 'பத்ரா' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி கொண்டிருந்தவருக்கு தில் ராஜு நட்பாகிறார்.

அவரிடம் ஏற்கெனவே தனது கதைகளை சொல்லியிருந்திருக்கிறார் வம்சி. ஒருநாள் 'முன்னா' என்கிற கதையை வம்சி இயக்குநராக வைத்து தயாரிக்க முன்வருகிறார் தில் ராஜு. உடனே தனது நண்பர் பிரபாஸை தொடர்புகொள்கிறார் வம்சி. பிரபாஸும் ஓகே சொல்ல இயக்குநராக டோலிவுட்டில் அறிமுகமானார், வம்சி. முதல் படம் 'முன்னா' முதலுக்கு மோசமில்லை என்கிற அளவில் ஓட, ஓரளவுக்கு பெயர் பெற்றார். ஆனால் இரண்டாவது படத்துக்கு இரண்டு வருடங்கள் ஆனது. ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால், சமந்தா என நட்சத்திர பட்டாளங்களுடன் இந்தமுறை களமிறங்கினார். 'பிருந்தாவனம்' என்கிற பெயரில் இந்தமுறை அவர் எடுத்த படம் ஆவரேஜ் இல்லை. மாறாக, மாஸ் ஹிட்.

இந்த ஹிட் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் அவரின் வரவை பதிவு செய்தது. மூன்றாவது படம் 'யவடு'. 1997-ல் வெளியான ஹாலிவுட் படமான ஃபேஸ்/ஆஃப் இன்ஸ்பிரேஷன் காரணமாக ராம் சரண், அல்லு அர்ஜுன் என இரண்டு ஹீரோக்களை வைத்து 'யவடு' படத்தை எடுத்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படமும் மெகா ஹிட். குறிப்பாக, இந்த வெற்றி அல்லு அர்ஜுனுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. 'யவடு' கொடுத்த ஊக்கம் அடுத்தும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டை கையிலெடுத்தார். இந்த முறை இரண்டு ஹீரோவும் தெலுங்கு கிடையாது. தமிழில் இருந்து ஒரு ஹீரோவை தேர்ந்தெடுத்தார். ஆம், நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் தமிழில் 'தோழா', தெலுங்கில் 'ஊப்பிரி' என ஹிட் அடித்த படத்தின் இயக்குநர் வம்சியே.

முதல் நான்கு படங்களை போலவே ஐந்தாவது படமும் ஸ்டார் ஹீரோ மகேஷ் பாபு உடன் இணைந்ததுதான் 2019-ல் வெளியான 'மஹரிஷி'. வம்சி இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்டது. வழக்கம்போல தனக்கே உரித்தான கமர்ஷியல் மசாலாவை மகேஷ் பாபு நடிப்பில் கொஞ்சம் அதிகமாகவே தூவியிருந்தார். மகேஷ் பாபுவுக்கு 25-வது படமாக வெளியாகிய 'மஹரிஷி' சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட பிரிவில் தேசிய விருதை வென்றது. வம்சி இதுவரை இயக்கியது இந்த ஐந்து படங்கள்தான். ஐந்து படங்களே இயக்கியிருந்தாலும் அத்தனையும் தயாரிப்பாளரை, ரசிகர்களை மகிழ்வித்த கமர்ஷியல் படங்கள்.

இதன் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் முக்கிய கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் விஜய் தனது அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வம்சியிடம் கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் உடன் கைகோத்து வரும் விஜய் அந்த வரிசையில் வம்சியை கொண்டுவந்துள்ளார். பிரபாஸ் தொடங்கி மகேஷ் பாபு வரை அனைத்து ஹீரோக்களையும் வைத்து மேஜிக் செய்த வம்சி, விஜய்யை வைத்தும் நிச்சயம் மிகப்பெரிய படத்தை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com