சீனாவில் 3வது முறையாக அதிபராகி இருக்கும் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமானவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் 3வது முறையாக ஷி-ஜின்பிங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து சீன நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 14வது தேசிய மக்கள் மாநாட்டில், 2,952 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் சீன அதிபராக ஷி ஜின்பிங்கை தேர்வு செய்தனர். மேலும் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஷி ஜின்பிங் பொறுப்பேற்றார். ஷி ஜின்பிங்கிற்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு, மூன்றாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் ஒரே தலைவர் என்ற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளார்.
இவர் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக தொடர்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஷி ஜின்பிங்கின் நீண்டகால கூட்டாளியான லி கியாங், நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பொருளாதார ரீதியாக முக்கியமான பகுதிகளை வழிநடத்திய லி கியாங்கின் அனுபவமானது, வணிக-நட்பு கொள்கைகளை ஊக்குவிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சீனாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக புதிய தலைவர்களாக உருவெடுத்துள்ள பலரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ஆதரவாளர்கள் எனச் சொல்லப்படுகிறது. அத்தகைய சீன உயர்பதவிகள் வகிக்கவிருப்போரின் பட்டியலை கீழே காண்போம்.
டிங் க்ஸூசியாங், எக்ஸிகியூட்டிவ் வைஸ் பிரீமியர் (Ding Xuexiang, Excecutive Vice Premier):
சீனாவின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் எக்ஸிகியூட்டிவ் வைஸ் பிரீமியர் ஆவார். இவர் சீன அதிபர் மற்றும் பிரதமருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றக் கூடியவர். இந்த பதவிக்கு தற்போது டிங் க்ஸூசியாங் (Ding Xuexiang) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதிபர் ஷி ஜின்பிங்கின் ஊழியர்களின் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். இந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிர்வாக துணைப் பிரதமர் ஹான் ஜெங் (Han Zheng), ஷாங்காய் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர். இவர் ஷாங்காய் நகரத்தை காஸ்மோபாலிட்டன் நிதி மூலதனமாக மாற்ற வழிகாட்டியவர்.
ஆனால், இதற்கு நேர்மாறாக, டிங் ஒருபோதும் ஒரு மாகாணத்தைக்கூட வழிநடத்தவில்லை. பெரும்பாலும் திரைக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப வல்லுநராகவே பணியாற்றியுள்ளார். இவர் சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலக இயக்குநராக இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இது ஒரு ரகசிய அமைப்பாகும். இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தால் செல்வாக்கு பெற்றுள்ளது. மேலும் டிங் தற்போதைய சீன அதிபருடன் அடிக்கடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பயணம் செய்துள்ளார். தற்போதைய நிர்வாக துணைப் பிரதமரான ஹான், சீனாவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஜாவோ லெஜி, தேசிய மக்கள் காங்கிரஸ் (நாடாளுமன்றத்) தலைவர் (Zhao Leji, Head of the National People's Congress):
கடந்த இலையுதிர் காலத்தில் கட்சிப் படிநிலைகளில் நம்பர் 3 என்று பெயரிடப்பட்ட ஜாவோ லெஜி (Zhao Leji), தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். சட்டங்களை இயற்றவும், அரசியலமைப்பை திருத்தவும் நாடாளுமன்றத்திற்கு பெயரளவில் அதிகாரம் உள்ளது. உண்மையில் முடிவுகள் கட்சியின் உயர் அதிகாரிகளாலேயே எடுக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் ஜாவோவின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன என்றே கூறலாம்.
உத்தியோகப்பூர்வ ஊழல் மற்றும் விசுவாசமின்மைக்கு எதிரான சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பரப்புரையை செயல்படுத்தும் பொறுப்பில், கட்சியின் ஒழுங்குமுறை ஆய்வுக் குழுவை ஜாவோ வழிநடத்தினார். அந்த பரப்புரை ஷி ஜின்பிங்கின் அதிகாரத்தை உறுதிப்படுத்தி போட்டியாளர்களை அகற்றிட முக்கியமானதாக இருந்தது. 2017-ம் ஆண்டு ஒழுங்காற்றுப் பொறுப்பை ஏற்கும் முன், கட்சியின் உள்விவகாரங்கள் ஜாவோவுக்கு நிறைய அனுபவத்தை அளித்தது. கட்சிப் பணியாளர் பிரச்சினைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியாக ஜாவோ திகழ்ந்தார்.
வாங் ஹுனிங், நாடாளுமன்ற அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் (Wang Huning, Head of parliament's political advisory body):
வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டம் கூடும் அதேநாளில், சீன அரசின் அரசியல் ஆலோசனைக் குழுவாகச் செயல்படும் மற்றொரு குழுவும் பெய்ஜிங்கில் கூடுகிறது. இந்தக் குழு “சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு” என அழைக்கப்படுகிறது. இது கட்சியின் நிகழ்ச்சி நிரலை ஆதரிக்க, சீனச் சமூகம் முழுவதும் வளங்களையும், கட்சி சார்பற்ற உறுப்பினர்களையும் திரட்டுகிறது. அத்தகைய குழுவானது இனி நம்பர் 4 கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரியான வாங் ஹுனிங் (Wang Huning) தலைமையில் செயல்படும்.
அதன்படி வாங், அரசியல் மற்றும் சமூக கொள்கை பரிந்துரைகளை வெளிப்படையாக வழங்கும் சுமார் 2,000 பிரதிநிதிகளை மேற்பார்வையிடுவார். கட்சியின் முக்கிய சித்தாந்தவாதியாக வாங் அறியப்படுகிறார். இவர் முக்கிய தலைவர்களுக்கு பரப்புரையை உருவாக்குதல், பேச்சுக்கள் மற்றும் கொள்கைகளை எழுதுதல் உள்ளிட்ட சேவைகளை செய்துள்ளார். இவர் "சீனக் கனவு" எனும் அதிபர் ஷி ஜின்பிங்கின் பொன்மொழியை வடிவமைக்க உதவினார். ஷி ஜின்பிங்கின் அரசியல் எழுச்சியானது, கட்சியின் கடுமையான, மேற்கத்திய எதிர்ப்புக் கொள்கைகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.
ஹீ லைஃபெங், துணை பிரதமர் (He Lifeng, Vice premier):
சீனாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் புதிய பிரதமருடன் இணைந்து, சீன அதிபரின் மற்றொரு நம்பகமான முன்னாள் உதவியாளரான ஹீ லைஃபெங் (He Lifeng) பணியாற்றவுள்ளார். இவர் பொருளாதார மற்றும் தொழில்துறைக் கொள்கைகளை மேற்பார்வையிடும் துணைப் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டார். அப்போது சீனாவின் ஐந்தாண்டு திட்டங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பெரிய முதலீட்டு திட்டங்கள் வரைவதை மேற்பார்வையிட்டார். ஹீ லைஃபெங், ஹார்வர்டில் படித்த பொருளாதார நிபுணர் ஆவார். மேலும் வாஷிங்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கி உள்ளார்.
தெற்கு புஜியான் மாகாணத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்ததுடன், டியான்ஜின் நகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் பொருளாதார வளர்ச்சி சித்தாந்தத்திற்கு அடுத்ததாக, “பாதுகாப்பு சார்ந்த அரசை வழிநடத்தும் சமூகம்” என்ற சீன அதிபதிரின் பார்வையை நிறைவேற்ற முக்கியமானவராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பல உலக நாடுகளுடன் எல்லை விவகாரங்களில் சீனா மோதல் போக்கையே கடைப்பிடித்துள்ளது. உதாரணத்துக்கு இந்தியாவுடனான கல்வான் பள்ளத்தாக்கு மோதல், அருணாச்சல பிரதேசம் விவகாரம் உள்ளிட்டவற்றை கூறலாம்.
இந்நிலையில் மேற்கண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமானவர்களே முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளிடையே மோதலை மேலும் வலுவடையச் செய்ய வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே அமெரிக்க நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடை, தைவானுடன் போர் சூழும் அபாயம், கோவிட் கட்டுப்பாடுகளால் நலிந்துவரும் பொருளாதாரம் ஆகியவற்றை எதிர்கொண்டு, சீனா எவ்வாறு தனது பொருளாதாரத்தை அதிகரித்து ஸ்திரத்தன்மையுடன் திகழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.