நேற்று மாலை முதல் சமூக வலைதளங்கள், செய்தி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை நேற்று முதல் ட்ரெண்ட்டிங். பொதுவாக படம் தொடர்பான சர்ச்சைகள், படத்தின் வெற்றி தோல்வி பேச்சுகள், படத்திற்கான விளம்பரங்கள் என எந்த ஒரு விஷயத்துக்கும் வாய் திறக்காத அஜித், தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதாக தெரிந்த கணமே அறிக்கை விட்டு பலரின் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்தின் சின்ன சின்ன செயல்களையே ட்ரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள் அறிக்கை வெளியானதையும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர். அஜித்தின் அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே மீம்களும் பறக்க தொடங்கின. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை குறிப்பிட்டு, 'உங்களுக்கான தலயின் பதில்' என ரசிகர்கள் பதில் தெரிவித்தனர். ஆனால் அஜித் வெளியிட்ட இந்த அறிக்கை அரசியல் கட்சிகளுக்கான பதில் மட்டும் இல்லை. அறிக்கையின் 2 வரிகள் மூலம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேண்டுகோளையும், தனது ஆதங்கத்தையும் சேர்த்தே அனுப்பி இருக்கிறார் அஜித்குமார். அது, ''சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை , விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை . நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை'' என்பது தான்.
நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருப்பது சமீக காலமாக அதிகரித்து வருகிறது. இவரது ரசிகர்கள் தான் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத அளவுக்கு சமூக வலைதள வார்த்தை போரில் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஈடுபடுகின்றனர். கிண்டல் பதிவுகள் என்பதை தாண்டி முகம் சுழிக்கும் ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வது. வெறும் பதிவுகள், மீம்கள் என்பதை தாண்டி மற்றவர்களை கிண்டல் செய்து வீடியோ வெளியிடுவது, நடிகர்களின் குடும்பத்தினர், சொந்த விஷயங்களை கிண்டல் செய்யும் மனநிலை என்பதும் இன்று பூதகரமாகி வருகிறது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் யாருமே இந்த மாதிரியான செயல்பாடுகளை விரும்பாதவர்கள் என்பது தான் உண்மை நிலை.
அண்மையில் விஸ்வாசம் திரைப்படத்தின் வெளியீட்டின் போது தியேட்டரில் நடந்த தகராறுகள், படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நடந்த வார்த்தை போர்கள் என அனைத்தையும் கவனித்து வந்த நடிகர் அஜித்துகுமார் அந்த நடவடிக்கைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் அறிக்கை வெளியீட்டை கிண்டல் செய்தும் மீம்களும், பல பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவின. அப்படி பரப்பியவர்கள் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் அவர்கள் ரசிக்கும் நடிகர்களின் நிலைப்பாடும் அஜித்தின் நிலைப்பாடேதான். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை எந்த நடிகருமே ஆதரிப்பதில்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.
அவரவர்களுக்கு பிடித்தமான நடிகர்களை கொண்டாடுவது ஒரு மனநிலை. அதில் என்றுமே தவறில்லை. ஆனால் ஒருவரை கொண்டாட வேண்டுமென்றால் மற்றவரை தாழ்த்த வேண்டும் என்ற மனநிலை தான் தேவையற்றது, ஆபத்தானது என்பதை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அஜித் வெளியிட்ட அறிக்கையின் பெரும்பகுதி அரசியல் கட்சிகளுக்கான பதிலாக இருக்கலாம் ஆனால் அந்த இரண்டு வரி அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களுக்குமானது. ஏனென்றால் அது அஜித்தின் கருத்தாக மட்டும் இருக்காது. அனைத்து நடிகர்களின் கருத்தும் அதே தான்.
''சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை யாருமே ஆதரிப்பதில்லை . நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை''
தாங்கள் ரசிக்கும் நடிகர்களின் சின்ன சின்ன வேண்டுகோளையும், அவர்களது அசைவுகளையும் கொண்டாடும் ரசிகர்கள் இந்த கருத்தையும் ஆதரிக்க வேண்டும். அனைத்து நடிகர்களும் தங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்க்கும் உண்மையான அன்பும் இது தான்.